3000 பாலியல் வீடியோக்கள்!முன்னாள் பிரதமர் மகன், பேரன் சிக்கியது எப்படி?
கர்நாடகத்தில் ஹாசன் தொகுதி எம்பியாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. இம்முறை பாஜக கூட்டணியில் இதே தொகுதியில் களமிறங்கினார். கடந்த 26-ம் தேதி இந்தத் தொகுதிக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், இவர் பெண்களுக்குப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சிக்கியது எப்படி? இது தேர்தலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?
யார் இந்த பிரஜ்வல் ரேவண்ணா?
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகன் தான் பிரஜ்வல் ரேவண்ணா. இவரின் தந்தை ரேவண்ணா தேவகவுடாவின் மூத்த மகன். கடந்த 2019-ம் ஆண்டு ஹாசன் தொகுதி போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இம்முறை மீண்டும் அந்தத் தொகுதியில் களமிறங்கினார். இதற்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , பிரஜ்வல் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியானது.
கர்நாடக காவல்துறையின் வெளியிட்ட தகவல்படி, ஒரு பென் டிரைவில் 2,976 வீடியோக்கள் இருந்தன. முதற்கட்ட விசாரணையில் பெரும்பாலான வீடியோக்கள் 2019-க்குப் பிறகு பெங்களூரு மற்றும் ஹாசனில் உள்ள அவரது வீட்டிலுள்ள ஸ்டோர்ரூமில் இருந்த மொபைல் போனில் இருந்து எடுக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. சில பென் டிரைவ்களை தடயவியல் ஆய்வுக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 48 வயது பெண் ஒருவர் நேற்று போலீஸில் புகார் அளித்து அதிர்ச்சிகரமான தகவலையும் பகிர்ந்தார். அதில், ‘‘எம்எல்ஏ ரேவண்ணாவின் மனைவி பவானி எனக்கு நெருங்கிய உறவினர். அவர் மூலமாக 2019-ல் இருந்து 5 ஆண்டுகள் ரேவண்ணாவின் வீட்டில் நான் வேலை செய்தேன். அந்த காலக்கட்டத்தில் ரேவண்ணாவும், அவரது மகன் பிரஜ்வலும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். பிரஜ்வல் என் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்” என்னும் அதிர்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இதனடிப்படையில், ஹாசன் பகுதி போலீஸார் ரேவண்ணா, பிரஜ்வல் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 354ஏ, 354டி, 506, 509 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.வழக்கு பதிவு செய்தனர். மேலும், சிலர் ஆன்லைன் மூலமாக போலீஸாருக்கு புகார் அளித்ததால், இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், பிரஜ்வல் ஜெர்மனிக்குத் தப்பியோடி விட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதனை தேவகவுடா குடும்பம் மறுத்துள்ளது. விசாரணையை எதிர்க்கொள்வோம் எனவும் கூறியுள்ளது. இதுகுறித்து ரேவண்ணா கூறும்போது, ‘‘இதைச் சட்டப்படி எதிர்கொள்வேன். என் மகன் தொடர்பான வீடியோ எல்லாம் பழையவை. அவரை அரசியலில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதற்காக மார்ஃபிங் செய்யப்பட்டவை” என்றார்.
இதுகுறித்து மஜத மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து தீர்ப்பு வெளியாகட்டும். அதற்குள் யாரும் தீர்ப்பு எழுதக் கூடாது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் பெண்களை மரியாதையுடன் நடத்தக்கூடியவர்கள்”என்றார்.
ஆனால், இதற்கு மதசார்பற்ற ஜனதா கட்சிக்குள் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரேவண்ணா அவரது மகனைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனப் போர் கொடி தூக்கியுள்ளனர்.
சிக்கலாகும் பாஜக கூட்டணி நிலை!
கர்நாடகவில் பாஜக, மதசார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது. கூட்டணி அறிவிப்பு வெளியான பின்னர் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவருக்கு பாஜக கூட்டணியில் சீட் கொடுக்கக் கூடாது எனப் பாஜக கட்சியைச் சேர்ந்த தேவராஜ் கவுடா கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் ‘‘பிரஜ்வல் தொடர்புடைய 2,976 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் எனக்கு கிடைத்துள்ளது. அதில் பல அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அவருக்கு பாஜக கூட்டணியில் சீட் கொடுக்ககூடாது’ எனக் குறிப்பிட்டுள்ளார். இது கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனவே, இது பாஜக கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த விவகாரத்தில் மதசார்பற்ற ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் பாஜக மௌனம் காக்கிறது. இது தொடர்பாக மோடி, அமித்ஷா நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்னும் கேள்வியை எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ பாஜகவின் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. நாங்கள் பெண்கள் பக்கம் நிற்கிறோம். காங்கிரஸ் அரசுதான் கர்நாடகத்தில் இருக்கிறது. அவர்கள் தற்போது வரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?. எனவே, பிரியங்கா காந்தி அவரின் கட்சியைத்தான் நடவடிக்கை எடுக்க சொல்ல வேண்டும். இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதசார்பற்ற ஜனதா தள கட்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.
ஆனால், கர்நாடகப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என காங்கிரஸர் மற்றும் மகளிர் அமைப்பினர் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது ஒட்டுமொத்த கர்நாடகத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மகளிர் ஆணையமும் பிரஜ்வாலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என கர்நாடக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.
வரும் மே 7-ம் தேதி கர்நாடகத்தில் அடுத்தகட்ட தேர்தல் நடக்கும் நிலையில் பாலியல் குற்றச்சாட்டு பிரச்சனை பாஜக கூட்டணிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.