Monday, December 23, 2024
Critics

பா.ஜ.க.,வின் திரிபுவாத அரசியலைத் தாக்குப்பிடிக்காத காங்கிரஸ்!

பா.ஜ.க.,வை வெல்ல எதையும் இழக்க துணிந்திருக்கிறது காங்கிரஸ். காங்கிரசின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சாம் பிட்ரோடாவின் ராஜினாமாவில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?

‘தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் உள்ளனர்’ எனக் கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா மீது, இன வாதம் பேசியதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது பா.ஜ.க., ஆமாம்… என அக்குற்றச்சாட்டை ஏற்றுள்ள காங்கிரஸ், சாம் பிட்ரோடாவின் ராஜினாமாவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதன் முழு பின்னணியைப் பார்க்கலாம்…

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா பேட்டி ஒன்றில் பேசுகையில், “உலகில் ஜனநாயகத்துக்கு ஒளிரும் முன்னுதாரணமாக இந்தியா விளங்குகிறது. காங்கிரஸ் கட்சி நாட்டை வேற்றுமையிலும் ஒற்றுமையாக வைத்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த சண்டைகளைத் தவிர்த்து 75 ஆண்டு காலம் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்ந்திருக்கிறோம். நாட்டின் கிழக்கு பகுதியில் வசிப்பவர்கள் சீனர்களைப் போலவும் மேற்கில் வசிப்பவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் வசிப்பவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் வசிப்பவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் உள்ளனர். இப்படி பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை நம்மால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும்” என்றார்.

இவர் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டது. பிட்ரோடாவின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெலங்கானா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தோல் நிறத்தின் அடிப்படையில் நாட்டு மக்களை அவர் அவமதித்துள்ளார். நாட்டு மக்களை அவர்களின் தோல் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை சகித்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற இனவெறி மனப்பான்மையை ஒருபோதும் ஏற்க முடியாது. பிட்ரோடாவின் இந்த கருத்து பற்றி ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும்” எனப் பேசினார்.

இப்படியாக பா.ஜ.க.,வைச் சேர்ந்த பல தலைவர்கள் கண்டனத்தை முன்வைத்தனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சாம் பிட்ரோடா கருத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய சாம் பிட்ரோடா முடிவு செய்துள்ளார். அவரது முடிவை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த சாம் பிட்ரோடா?
தொலைத்தொடர்பு ஆர்வலர், தொழில்முனைவோர், சிந்தனையாளர் எனப் பல வகைகளில் அறியப்படுபவராக தான் சாம் பிட்ரோடா இருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளாக தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் (ICT) சார்ந்த செயல்பாடுகளைச் செய்து வந்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தலைமை ஆலோசகராக பிட்ரோடா இருந்திருக்கிறார். குறிப்பாக, தொலைத்தொடர்பு, எழுத்தறிவு, நோய்த்தடுப்பு, பால் உற்பத்தி மற்றும் எண்ணெய் வித்துக்கள் தொடர்பான ஆறு தொழில்நுட்ப பணிகளுக்கு இவர் தலைமை தாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மன்மோகன் சிங், பிட்ரோடாவை இந்திய தேசிய அறிவு ஆணையத்தின் தலைவராக நியமித்தார். கடந்த 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங்குக்கு பொது உள்கட்டமைப்புக்கான ஆலோசகராக இருந்தார். இவரின் தற்போதைய கருத்து தான் சர்ச்சையாகியுள்ளது.


பத்திரிக்கையாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தைத் தன் எக்ஸ் தளத்தில் சாம் பிட்ரோடா பகிர்ந்துள்ளார். அதில், “ ஆழமாகப் பிளவுபட்டுள்ள இந்தியாவை தனது வார்த்தைகளில் அவர் கூறினார். ஆனால், இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் நினைக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி தங்களின் துணிச்சலைக் காட்டி, அவரின் கருத்தின் சரியான புரிதலை உண்டாக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு ஏற்பட்ட அழுத்ததால் காங்கிரஸ் பின்வாங்கியது. சாம் பிட்ரோடா சொந்தமாக ராஜினாமா செய்தாரா? அல்லது இந்தியாவில் ஏற்பட்டுள்ள எதிர்வினைகளைக் கருத்தில் கொண்டு அவரை ராஜினாமா செய்ய சொல்லி கட்சி கேட்டதா? என்பது தெரியவில்லை.
1980-ம் ஆண்டுகளில் இந்தியாவில் கிராமப்புற தொலைபேசி சேவைகளைத் தொடங்கி இந்தியாவின் தகவல் புரட்சிக்கு விதைகளை வித்தத்த அவரின் பங்களிப்பு வரலாற்றில் சரியாக பதிவு செய்யப்படும் என்று நம்புகிறேன்” எனப் பகிர்ந்துள்ளார்.


காங்கிரஸ் முடிவின் பின்னணி ?

சாம் பிட்ரோடா அமெரிக்காவில் வசிப்பவர். தொழில்நுட்பம் சார்ந்து பல ஆண்டுகளாக செயலாற்றி வருகிறார். அவர் ‘Idea of democracy’ என்னும் புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆனால், அவர் இனவாதம் பேசியதாகப் பாஜக குற்றச்சாட்டை முன்வைக்கிறது. சாம் பேசியது இனவாதம் அடிப்படையில் கூறப்பட்ட கருத்தல்ல. இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்க அப்படி ஒரு விவரிப்பைத் தந்திருக்கிறார்.
இது காங்கிரஸ் கட்சிக்கும் புரிந்திருக்கிறது. ஆனால், அதற்கு விளக்கம் ஏதுவுமே தராமல் அவரை இழக்கக் காங்கிரஸ் தயாராகிவிட்டது. காரணம், பாஜக முன்வைக்கும் திரிபு (கருத்தைத் திரித்து) வாதத்துக்கு காங்கிரஸால் ஈடு கொடுக்க முடியவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் இடஒதுக்கீட்டைக் காங்கிரஸ் பறித்துவிடும் எனப் பாஜக பேசியது. ஆனால், அதற்கு காங்கிரஸ் கட்சி பெரிதாக எதிர்வினையாற்றவில்லை. மற்ற கூட்டணி கட்சியான ராஷ்டிர ஜனதா தளம் எதிர்வினையாற்றியதை நாம் பார்த்தோம். எனவே, இதில் சாம் பிட்ரோடவை காங்கிரஸ் தக்கவைத்துக் கொள்வதற்குப் பதிலாக அவரை இழக்க முடிவெடுத்துவிட்டது. ஒரு விமர்சனத்துக்குப் பதில் அளிப்பதற்குப் பதிலாக சிக்கலே இல்லாமல்’இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிடுவோம்’ என்னும் வகையில் காங்கிரஸ் செயலாற்றி வருகிறது.
அதனால் தான் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் பிட்ரோடா தெரிவித்திருக்கும் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது, துரதிருஷ்டவசமானது, முற்றிலும் தவறானது என்று காங்கிரஸ் கட்சியே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *