Sunday, December 22, 2024
CrimeEventsPolitics

கோவை: 11 நாள் டீ செலவுக்கு ரூ.27.5 லட்சம்… குப்பையில் மலியும் ஊழல்?

கோவை மாநகராட்சி சார்பில் ஒரு பணியாளருக்கு உணவுக்காக நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1,000 செலவு செய்திருந்தால்… அதற்கு வாய்ப்பில்லை தான், இருந்தாலும் அப்படியொரு அதீத கற்பனை செய்தாலும் கூட, 200 பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு, ரூ.2 லட்சம் வீதம் 11 நாட்களுக்கு ரூ.22 லட்சம் தான் செலவாகியிருக்கும். அப்பல்லோ மருத்துவமனையில் இட்லி, தோசைக்கு ரூ.1.17 கோடிக்குக் கணக்குக் காட்டியதைப்போல…

கோவை மாநகராட்சியில் சமீபத்தில் தான் தி.மு.க. பெண் மேயர் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கான பணியின் போது, டீ, காஃபி வாங்கியதற்கு ரூ.27.52 லட்சம் செலவானதாகக் கணக்குக் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

‘குப்பைக் கிடங்கில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு போது டீ, காஃபி, உணவு வாங்க இவ்வளவு செலவாகுமா? இதில், நிச்சயம் ஊழல் நடந்துள்ளது’ என, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர்.

650 ஏக்கர் குப்பைக் கிடங்கு!

கோவை மாநகராட்சியில், 100 வார்டுகளில் 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மாநகரப் பகுதிகளில் இருந்து தினமும் 1,150 டன் அளவிற்குக் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. வெள்ளலூர் பகுதியில் 650 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில் தான் குப்பை கொட்டப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தக் குப்பைக் கிடங்கில் 253 ஏக்கர் பரப்பில் குப்பைக் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளன.

குப்பையைக் கிடங்கில் வைத்து, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மக்கும் குப்பை – மக்காத குப்பையாகப் பிரித்து உரம் தயாரிப்பதாகவும், திடக்கழிவுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதாகவும் மாநகராட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால், குப்பைக் கிடங்கின் உண்மை நிலவரமோ நேர் எதிராக உள்ளது.

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மட்டுமின்றி, தற்போதைய மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியிலும், கோவையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முறையாகச் செயல்படுத்தாமல் உள்ளது.

திடக்கழிவுத் திட்டம் ‘ஃபெய்லியர்’ ஆக உள்ளதுடன், குப்பைக் கிடங்கில் அடிக்கடித் தீப்பற்றி எரியும். பல நூறு மீட்டார்களுக்குப் புகையும் சில கிலோ மீட்டர் தூரத்திற்குத் துர்நாற்றமும் வீசும். காற்று மாசு, அழகு மிகுந்த கோவை மாநகராட்சியின் ‘சிறப்புகளில்’ ஒன்று.

11 நாட்கள் தீயணைப்புப் பணி

இப்படியான நிலையில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி ‘வழக்கம்’ போல் குப்பைக் கிடங்கில் தீப்பிடித்தது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவிற்குக் குப்பை எரிந்தது. கோவைத் தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் அழைத்து வரப்பட்டனர். 11 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு, ஏப்ரல் 17 ம் தேதி தீ அணைக்கப்பட்டது.

‘வெள்ளலூரில் குப்பை கொட்டக் கூடாது என்ற உத்தரவு உள்ளது. அத்துமீறி குப்பை கொட்டியது; தீ ஏற்பட்டது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ எனக் கண்டனத்தைப் பதிவு செய்த பசுமைத் தீர்ப்பாயம் விளக்கம் அளிக்க வேண்டுமெனக் கோவை மாநகராட்சிக்குக் கடிதமும் எழுதியது.

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. – தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்.

