Sunday, December 22, 2024
Critics

3 ஆண்டு ஆட்சி: தி.மு.க., சாதித்ததா… சறுக்கியதா?

கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த அதிமுக, ஜெயலலிதா என்னும் பெரும் தலைமையை இழந்து தடுமாறியும் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியைத் தக்கவைத்தது. 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத திமுக தன் நீண்ட நாள் தலைவரான கருணாநிதியை இழந்தது. இப்படி இரு பெரும் திராவிடக் கட்சிகளும் தங்களது அசைக்க முடியாத பெருந் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி இருவரையும் இழந்து 2021-ல் தேர்தலைச் சந்தித்தன.

பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகளுடன் ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது. காங்., மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோர்த்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது ஸ்டாலின் தலைமையிலான திமுக.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 159 இடங்களைப் பெற்று, திமுக கூட்டணி 2021 மே 7-ல் ஆட்சியமைத்தது. திமுக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
மூன்றாண்டு ஆட்சியில் முக்கியமான துறைகளில் திமுகவின் பிளஸ், மைனஸ் என்ன… உண்மையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக சாதித்துள்ளதா சறுக்கியதா… சுருக்கமாகக் காணலாம்.

சமூகநலத்துறை… சமநிலை!
பெண்களுக்கு இலவசப் பேருந்து; உயர்கல்வி பயிலும் பெண்கள், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000; முக்கிய நகரங்களில் பணிக்குச் செல்லும் பெண்கள் தங்குவதற்குத் தோழி விடுதிகள் திறந்தது போன்ற திட்டங்கள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஆனால், அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்காதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அமைச்சர் பொன்முடி இலவசப் பேருந்தில் செல்லும் பெண்களை ‘ஓசி’யில் செல்வதாகக் கூறியது பெரும் சர்ச்சைக்கு வழி வகுத்ததோடு திமுகவினர் மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

நிதித்துறை… பெரும் நெருக்கடி!
கொரோனா பெருந்தொற்று போன்றவற்றின் தாக்கத்தால் திமுக ஆட்சிக்கு வந்தது தொடங்கி நிதி நெருக்கடி இருந்து வருகிறது. அதனால், அரசுப் பணிகளில் நிரந்தரப் பணியாளர்களை நிரப்பாமல், ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.
குறிப்பாக, ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என, அடிப்படையான பல வேலைகளில் ஒப்பந்தப் பணியாளர்களே நீடிக்கின்றனர். அதேபோல், பணியாளர்கள் ஆள் சேர்ப்பும் திறம்படச் செய்யப்படாததால் விமர்சனத்துக்கு உள்ளானது.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இடைநிலை ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யாதது; அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது; சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல் டீசல் விலைக்குறைப்பு போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கும் நிதிநெருக்கடியை திமுக காரணம் காட்டியது. ஆனால், இவையெல்லாம் திமுக ஆட்சியின் மீது அதிருப்தி அலைகளை வீசிச் செய்துள்ளது.

சுகாதாரத் துறை… சுணக்கம்!
திமுக அறிமுகம் செய்த ‘மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம்’ போன்ற திட்டங்கள் முக்கியத் திட்டங்களாகப் பார்க்கப்படுகின்றன.
மருத்துவத் துறைக்கு மிக நெருக்கமாக இருந்த ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது திமுக. ஆனால், அதை இன்று வரை நிறைவேற்றவில்லை.
ஆரம்பச் சுகாதாரத்துறையில் மருந்துத் தட்டுப்பாடு அவ்வப்போது பெரும் பிரச்சினையாக உருவெடுக்கிறது.
அதேபோல், தவறான சிகிச்சையால் சென்னையில் 17 வயது கால்பந்து வீராங்கனை மரணமடைந்தார்; ஒன்றரை வயதுக் குழந்தைக்குக் கை அகற்றப்பட்டு, பின் மரணமடைந்தது இவை எல்லாம் தமிழகச் சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் மீது பல கேள்விகள் எழுப்பியுள்ளன.

பள்ளிக்கல்வி துறைக்கு… பாதி மார்க்!
திமுக கொண்டுவந்த காலை உணவுத் திட்ட முக்கியமான திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இருந்தும் பல சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாத துறையாகவே பள்ளிக்கல்வித் துறை இருந்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் 2022-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 44 ஆயிரம் மாணவர்கள் எழுத வராதது சர்ச்சையானது.
அதேபோல், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில கல்விக் கொள்கை உருவாக்கத் திட்டக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் உறுப்பினரான இருந்த ஜவஹர் நேசன் அதிருப்திகளை வெளிப்படுத்தி வெளியேறினார்.
அதேபோல் தேசியக் கல்விக் கொள்கைத் திணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார் ஆசிரியை உமா மகேஷ்வரி. அவர் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். பின், சமூக வலைத்தளங்களில் எழுந்த கண்டனங்களால் ஏற்பட்ட அழுத்தம் அவருக்கு மீண்டும் பணியைப் பெற்றுத் தந்தது.
கடந்த 2023-ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 250-க்கும் அதிகமான தமிழக மாணவர்கள் பங்கேற்காத நிலை ஏற்பட்டதும் விமர்சனத்துக்குள்ளானது.
கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானது. அதற்குத் துறை அமைச்சரின் பொறுப்பின்மையே காரணம் எனவும் விமர்சிக்கப்பட்டது.

தொழில்துறை… தொல்லை!
தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக உயர்த்தப் பல முன்னெடுப்புகளைத் திமுக செய்தது. குறிப்பாக, முதலீட்டாளர்களை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் துபாய், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில், ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது மிகப்பெரும் வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
மின்கட்டண உயர்வு சிறு, குறு தொழில் நிறுவனங்களை முடக்கியது. நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுத் தடுமாறி வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, பின்னலாடை, ஜவுளி துறையினர் பெரும் பாதிப்பைச் சந்தித்தனர்.

வேளாண், விளையாட்டில்… வெற்றி!
விவசாயத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், வேளாண் துறைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முதலாகத் தாக்கல் செய்தது திமுக. பல விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம், சிறு தானிய உற்பத்திக்கு என, பல நடவடிக்கைகளை வேளாண் துறையில் செய்து வருகிறது.
இருப்பினும், வேளாண் மற்றும் நீர் நிலைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்து நில ஒருங்கிணைப்புச் சட்டத்தைத் திமுக அரசு கொண்டுவந்தது. காவிரி, முல்லை பெரியாறு உரிமைகளை மீட்டெடுக்காதது என விவசாயிகள் மத்தியில் திமுக மீது அதிருப்தியும் நிலவுகிறது.

விளையாட்டுத் துறை நடத்திய நிகழ்ச்சிகளில் முக்கியமானதாக ‘செஸ் ஒலிம்பியாட்’ நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது. அதில் பங்கேற்ற வெளி நாட்டினர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பைப் பாராட்டினர். அதேபோல் கேலோ இந்தியா போட்டி சென்னையில் நடத்தப்பட்டது. உள்ளூர் அளவிலும் முதல்வர் கோப்பை என முதல்முறையாகப் பட்ஜெட்டிலும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இவையனைத்தும் அமைச்சர் உதயநிதிக்கான முக்கியத் துவத்தை உணர்த்த மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது.

இதனைக் கடந்து முக்கியமான பிரச்சினைகளைக் கிளப்பிய சம்பவங்களும்… அரசின் தடுமாற்றங்களும்!

சாதிவெறியில் சமரசம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டில் மலம் கலக்கப்பட்டது. ஆனால், அது தொடர்பான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையானது. நாங்குநேரியில் 10-ம் வகுப்பு மாணவன் சாதிய வெறியாட்டத்தால் சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். பல சாதிய ஆணவக் கொலைகள் கடந்த 3 ஆண்டுகளில் அரங்கேறியுள்ளன.
கோவிலுக்குள் நுழைந்த பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரை திமுக நிர்வாகி தாக்கிய வீடியோ வைரலானது. அவரை இடைநீக்கம் செய்த திமுக, ஓரிரு வாரங்களில் மீண்டும் கட்சியில் இணைத்தது திமுக.
வீட்டில் பணிபுரிந்த பட்டியலினத்தைச் சேர்ந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளும் கைது செய்யப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் திமுகவின் நிலைப்பாடு பெரும் சறுக்கலாகப் பார்க்கப்பட்டது.
அதேபோல், கடந்த வாரத்தில் சேலம் தீவட்டிப்பட்டியில் நடந்த சாதிய மோதலில், பாதிக்கப்பட்டவர்களைக் காக்காமல் குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றுவதாக வாக்குறுதி அளித்தது திமுக. ஆனால், மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தும் தனிச்சட்டம் இயற்றவில்லை என்பது சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
அதேபோல் ஏ.எஸ்.பி.,யாகப் பணியாற்றிய பல்வீர் சிங் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப்பிடுங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது சஸ்பெண்டை தமிழக அரசு ரத்து செய்ததும் சர்ச்சைக்குள்ளானது.

போதை விவகாரம்
இளம் வயதினருக்கு எளிமையாகப் போதைப் பொருள் கிடைக்கும் அவலம் தமிழகத்தில் தொடர்வதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போதைப் பொருள் கடத்தலில் முக்கியக் குற்றவாளியாகத் திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் சிக்கியிருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழை பாதிப்பு
வடிகால் பணிகளை 100% முடித்திருப்பதாகவும் முக்கியமான நகரங்களில் தண்ணீர் தேங்காது எனவும் கூறியது திமுக அரசு. ஆனால், அதிகளவு பெய்த மழையால் பல இடங்களில் நீர் வடியாமல் தலைநகரம் தத்தளித்ததும் விமர்சனமானது. குறிப்பாக, மக்கள் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து பார்க்கவில்லை; நலத்திட்டங்கள் வந்து சேரவில்லை என்னும் குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைத்தனர். ஆனால், குறுகிய காலத்தில் பெய்த அதீத மழைதான் பாதிப்புக்கு காரணம் என அரசு தரப்பில் சொல்லப்பட்டது.
அதேபோல், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களும் மழையால் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. பல இடங்களுக்கு அரசின் நிவாரணங்கள் சென்றடையாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆக வடிகால் பணிகளில் திமுக முழுமையாக தன் ஆற்றலை வெளிப்படுத்தவில்லை என்று கடுமயைாக விமர்சிக்கப்பட்டது.

எதிர்க்கட்சியாக ஒரு பேச்சு!
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பல திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. ஆனால், ஆளுங்கட்சி ஆன பிறகு அந்த விவகாரங்களில் கள்ள மௌனத்துடன் இருப்பதாகவும், இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

  • குறிப்பாக, எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்த திமுக ஆளுங்கட்சியான பின் அதை அமல்படுத்த முயன்றது.
  • முதல் கொரோனா அலையில் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் இரண்டாவது கொரோனா அலையின்போது டாஸ்மாக் கடைகளைத் திறந்தது.
  • உயர்கல்வியில் அனைத்துக் கல்லூரி, பல்கலைகளிலும் பொதுப் பாடத்திட்டத்தை உயர்கல்வித் துறை அமல்படுத்தியது சர்ச்சையானது. இதில் மத்திய அரசின் கல்விக் கொள்கை சாயல் இருப்பதாகக் குற்றச்சாட்டுகளை கல்வியாளர்களால் முன்வைத்தனர்.
  • நகர ஊரமைப்பு துறை சட்டத்தில் பொது ஒதுக்கீட்டு இடம் என்ற கருத்துரு உருவாக்கப்பட்டதே நகரங்களில் பசுமை நீடிக்கத்தான்.
  • 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் கொண்டு வரப்பட்டன. அதில், நகர ஊரமைப்புத் துறைச் சட்டத்தில் பொது ஒதுக்கீட்டு இடம் குறித்த வரைவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, ‘3,000 ச.மீ.,க்கு உட்பட்ட லே-அவுட்களுக்கு திறந்தவெளி இடம் ஒதுக்க வேண்டியதில்லை. 3,000 மேல் 10,000 ச.மீ., வரையுள்ள லே-அவுட்களில் 10% இடம் ஒதுக்க வேண்டும். இடம் ஒதுக்கவில்லை என்றால் அதற்குரிய வழிகாட்டி மதிப்பை அரசுக்குச் செலுத்தினால் போதும்’ எனத் திருத்தம் செய்யப்பட்டது. ‘நகரில் பசுமைப் பரப்பு குறையும்’ எனக்கூறி திமுக எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் பொது ஒதுக்கீட்டு இட விவகாரத்தில் திமுக கள்ள மௌனத்துடன் இருப்பதாகச் சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
    இப்படியாக, முக்கியமான பல விவகாரங்களில் திமுகவின் இரட்டை நிலைப்பாடு கடந்த மூன்று ஆண்டுகளில் விமர்சனத்துக்கு உள்ளானது.

திமுகவின் மூன்றாண்டு ஆட்சியும் பிளஸ், மைனஸ்கள் கலந்துதான் நகர்ந்திருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளே மீதமிருக்கின்றன. சறுக்கல்களைக் களைந்து சாதனைப் படிகளைத் திமுக அதிகரிக்குமா… தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *