வாக்குச் சீட்டுக்கு ’நோ’ முதல் வாக்கு எண்ணிக்கையில்வேட்பாளர் வரை!விவிபேட் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
இந்தியாவில் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், தேர்தல் வாக்குப்பதிவு குறித்து முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். அது குறித்து முக்கியமான தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளை 100% எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும்’ என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அனைத்து மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

வழக்குப் பின்னணி என்ன?
2019-ம் ஆண்டு இவிஎம் இயந்திரங்கள் மீது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தற்போது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படுகின்றன. இந்த நிலையில், இதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்தி, அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டுமென உச்சநீதி மன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் அபய் பக்சந்த், அருண் குமார் அகர்வால் ஆகியோர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது. கடந்த 18-ம் தேதி வாதங்கள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தனர். இந்த விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், இது தொடர்பாக தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
வைக்கப்பட்ட முக்கியமான கோரிக்கைகள் என்ன?
- இவிஎம்மில் ‘programmable chip’ இருப்பதால் அதன்மீது நம்பகத்தன்மை இல்லை என்பதைக் குறிப்பிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர கோரிக்கை.
- விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை வாக்கு செலுத்தும் வாக்காளர்களுக்கு வழங்கி, அதை எண்ண வேண்டும்.
- விவிபேட்டில் இருக்கும் கண்ணாடியைத் தெளிவானதாக (transparent) பொறுத்தவேண்டும். வெளிச்சம் இருக்கும் நன்றாக தெரியக்கூடிய இடத்தில் அதை அமைக்க வேண்டும்,
- 5% பதிலாக 100% ஒப்புகைச் சீட்டை எண்ண வேண்டும்.
என்னும் முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
உச்சநீதிமன்றம் நிராகரித்த கோரிக்கைகள்:
- மீண்டும் வாக்குச் சீட்டு முறையில் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
- VVPAT சீட்டுகளை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. (தற்போது, ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5% ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.)
உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கியமான தீர்ப்பு?
1.
தேர்தல் முடிவுகள் வெளியான 7 நாட்களுக்குள் இரண்டாம், மூன்றாம் இடம்பிடித்த வேட்பாளர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், தேர்தல் அதிகாரியிடம் கடிதம் வழங்கி, மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியில் 5% ஒப்புகைச் சீட்டுகளைச் சரிபார்க்கலாம். பொறியாளர்கள் அதனை சரிபார்க்கும்போது வேட்பாளர் உடனிருக்கலாம். அதற்கு உண்டாகும் செலவுகளை வேட்பாளர் வழங்க வேண்டும். ஒருவேளை, முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் பணம் திருப்பி செலுத்தப்படும்.
2.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் ஏற்றப்பட்டு வாக்குப்பதிவு முடிந்தபின்னர் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். சீல் வைக்கப்பட்ட இயந்திரங்களில் வேட்பாளர்களும் அவர்களது பிரதிநிதிகளும் கையெழுத்திட வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 45 நாட்களுக்கு இவிஎம் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
3.
விவிபேட் சீட்டுகளில் பார்கோடுகளைப் போட முடியுமா? அதன் வாயிலாக, விவிபேட் சீட்டுகளை இயந்திரம் கொண்டே எண்ண முடியுமா? என்பதை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
பேசப்பட்ட முக்கிய அம்சங்கள்:
- அரசியல் சாசனத்தின்படி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஆணையிட முடியாது என்றும் நீதிமன்றம் முன்பு கூறியிருந்தது. வெறும் சந்தேகத்தின் பேரில் மட்டும் இதனை அணுக முடியுமா? என்னும் கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியது.
“கண்மூடித்தனமாக ஒரு அமைப்பு மீது குற்றச்சாட்டை முன்வைப்பது பலருக்கும் சந்தேகத்தை அதிகரிக்கும்” எனவும் நீதிபதிகள் கூறினர்.
3.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் ஆகிய மூன்றிலும் நிறைய சந்தேகங்களை எழுப்பி நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள தொழில்நுட்ப ரீதியான, அறிவியல் ரீதியான ஆதாரங்களையும், வாதங்களையும் நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம் எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வழக்கை வாதாடிய வழக்கறிஞர் பிரசாத் கிஷோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ நாங்கள் முன்வைத்த முக்கியமான கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்கவில்லை.எனினும் சில முக்கிய முன்னெடுப்புகளை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” எனக் கூறினார்.
ஆகவே, தற்போது இருக்கும் தேர்தல் நடைமுறையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்பதை உச்சநீதிமன்றம் தங்களின் தீர்ப்பில் தெளிவுப்படுத்தியுள்ளது.