இப்படியான நிலையில், இன்று (ஜூலை 26) மாநகராட்சி சாதாரணக் கூட்டம் துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடந்தது. இதில், 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 318வது தீர்மானமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் தீயணைப்புப் பணிக்காக, மாநகராட்சி செய்த செலவுகள் குறித்த கணக்குகள் முன்வைக்கப்பட்டன. இந்தத் தீர்மானத்தை வாசித்ததும் அதிமுக மட்டுமின்றி அவையில் கூடியிருந்த அனைவரும் பேரதிர்ச்சியில் உறைந்தனர்.

காரணம், 11 நாட்கள் தீயணைப்புப் பணிக்கான மொத்த செலவு ரூ.76.70 லட்சம் என்றும் அதில், பணியாளர்களுக்கு டீ, காஃபி, உணவு, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கிய செலவு என, ரூ.27.52 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தீர்மானத்தைப் படித்து முடித்ததும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததுடன், ‘தீயணைக்கும் பணிக்கு 76 லட்சம் செலவானதே அதிகம்; அதிலும் டீ குடித்ததற்கு 27 லட்சம் ரூபாய் செலவாகுமா? இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் விரைவில் சிறைக்குச் செல்வர்’ எனக் கடுமையாகச் சாடினர்.

ஊழல் நடைபெறவில்லை எனக்கூறி, தி.மு.க கவுன்சிலர்கள் அ.தி.மு.க கவுன்சிலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் எந்த விளக்கத்தையும் முன்வைக்கவில்லை.

மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற செய்தியாளர்கள், டீ செலவு குறித்து விளக்கம் கேட்டும், மாநகராட்சி தரப்பிலும், தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் விளக்கம் கொடுக்கவில்லை.

தீயணைப்புப் பணிக்கான செலவு விபரங்கள் குறித்த தீர்மானம்.

ஹோட்டல் கட்ட ஆகும் செலவு!

நம்மிடம் பேசிய கவுன்சிலர் பிரபாகரன், ‘‘டீ செலவிற்குக் கணக்கு வைக்கச் சொன்னால், பெரிய அளவில் ஒரு புதிய ஹோட்டல் துவங்க ஆகும் செலவை விடக் கூடுதலான தொகைக்குப் ‘பில்’ வைத்துள்ளனர். தீயணைப்புப் பணியில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணி செய்தது உண்மை தான். அதற்காக டீ, உணவிற்கு மட்டுமே வெறும் 11 நாட்களுக்கு ரூ.27.52 லட்சம் செலவாகும்? இதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. கோவை மேயராக இருந்த கல்பனா, தன் மேயர் பதவியைத் துறப்பதற்கு முன், அவசரகதியில் ஊழல் நோக்கில் சில செலவுகளுக்குப் பணத்தை ‘ரிலீஸ்’ செய்துள்ளார். மேயர் இல்லாததால் பணத்தை ‘ரிலீஸ்’ செய்யும் அதிகாரம் ஆணையாளரிடம் உள்ளது. தீயணைப்புப் பணியில் டீ செலவிற்கு, 27 லட்சம் ரூபாய் என ஆணையாளரே ஒப்புதல் கொடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது,’’ எனக் குற்றம்சாட்டுகிறார்.

200 பேருக்கு 2 லட்சம் தான்!

நாம் தோராயமாக ஒரு கணக்கிட்டோம். 200 பேர் 11 நாட்கள் வேலை செய்திருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஒரு பணியாளருக்கு உணவு, டீ சேர்த்து மாநகராட்சி அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய் செலவு செய்திருந்தால்… அதற்கு வாய்ப்பில்லை தான், இருந்தாலும் அப்படியொரு அதீத கற்பனை செய்தாலும் கூட, நாள் ஒன்றுக்கு, ரூ. 2 லட்சம் வீதம் 11 நாட்களுக்கு ரூ.22 லட்சம் தான் செலவாகியிருக்கும். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1.17 கோடி ரூபாய்க்கு இட்லி தோசை சாப்பிட்டார் எனக் கணக்குக் காட்டியதைப்போல, கோவை மாநகராட்சியும் முயன்றுள்ளது போலும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *