மாஞ்சோலைப் படுகொலை தினம்: விளிம்புநிலை மக்களுக்கு ‘அன்றும் இன்றும்’ துரோகம் செய்கிறதா தி.மு.க.?
‘கருணாநிதியின் அறிவுறுத்தலின்படி திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்தான் இந்த மாஞ்சோலை படுகொலை’ எனக் கூறியது யார் தெரியுமா? தற்போது தி.மு.க. அரசின் சபாநாயகராக இருக்கும் அப்பாவு தான். ‘அன்று, (1999 ஜூலை 23ம் தேதி) மாஞ்சோலையில் தொழிலாளர்களைப் படுகொலை செய்யக் காரணமாக இருந்தது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு தான்’ என, ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் அப்பாவு. இன்று, மாஞ்சோலைத் தொழிலாளர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி அவர்களை அதலபாதாளத்திற்குள் தள்ளக் காரணமாக இருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு. அன்றும் இன்றும் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வஞ்சிக்கிறதா தி.மு.க. 25 ஆண்டுகள் சொல்லும் கதை என்ன?
‘தமிழக வரலாற்றின் கறுப்பு தினம்’ என அனுசரிக்கப்படும் நாள் ஜூலை 23. தாமிரபரணி கரையில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை அரங்கேறி இன்றுடன் 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், மாஞ்சோலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் மட்டும் இன்றும் ஓய்ந்தபாடில்லை.
1929ம் ஆண்டு மாஞ்சோலையில் உள்ள 8,374 ஏக்கர் நிலத்தை, சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் குத்தகைக்கு எடுத்தது பி.பி.டி.சி. (பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்) நிறுவனம். அப்போது, திருநெல்வேலியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பஞ்சம், பட்டினியால் வாடிய பட்டியலினத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டவர்களை, அந்த மலைப் பகுதியைத் திருத்தி விளைநிலமாக மாற்றும் பணிக்காகப் பி.பி.டி.சி. நிறுவனம் குடியமர்த்தியது. கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளாக அம்மக்கள் கடும் உழைப்பைச் செலுத்தி, மலைக்காட்டைத் தேயிலை, ஏலம், மிளகு மற்றும் காபி போன்ற பணப் பயிர்களை விளைவிக்கும் எஸ்டேட்களாக உருமாற்றியுள்ளனர்.
1952ல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு அந்த நிலங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. அரசிடம் குத்தகையைப் புதுப்பித்துக் கொண்டது பி.பி.டி.சி. நிறுவனம். அதன்பின், கூலி 33 ரூபாயும், இதர படிகள் சேர்த்து 56 ரூபாய் என, தொழிலாளர்களுக்குத் தினக்கூலி நிர்ணயித்தது. ‘இது அப்பட்டமான கொத்தடிமைத்தனம். கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும்’ என, அந்நிறுவனத்திடமும் அரசிடமும் தொழிலாளர்கள் கோரிக்கையை முன்வைத்தனர். அவர்களுடன் தொழிலாளர் அமைப்புகளும் இடதுசாரிக் கட்சிகளும் இணைந்தன.
கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தது. 1999 ஜூன் 8ம் தேதி, தொழிலாளர்கள் ஒன்று கூடி, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஊதிய உயர்வு கோரியும் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுவிக்கக் கோரியும் 1999 ஜூலை 23ம் தேதி, ஆட்சியர் அலுவலகத்தை நோக்கித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பேரணி நடத்தினர்.
5,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்த பேரணியில் புதிய தமிழகம் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக ஐக்கிய ஜமாத் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
குறிப்பாக, கிருஷ்ணசாமி, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன், மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அப்பாவு எனப் பலரும் பேரணியில் பங்கேற்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கும் முன்னரே பேரணி, 700க்கும் மேற்பட்ட போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன. ஆட்சியரிடம் மனுக் கொடுக்கக் கூட, காவலர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால், தாமிரபரணி கரையோரமாகச் சென்று, ஆட்சியரைச் சந்திக்கப் போராட்டக்காரர்கள் முடிவெடுத்து நகர்ந்தனர்.
போராட்டக்காரர்களைக் கலைக்க அவர்களை நோக்கி லத்தி சார்ஜ் செய்ததோடு, கூட்டத்தை நோக்கிக் கற்களையும் போலீசார் வீசினர்; வானத்தை நோக்கி, இருமுறைத் துப்பாக்கியால் சுட்டனர். போராட்டக் காரர்களின் நெஞ்சில் பயம் தொற்றிக்கொண்டது. தப்பிக்க வழியின்றி தாமிரபரணி ஆற்றில் இறங்கினர். அவர்களைத் தப்பிச் செல்லவிடாமல் தடுத்த போலீசார், பலரும் நீரில் மூழ்கிச் சாகச் செய்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். 35 நிமிடங்கள் நீடித்த அந்தத் தாக்குதலில், இரண்டு பெண்கள், ஒரு 2 வயதுக் குழந்தை உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட பின்னர்தான் ஆட்சியர் தனவேல் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார். இந்தத் தாக்குதலில் 21 காவலர்கள் காயமடைந்ததாகவும், மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்தது.
