Monday, December 23, 2024
CriticsExplainerPolitics

10 தோல்வி; பாடம் கற்றாரா பழனிசாமி? அ.தி.மு.க.விற்குத் தோல்விகள் உணர்த்தும் செய்தி என்ன?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கட்சியை வழிநடத்துவதும், கூட்டணி முறிவுக்குப் பிறகும் பா.ஜ.க. உயர்மட்டக் குழுவுடன் பழனிசாமி நெருக்கமாக இருப்பதும் அ.தி.மு.க. தொடர் தோல்விகளைச் சந்திக்கக் காரணமாக உள்ளன. சமுதாய ரீதியிலான பாகுபாட்டால் தென், வட மாவட்டங்களில் அ.தி.மு.க. தனக்கிருந்த வாக்கு வங்கியைப் பெரும் அளவு இழந்துள்ளது.

.தி.மு.க.வின் ஆலமரமாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு நடந்த பத்துத் தேர்தல்களிலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. கட்சிப் பிளவுபட்டுள்ளதோடு, தொடர்ந்து தோல்விகளும் ஏற்படுவதால் தொண்டர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர். தொடர் தோல்விகள் உணர்த்தும் செய்தி என்ன? தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டாரா எடப்பாடி பழனி்சாமி?

தமிழ்நாடு அரசியலில் அ.தி.மு.க.

தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. தி.மு.க.வில் இருந்து வெளிவந்த எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க.வைத் துவங்கி சிறிது காலத்திலேயே தேர்தலைச் சந்தித்து தமிழ்நாட்டின் முதல்வரானார். அவர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலங்களில் அவரது நிழல் போல் இருந்த சசிகலா ஆட்சி அதிகாரத்திலும் நிழல் தலைவராகவே செயல்பட்டார். குறிப்பாக அவரது கணவர் நடராஜனும் சசிகலாவின் உறவினரான டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் மிகுந்த செல்வாக்குடன் கோலோச்சினர். இருந்தும் அவர்கள் ஜெயலலிதாவுக்கு வழக்கு நெருக்கடிகள் ஏற்பட்டு சிறை செல்ல நேர்ந்த போது முதல்வர் பொறுப்பை ஏற்கவில்லை. அரசவை நிலைய வித்துவான் போல், அ.தி.மு.க. அவசர கால முதல்வராக ஓ.பன்னீர்செல்வமே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத்தந்தது சசிகலா அன்ட் கோ தான்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவும், சசிகலாவின் கணவர் நடராஜனின் மறைவும் சொத்துக் குவிப்பு வழக்கும் சசிகலாவைத் தடுமாறச் செய்தது. எப்போதும் நம்பிய பன்னீர்செல்வத்தை நம்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக உணர்ந்த சசிகலா எடப்பாடி பழனிசாமியிடன் கட்சியையும் ஆட்சியையும் ஒப்படைத்தார். அப்படி, தமிழ்நாட்டின் திடீர் முதல்வரான பழனிசாமி, ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த சில மாதங்களிலேயே தனக்கு முதல்வர் பதவியையும் கட்சியையும் கொடுத்துச் சிறை சென்ற சசிகலாவையும் டி.டி.வி.தினகரனையும் கட்சியில் இருந்து வெளியேற்றினார்.

சசிகலாவுடன் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம்

இதேநிலை தனக்கும் வரலாம் என உணர்ந்த பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதி முன் அமர்ந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து மக்களின் பார்வையைத் தன்பக்கம் திருப்பினார். ‘ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் பொருள் விளங்காத இருள் சூழ்ந்த பக்கங்கள் மீது ஒளி பாய்ச்சி, மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டும்’ என்றார். சமாதியின் முன் அமர்ந்ததைத் தனது ‘தர்மயுத்தம்’ எனவும் கூறிக்கொண்டார். மன்னார் குடி குடும்பத்தை விலக்கியதோடு அ.தி.மு.க.வில் தேவர் சமூகத்தவர்களின் அதிகாரத்தை ஒடுக்கிவிட்டதாகக் கருதிய பழனிசாமி, பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் கண்டு நடுக்குற்று, துணை முதல்வர் பதவியைப் பன்னீர்செல்வத்துக்குக் கொடுத்து தர்மயுத்தத்தை ஒடுக்கினார். ஓ்.பி.எஸ். – ஈ.பி.எஸ். என்ற இரட்டைத் தலைமையின் கீழ் கட்சியும் ஆட்சியும் சில மாதங்கள் பயணித்தன.

தேவர்களை ஒடுக்கியும் ஓரங்கட்டியும் கட்சியிலும் ஆட்சியிலும் அனைத்து முக்கிய அதிகாரத்திலும் தன் சமூகத்தவர்களான கவுண்டர்களை அமர்த்தி அழகு பார்த்த பழனிசாமிக்கு, பன்னீர்செல்வம் பெரும் இடையூறாகவே செயல்பட்டார். சந்தர்ப்பம் கிடைத்ததும் கட்சியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கினார்.

தர்மயுத்தமே நடத்திய பன்னீர்செல்வம் சும்மா இருப்பாரா, ‘அ.தி.மு.க உரிமை மீட்புக்குழு’ என்ற பெயரில் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி துவங்கிவிட்டார்… சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று வெளிவந்துள்ள சசிகலா, முழு நேர அரசியலிலேயே இல்லை.

பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்ட பின், ‘அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் யார்? கட்சியின் சின்னம் யாருக்குச் சொந்தம்?’ என்பதை உறுதிப் படுத்த பன்னீர்செல்வம் சட்டப்போராட்டம் நிகழ்த்தினார். ஆனால், அதில் வெற்றி பெற்று அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகி கட்சியைத் தன்வசப்படுத்தியுள்ளார் பழனிச்சாமி.

பா.ஜ.கவின் கைப்பாவை பழனிசாமி…

இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் காலூன்ற இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பாடுபட்டு வரும் பா.ஜ.க., பழனிசாமியைப் பகடையாக வைத்து, சிதறுண்டு கிடந்த அ.தி.மு.க.வைத் தனக்குச்சாதகமாகப் பயன்படுத்தத் துவங்கியது. தி.மு.க. மற்றும் பிற கட்சிகள் மீதான பா.ஜ.க.வின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள், அ.தி.மு.க.விற்கும் ஏற்படக்கூடாதென அஞ்சிய பழனிசாமி, பா.ஜ.க.விற்குத் தனது அதீத ஆதரவைக் கொடுத்தார்.

பத்துத் தோல்விகளைச் சந்தித்த பழனிசாமி!

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குச்சேகரிப்பின் போது பேசிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ‘‘சிறந்த ஆட்சியைக் கொடுப்பது மோடியா? இல்லை இந்த லேடியா?’’ எனப்பேசி, பா.ஜ.க.வைக் கடுமையாகச் சாடினார்.

இப்படி பா.ஜ.க.வைத் தன் கடுமையான விமர்சனங்கள் மூலம் தொலைத்தெடுத்த அ.தி.மு.க.வின் ஆலமரமான ஜெயலலிதா மறைந்த பின், அ.தி.மு.க.வை பா.ஜ.க.விடம் ஒட்டுமொத்தமாக அடகு வைத்ததைப்போலான நிலையைப் பழனிசாமி உருவாக்கியதாக அ.தி.மு.க. தொண்டர்களே பேசத் தொடங்கினர்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. சந்தித்த முதல் தேர்தல், ஜெயலலிதா இறப்பால் வெற்றிடமான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, 2017ல் நடந்த இடைத்தேர்தல் தான்.

இதில், அப்போது ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வின் வேட்பாளர் மதுசூதனனை, சுயேட்சியாகக் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 40,707 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். ஆளும்கட்சியாக இருந்தபோதிலும் அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியது.

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி.

அதன்பின் 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க. ஆளும்கட்சியாக இருந்தபோதிலும் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளையும் எதிர்க்கட்சியான தி.மு.க. கைப்பற்றியது. இது பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.விற்கு மாபெரும் தோல்வியாக அமைந்தது.

2019ல் நடந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், 2020ல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்தித்து பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அதன்பிறகு நடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியைத் தி.மு.க.விடம் பறிகொடுத்தது. இந்தத் தொடர் தோல்விகள் அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் அக்கட்சியின் தலைமை மீது வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்த்தன.

அதன்பின், எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமி எதிர்கொண்ட, 2021ல் நடந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி, 2023 ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், 2020 கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் என, அடுத்தடுத்து நடந்த ஒன்பது தேர்தல்களிலும் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

பா.ஜ.க. கூட்டணி முறிவு

ஒன்பது தோல்விகளைச் சந்தித்திருந்தாலும் அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையிலான கூட்டணி தொடர்ந்தது. தொடர் தோல்விகளுக்கு பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் காரணம் எனக் கருதிய பழனிசாமி கூட்டணியை முறித்துக்கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்திருந்தார். அந்தநிலையில், தமிழக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா குறித்து கடுமையாக விமர்சித்தது அ.தி.மு.க. தலைவர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட பழனிசாமி, அண்ணாமலையின் கருத்துக்கள், விமர்சனங்களால் கடும் கோபமடைந்ததாக் கூறி பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டார். கூட்டணியை முறித்ததோடு, பா.ஜ.க.வின் கொள்கைகளையும் விமர்சித்தார். குறிப்பாகச் சிறுபான்மையினருக்குத் தான் எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், கூட்டணி தர்மத்தைக் காக்கவே பா.ஜ.க.வின் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்களுக்கு ஆதரவு தர நேர்ந்ததாகவும் மேடைகளில் பேசத் தொடங்கினார். இதனால் தலித் மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவு தனக்குக் கிடைக்கும் என்றும் நம்பினார்.

