ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஆருத்ரா நிறுவன பெயர் அடிபடுவது ஏன்?
தமிழகத்தின் தலைநகர் சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது நாட்டையே உலுக்கியுள்ளது. ஆருத்ரா மோசடியில் பாதிக்கப்பட்டோர் பக்கம் ஆம்ஸ்ட்ராங் நின்றதால் தான் கொலை செய்யப்பட்டாரா… காரணம் என்ன?
யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?
சென்னைப் பெரம்பூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங், 54, ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்தார். ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களின் படிப்புக்குப் பொருளாதார ரீதியில் உதவி வந்துள்ளார். குறிப்பாக, அப்பரிவு இளைஞர்களைச் சட்டக் கல்வி பயில அதிகம் உதவியிருக்கிறார். இதனால், பட்டியலின இளைஞர்கள் அவரை ‘அண்ணன் ஆம்ஸ்ட்ராங்’ என, அழைக்கின்றனர்.
பட்டியலின மக்களுக்கான பிரச்சினைகளைக் கையாள்வது, அவர்களுக்கு சட்டப்படி நீதி பெற்றுத்தருவது, பாதிக்கப்பட்டோருக்காக வழக்கு நடத்துவது போன்றவற்றை செயல்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளார்.
2000ம் ஆண்டில் தீவிர அரசியலில் களமாடத் துவங்கிய ஆம்ஸ்ட்ராங், பெளத்த மதம் மீதும், அம்பேத்கர் மீதும் அதிக பற்றுக்கொண்டவராக இருந்தார். ஆம்ஸ்ட்ராங் 2006ல், டாக்டர் பீமாராவ் தலித் அசோஷியேசன் என்ற அமைப்பை துவங்கி தலித் மக்களுக்காகத் தீவிரமாகச் செயல்பட்டத் துவங்கினார். அதன்பின், சென்னை மாநகராட்சியின் 99வது வார்டில் போட்டியிட்டு வென்று மாமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
2007ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தவர், அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பொறுப்பிற்கு வளர்ந்து வந்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் தீவிர ஆதரவைப் பெற்றதால் தொடர்ந்து, 17 ஆண்டுகளாக மாநிலத் தலைவர் பதவியில் நீடித்தார்.
விளிம்பு நிலை மக்களுக்கான குரலாக ஒலித்த ஆம்ஸ்ட்ராங், நேற்று ரவுடிகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் அருகிலேயே படுகொலை!
சென்னை அடுத்த பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோவில் அருகே, ஆம்ஸ்ட்ராங் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதியதாக வீடு கட்டி வருகிறார். நேற்று (ஜூலை 5) இரவு, 7 மணியளவில் வழக்கம் போல கட்டுமானப் பணிகளைப் பார்வையிட, தனது ஆதரவாளர்கள் வீரமணி, பாலாஜியுடன் சென்றுள்ளார்.
அப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், திடீரென ஆம்ஸ்ட்ராங்கை அரிவாள்கள் மற்றும் கத்தியில் சரமாரியாக வெட்டியுள்ளனர். திடீர்த் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தப்பியோட முயன்ற ஆம்ஸ்ட்ராங்கை, அக்கும்பல், தலை, கழுத்து, வயிறு என பல இடங்களில், 30 முறைக்கு மேல் வெட்டிப் படுகொலை செய்துள்ளது. அக்கும்பலைத் தடுக்க முயன்ற ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் இருவரையும் அக்கும்பல் தாக்கியுள்ளது.
ரத்த வெள்ளத்தில் கிடந்து துடித்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அப்பகுதி மக்கள், சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து, இரவே மருத்துவமனைக்கு முன்பு திரண்ட அவரது ஆதரவாளர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். ‘குற்றவாளிகளைக் கைது செய்வோம்’ என போலீஸார் சமரசம் பேசியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிட்டப்பட்டுள்ளது.
உளவுத்துறை 4 முறை எச்சரிக்கை
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படுவார் என உளவுத்துறை 4 முறை எச்சரித்தும் உள்ளூர் போலீஸார் அவருக்கு முறையான பாதுகாப்பு கொடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இன்று காலை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு முன்பு, 300க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்துள்ளது.
ஒரு தேசியக்கட்சியின் மாநிலத்தலைவராக உள்ள ஆம்ஸ்ட்ராங், மாநிலத்தலைநகரில் வைத்து ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அரசியல் களத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் அரசியல் தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு இரங்கலையும், சட்டம் ஒழுங்கை காக்கத்தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் வருகின்றனர்.
கொலைக்கான காரணம் என்ன?
குற்றவாளிகளைக் கைது செய்ய போலீஸார் 10 தனிப்படைகள் அமைத்த நிலையில், நேற்று இரவு, 11 மணிக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, அண்ணா நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர். இக்கும்பலில் சென்னையின் பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு சரணடைந்துள்ளார். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ் மீது, ஏழு கொலை வழக்குகள், சென்னை நகரில் கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி, கொள்ளை என, 70க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதுமட்டுமின்றி, ஆருத்ரா நகை மோசடி கும்பலுக்கு ஆதரவாகவும் சுரேஷ் இயங்கியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆற்காடு சுரேஷ் ஆருத்ரா நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங் ஆருத்ரா நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆதரவாகச் செயல்பட்டு பணத்தை மீட்டுக்கொடுத்துள்ளார்.
கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் வைத்து ஆற்காடு சுரேஷ் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, அவருடன் இருந்த சுரேஷின் நண்பரான மாதவனையும் அக்கும்பல் வெட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று உயிர் தப்பியுள்ளார். இவ்வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த மாதவனை கடந்த ஜனவரி மாதம் சென்னையில் வைத்து மர்ம கும்பல் கொலை செய்தது.
பிறந்தநாள் பரிசாகக் கொலை!
ஆற்காடு சுரேஷ், ரூ.2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு ஆதரவாகவும், மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆம்ஸ்ட்ராங் இருந்ததால், இருவருக்கும் முன்விரோதம் இருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இப்படியான நிலையில், ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கைச் கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகள் வாக்குமூலம்!
நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், ‘ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் இதர குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தினோம். அப்போது, ஆற்காடு சுரேஷின் கொலையில் ஆம்ஸ்ட்ராங் சம்பந்தப்பட்டுள்ளதாக சுரேஷின் தம்பி வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அண்ணன் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க, ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளான ஜூலை 6ம் தேதி ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
அரசுக்குக் கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்கள், ‘தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, ஒரு தேசியக்கட்சியின் மாநிலத்தலைவருக்கே பாதுகாப்பு இல்லை’ என்று கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
உறக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்!
நேற்று இரவு நடந்த கொலைச்சம்பவம் தேசிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், இரவு முழுதும் இச்சம்பவம் குறித்து வாய்திறக்காமல், உறங்கி இன்று காலை எழுந்த முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் சாவகாசமாக வெளியிட்ட பதிவு மேலும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து இரங்கலை தெரிவித்த அந்தப்பதிவில், ‘‘ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இரவோடு இரவாக கைது செய்துள்ளது,’’ எனப்பதிவிட்டுள்ளார். கொலைக்குற்றவாளிகள் ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்ததோடு அல்லாமல் அதைக் கொண்டாடிவிட்டு, மிகச் சாதாரணமாக நடந்து சென்று அண்ணாநகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களாக முன்வந்து சரணடைந்த நிலையில் முதல்வர், ஏதோ போலீஸார் தேடிச்சென்று குற்றவாளிகளைக் கைது செய்ததாகப் பதிவிட்டுள்ளார்.
இதைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, ‘சட்டம் – ஒழுங்கைக் காக்கத்தவறிய காவல் துறையைக் காப்பதற்காக முதல்வர் முயற்சிக்கிறார்’ என்றும் ‘தாமதமாக இரங்கல் தெரிவித்தவர் உண்மையை விசாரிக்கவில்லையா... உண்மை என்னவென்பது முதல்வருக்கு மறைக்கப்படுகிறதா... எதுவாக இருந்தாலும் மக்களிடம் ஏன் தவறான தகவலை மாநில முதல்வரே பரப்ப வேண்டும்’என்றும் கடுமையாக கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
‘உண்மையான குற்றவாளிகள் அல்ல’
ஆம்ஸ்ட்ராங் உடலை நேரில் பார்த்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. உண்மைக் குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். 8 பேர் சரணடைந்துவிட்டதால் புலன் விசாரணையைக் காவல்துறை முடித்து விடக்கூடாது. கூலிப் படைக் கும்பலைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும். ஆம்ஸ்ட்ராங் போன்றோருக்குக் காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளைக் கைது செய்வதிலாவது காவல்துறை அலட்சியம் காட்டாமல் இருக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளைக் கைது செய்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், திருமாவளவன் இக்கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.