தவிர, போலீசார் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவே இல்லை என்றும் லத்திகள் மற்றும் புகைக்குண்டுகளை மட்டுமே பயன்படுத்தினார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதற்கு எப்படி இத்தனை உயிரிழப்புகள் நடந்திருக்க முடியும்? என்னும் கேள்விகள் கேட்கப்படாமல் இல்லை. ஆனால், அக்கேள்விகளுக்குப் பதில்தான் இதுவரை கிடைக்கவில்லை.
அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்தச் சம்பவத்தை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் தலைமையில் குழு அமைத்தார். விசாரணையின் முடிவில், 11 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகவும், மற்றவர்கள் காயங்களால் இறந்ததாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசுக்கு ஆதரவாக நீதிபதியின் அறிக்கை இருப்பதாகக் கூறிய போராட்டக்காரர்கள், உயிரிழந்தவர்களின் சடலங்களை வாங்க மறுத்தனர். அரசு, பாதுகாப்புடன் சடலங்களைப் புதைத்தது.
‘பேரணி சென்றவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசாரும் எதிர்த்தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது’ என, அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறினார். ஆனால், பிற அரசியல் கட்சித் தலைவர்களோ, ‘போராடியவர்களைச் திட்டமிட்டுச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தினர்; உயிரிழப்புகளை ஏற்படுத்தினர்’ எனக் கூறினர்.
குறிப்பாக, தற்போது சபாநாயகராக இருக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த (இன்று தி.மு.க. – அன்று மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ்) அப்பாவு, அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார். அவர், ‘கருணாநிதி அறிவுறுத்தலின்படி திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் தான் மாஞ்சோலை படுகொலை. இந்தச் சிக்கலுக்குப் பின் கலெக்டர், டி.ஐ.ஜி.யை மாற்ற வேண்டும் என்னும் கோரிக்கையை வைத்தோம். ஆனால், அவர்களை மாற்றினால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கொதிப்படைவார்கள் எனக் கருணாநிதி சொல்கிறார்’ எனப் பேசினார்.
25 ஆண்டுகள் கடந்தும் மாஞ்சோலைப் படுகொலை, தி.மு.க. மீதுதான் அழியாத கறையாகவுள்ளது. அங்கு மரணித்தவர்களுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்னும் கோரிக்கை பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அதனால், ஆண்டுதோறும் தாமிரபரணி ஆற்றில் மலர்களை வைத்து மக்களும், கட்சித் தலைவர்களும் நினைவு அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் அமைந்திருப்பதால் வரும் 2028க்குள் வெளியேறுமாறு 2018ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி தேயிலைத் தோட்ட நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், குத்தகைக் காலம் முடிவடைவதற்கு முன்னரே பி.பி.டி.சி. நிறுவனம் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் இறங்கியது. இது போராட்டமே வாழ்வாகிப் போன தொழிலாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
சில குடும்பங்கள் வெளியேறின. கண்ணீர் மல்கத் தொழிலாளர்கள் வெளியேறும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், வெளியேற்றத்திற்குத் தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், தமிழக அரசின் டான்டீ (Tan tea) நிறுவனமே மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தை எடுத்து நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ‘அதனை ஏற்று நடத்த முடியாது’ என நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது தமிழக அரசு.
இதையடுத்து நேற்று (ஜூலை 22) மாஞ்சோலை விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு, டான்டீ நிர்வாகம், பி.பி.டி.சி. நிர்வாகம் இணைந்து, இரு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
மேலும் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க 700 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிய வழக்கில், ‘தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளைச் செய்து தரும்வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அரசும் அதிகாரிகளும் தொடர்ந்து கைவிட்டதால் நீதிமன்றத்தில் தான் தங்களது கோரிக்கைகளை மாஞ்சோலைத் தொழிலாளர்கள் முன்வைத்து வருகின்றனர். ‘கடந்த காலத்தில் சாதிய அரசியலைக் கையிலெடுத்து மக்களைப் படுகொலை செய்தது தி.மு.க. என்னும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. தற்போது, 25 ஆண்டாகப் போராடும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அரசிடம் டான்டீ எனும் ஆயுதம் இருந்தும் ஏன் அரசு அவர்களுக்குக் கை கொடுக்க மறுக்கிறது? சனாதன ஒழிப்பு, சமத்துவம், திராவிட சிந்தனைகளை முன்வைத்து அரசியலில் களமாடி வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, எதற்காக ஒடுக்கப்பட்டவர்களைக் கைவிடத் திட்டமிட்டிருக்கிறது’ என்னும் கேள்விகளைப் பல தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர்.