ஆனால் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தமிழகம் புதுச்சேரியைச் சேர்த்து 40 இடங்களிலும் படுதோல்வியைச் சந்தித்தது. அதுமட்டுமின்றி முக்கியத் தொகுதிகளான தென்சென்னை, தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், புதுச்சேரி, திருநெல்வேலி உள்பட 7 தொகுதி டெபாசிட் இழந்தது. 9 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. அ.தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட கொங்கு மண்டலத்திலும் தோல்வியையே தழுவியது. அ.தி.மு.க.வின் இந்த பின்னடைவு, ‘தமிழ்நாட்டில் நோட்டாவுக்குப் போட்டி’ என்று விமர்சிக்கப்பட்ட, தேசியக் கட்சியான பா.ஜ.க. சில இடங்களில் இரண்டு, மூன்றாம் இடங்களைப் பிடிக்க வழிவகுத்தது. இதனால், ஒட்டுமொத்தமாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், அ.தி.மு.க.வின் தேர்தல் வரலாற்றிலேயே மிக மோசமான தேர்தலாகப் பார்க்கப்பட்டது.

இதனால், #பத்து_தோல்வி_பழனிசாமி என, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா உள்ளிட்டோரும் கிண்டலடிக்கத் தொடங்கினர்.

இப்படித் தொடர் தோல்வியைச் சந்தித்ததால் #பத்து_தோல்வி_பழனிசாமி என்ற பட்டத்தைச் சொந்தமாக்கிய இக்கட்டான நிலையில், விக்ரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தார் பழனிசாமி. ‘விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் தோற்றால் தன் மீதான இமேஜ் டேமேஜ் ஆகிவிடக்கூடும் என்பதால் தான் பழனிசாமி தேர்தலைப் புறக்கணித்துள்ளார்’ என்று அரசியல் களத்தில் விமர்சனம் எழுந்தது.

எடப்பாடி பழனிச்சாமி

இந்த தொடர் தோல்விகளால், ‘அ.தி.மு.க. ஒன்றிணைந்தால் தான் இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெற முடியும்’ என்ற கருத்தைக் கட்சியிலிருந்து விலகியும் விலக்கப்பட்டும் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் மட்டுமின்றி கட்சிக்குள் இருக்கும் மூத்த தலைவர்களும் முன்வைத்து வருகின்றனர்.

‘‘தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர்வழி சென்றால், நாளை நமதே’’, என்ற எம்.ஜி.ஆரின் சினிமா பாடலை குறிப்பிட்டு, பழனிசாமி தரப்பிற்குப் பன்னீர்செல்வம் அழைப்பும் விடுத்துள்ளார். ஆனால், தனது அதிகாரம் பறிபோகுமென்ற அச்சத்தில், கட்சி ஒன்றிணைப்புக்குப் பழனிசாமி பச்சைக்கொடி காட்டாமலே உள்ளார்.

தோல்விகளுக்கான காரணம் என்ன? தோல்விகளில் பாடம் கற்றுக்கொண்டாரா பழனிச்சாமி? என்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் மற்றும் மூத்த செய்தியாளர்களிடம் நாம் முன்வைத்தோம்.

’அ.தி.மு.க. கவுண்டர்களுக்கான காட்சியாக மாறியுள்ளது’

நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததும், அ.தி.மு.க. கவுண்டர் சமுதாயத்திற்கான கட்சியாக மாறியதும் தான் தோல்விகளுக்கான முக்கியக் காரணமாக உள்ளதாகத் தெரிவித்தனர்.

‘கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கட்சியை வழிநடத்துவது, கூட்டணி முறிவுக்குப் பிறகும், பா.ஜ.க. உயர்மட்டக் குழுவுடன் பழனிசாமி நெருக்கமாக இருப்பது போன்ற காரணங்கள் அ.தி.மு.க. படு தோல்விகளைச் சந்திக்கக் காரணமாக உள்ளன. சமுதாய ரீதியிலான பாகுபாட்டால் தென், வட மாவட்டங்களில் அ.தி.மு.க. வாக்கு வங்கியைப் பெரும் அளவு இழந்துள்ளது’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

‘தோல்விகளில் பழனிசாமி பாடம் கற்கவில்லை’

நம்மிடம் அரசியல் விமர்சகர்கள் கூறிய அதே கருத்துக்களை எதிரொலிக்கிறார் மூத்த செய்தியாளர் ப்ரியன்.

