‘BCCI எனக்கு வாய்ப்பு அளிக்கிறது:’ நடராஜனின் தன்னிலை விளக்கத்திற்குக் காரணம் என்ன?
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வந்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு, கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் வாய்ப்பளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணையில் தமிழக வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், வீரர்கள் தேர்வில் BCCI அரசியல் செய்வதாகப் பலதரப்பினரும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 26) மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களிடம், ‘‘இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது. காயங்கள் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. கிரிக்கெட்டில் அரசியல் எதும் நடைபெறவில்லை. கிரிக்கெட் வாரியம் வீரர்களிடம் எந்தவொரு ஏற்றத் தாழ்வுகளையும் பார்ப்பதில்லை. கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்களின் ஒத்துழைப்பால் தான் நான் இந்திய கிரிக்கெட் அணியில் வீரராக உருவாகி உள்ளேன்,’’ எனக்கூறினார்.
‘கிரிக்கெட் வாரியம் திறமையான தமிழக வீரர்களை எவ்விதக் காரணங்களும் கூறாமல் புறக்கணிப்பதும்; சாதி, மத அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்வதும்; போட்டிகளில் அவர்களை முன்னிலைப்படுத்துவதும் உலகறிந்த உண்மை. ஹிந்தி தெரியாததால் பட்ட சிரமங்கள் குறித்து நடராஜன் மாணவர்கள் மத்தியில் பேசியது சர்ச்சைக்கு உள்ளனது. அதற்குக் கிரிக்கெட் வாரியம் கொடுத்த அழுத்தத்தால் தான் நடராஜன் இவ்வாறு பேசியிருக்க வேண்டும். கிரிக்கெட் வாரியம் குறித்த உண்மைகளைக் கூறினால் தமிழக வீரரான நடராஜனுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் மறுக்கப்படலாம். இதனால் தான் அவர், வாரியத்தைப் புகழும் தொனியில் இந்தத் தன்னிலை விளக்கத்தை அளித்திருக்கிறார்’ எனப் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.