நம்மிடம் பேசிய ப்ரியன், ‘‘பத்துத் தோல்விகளைச் சந்தித்த பழனிசாமி, தோல்விகளில் இருந்து எந்தப்பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. பாடம் கற்றுக்கொண்டிருந்தால் தொடர்ந்து பத்துத் தோல்விகளை அ.தி.மு.க. சந்தித்திருக்காது,’’ என்கிறார் அவர்.

தோல்விகளுக்கான காரணங்களை விளக்கிய ப்ரியன், ‘‘மூத்த தலைவர்கள் பிரிந்து சென்றதில் இருந்தே கட்சி பலவீனமடையத் துவங்கியது. அதிலும், தலைவர்கள் வெளியேறிய பிறகு, பழனிசாமி, வேலுமணி, தங்கமணி போன்ற கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே அதிகாரம் குவிந்தது,’’ என்றார்.

மேலும் தொடர்ந்த ப்ரியன், ‘‘கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கட்சியை நடத்துவதால், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சியாக அ.தி.மு.க. மாறியுள்ளது. இதனால், தேவர்கள், முக்குலத்தோர், வன்னியர்கள் என இதர சாதியைச் சேர்ந்தவர்கள் அதிருப்தியடைந்து, தி.மு.க.விற்கும் மற்ற கட்சிகளுக்கும் ஆதரவு கொடுக்கிறார்கள். சமீபத்தில் மக்களவைத் தேர்தலில், வட, தென் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வாக்கு வங்கியைக் கடுமையாக இழந்துள்ளதே இதற்குச் சாட்சி,’’ என்கிறார் அவர்.

மூத்த செய்தியாளர் ப்ரியன்.

‘ஒன்று சேருவது மட்டுமே வெற்றிக்கான ஒரே தீர்வு’

‘‘பன்னீர்செல்வம், தினகரன் மற்றும் சசிகலாவுடன் ஒன்று சேர்ந்து பழனிசாமி செயல்பட்டால் மட்டுமே, இனி வரும் தேர்தல்களிலாவது அ.தி.மு.க, வெல்ல முடியும்,’’ என்கிறார் ப்ரியன்.

இதை நம்மிடம் விளக்கிய ப்ரியன், ‘‘கட்சி இணைப்பு நடந்தால் தனது அதிகாரம் பறிபோகும் என்ற அச்சத்தில் தான் பழனிசாமி இணைப்புக்கு ஒப்புக்கொள்ளாமல் உள்ளார். பழனிசாமியின் இந்த முடிவால் வாக்கு வங்கியை இழந்து பலவீனமடைந்து வருகிறது அ.தி.மு.க. அதுமட்டுமின்றி, பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிவு எனக்கூறினாலும், IT, ED துறைகளுக்குப் பயந்து உயர்மட்ட குழுவுடன் பழனிசாமி இன்றும் நட்பாகத்தான் உள்ளார். பா.ஜ.க. எதிர்ப்பை பழனிசாமி தீவிரமாக வெளிக்காட்டாமல் விட்டாலும் பரவாயில்லை. ஆனால், அ.தி.மு.க. வலுவான கட்சியாக இருப்பதை மக்களுக்குத் தெரிவிக்க, ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும். முன்னாள் தலைவர்கள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி பெறு வாய்ப்புள்ளது. இல்லையென்றால் தோல்விதான் மிஞ்சும்,’’ என்கிறார், மூத்த செய்தியாளர் ப்ரியன்.

தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வருமா அ.தி.மு.க.? கவுண்டர்கள் கட்சி அ.தி.மு.க. என்பதை மாற்றியமைத்து வெற்றி காண்பாரா பழனிசாமி? அல்லது வழக்கமான வியூகங்களால் தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் படர்ந்து வளர வாய்ப்பளித்து விலகி நிற்பாரா பழனிசாமி… பொறுத்திருந்து பார்ப்போம்…

One thought on “10 தோல்வி; பாடம் கற்றாரா பழனிசாமி? அ.தி.மு.க.விற்குத் தோல்விகள் உணர்த்தும் செய்தி என்ன?

  • எவ்வளவு நேரம் தான் படிக்கிறது…
    அஇஅதிமுக வின் மொத்த வரலாற்றையும் படித்த மாதிரி இருக்கிறது, அவ்வளவு விசயங்களை எழுதியுள்ளீர்கள்
    நன்றி 🙏

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *