இலங்கையில் அமைந்திருப்பது இடதுசாரி ஆட்சியா… தமிழர்களால் கொண்டாட முடியுமா?
இலங்கையின் புதிய அதிபராக அநுரா குமார திசாநாயக்க பதவி ஏற்றிருக்கிறார். அவரது பதவியேற்பை இலங்கை மக்களைக் கடந்து இந்தியர்களும் குறிப்பாகத் தமிழர்கள் கொண்டாடுவதைக் காணமுடிந்தது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இடதுசாரி ஒருவர் அதிபராகப் பதவியேற்றதே கொண்டாட்டங்களுக்குக் காரணமாகக் கூறப்பட்டது.
ஆனால், நம்மவர்கள் கொண்டாடத் தகுதியானது தானா அநுர குமாரவின் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி.) கட்சி.
இலங்கையின் நெடிய வரலாற்றில் ஒரு நொடி கூட அநுர குமாரவின் கட்சி, விளிம்பு நிலை மக்களுக்கோ அல்லது சிறுபான்மையினருக்கோ ஆதரவாகக் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை. லெனினிய – மார்க்சிய கொள்கை கொண்ட கட்சி எனச் சொல்லிக் கொண்டாலும் அதற்கு வலு சேர்க்கும் வகையில் இலங்கை மண்ணில் சிறு நிகழ்வில் கூடப் பங்கெடுக்கவில்லை ஜே.வி.பி. கட்சி. இதைப் புரிந்துகொள்ள அக்கட்சியின் உருக்கத்தையும் அது கடந்து வந்த பாதையும் பற்றிய சிறு அறிமுகம் நமக்குத் தேவை.
ஜ.வி.பி. உருவானது எப்போது?
1965ம் ஆண்டு மே 14ம் தேதி ரோஹன விஜேவீர தலைமையில் ஏழு இளைஞர்கள் கொண்ட குழுவால், ‘ஜனதா விமுக்தி பெரமுனா’ என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. சோவித் யூனியனின் புரட்சியாளர் ஸ்டாலினின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, இடதுசாரி கொள்கைகளால் ஜ.வி.பி. வடிவம் பெற்றுள்ளதாகக் கூறினர்.
ஆனால், தொடக்கக் காலத்திலேயே ஜே.வி.பி. ஆயுதம் ஏந்திய புரட்சிகர அமைப்பு போல் செயல்பட்டது. 1971ல், ஜே.வி.பி. உறுப்பினர்கள் இலங்கை முழுவதும் உள்ள 74 காவல் நிலையங்கள் மீது தாக்குதலை நடத்திச் சூறையாடினர்.
இந்தத் தாக்குதலில் 8,000 முதல் 10,000 பேர் வரை கொல்லப்பட்டனர். அதில் அப்பாவி வெகுமக்கள் தான் அதிகம்.
இந்தக் காரணத்திற்காக அந்த அமைப்பைச் சேர்ந்த பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மீண்டும் 1980களில் ஜே.வி.பி. மற்றொரு ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்கியது. அது 1988-89 காலகட்டத்தில் சுமார் 7,000 பேரின் மரணத்திற்கு வழிவகுத்தது. இதனால், ரோஹண விஜேவீர 1989ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி போலீஸ் காவலில் கொல்லப்பட்டார். அதன்பின் கட்சித் தலைவராகச் சோமவன்ச அமரசிங்கப் பொறுப்பேற்றார்.
மக்களிடம் மன்னிப்பு!
1990 மற்றும் 2000களில் அமரசிங்கவின் தலைமையில் ஜே.வி.பி. ஆயுதம் ஏந்திய புரட்சிகளைக் கைவிட்டு பிரதான அரசியல் கட்சியாக உருமாறியது. ஆனால், அக்கட்சித் தேர்தல்களில் பின்னடைவையே சந்தித்தது. இருப்பினும் அரசியல் களத்தில் நிலைத்து நின்று, 2000களில் இலங்கை அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்கச் சக்தியாக மாறியது.
2014ம் ஆண்டு அமரசிங்கவுக்குப் பின் ஜே.வி.பி.யின் தலைவரான திஸாநாயக்க, இலங்கை அரசியலின் மாற்றுச் சக்தியாகக் கட்சியை வளர்த்தெடுத்தார். 2014ம் ஆண்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த திசாநாயக்க ஜே.வி.பி.யின் ரத்தம் தோய்ந்த கடந்த வரலாற்றுக்கு மன்னிப்பு கோரினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர்களுக்கு எதிரானவரா திசாநாயக்க?
இலங்கையின் அதிகார அரசியல், ஒற்றையாட்சி – Unitary State என்னும் ஆட்சிமுறைதான் பின்பற்றப்படுகிறது. அனைவருக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் முறை எதுவும் அங்கில்லை. குறிப்பாக, தமிழர்கள், மலையக மக்கள், இசுலாமியர் என எவருக்கும் அதிகாரப் பகிர்வு கிடையாது. இதனாலேயே சிங்களப் பேரினவாதம் அங்கே உயிர்வாழ்கிறது. இதனால் இலங்கையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமெனில் சிங்கள இனவாதத்தையும், பவுத்த மதவாதத்தையும் ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும் என அங்குள்ள அரசியல் கட்சிகள் கருதுகின்றன. அப்போதே பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியும் என்ற சூழலைக் கடந்த 100 ஆண்டுகளாகக் கட்டமைத்து வைத்துள்ளனர். இந்த நிலைப்பாட்டில் இருந்து ஜெ.வி.பி. மாறுபட்டதாகச் சிறு பதிவும் இல்லை. குறிப்பாகத் தமிழர்களுக்கு எதிராக இனப் போர் நிகழ்ந்த போதும் ஒற்றையாட்சி முறைமைக்கு ஆதரவாகவே ஜெ.வி.பி. தன்னைக் காட்டிக்கொண்டது. சிங்கள பெரும்பான்மை, இனவாதம், பவுத்த மதவாதம் ஆகியவற்றைக் கைவிடுவதாகவோ, எதிர்ப்பதாகவோ ஜெ.வி.பி. இந்தத் தேர்தல் வரை பேசியதுகூட இல்லை.
சிங்கள பெரும்பான்மை – பேரினவாத அரசியலே இலங்கையின் மைய அரசியல் நீரோட்டமாகக் கடந்த 75 ஆண்டுகளாக உள்ளதை இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் புரிந்து கொள்ள மறுத்தாலும், ஈழத்தமிழர்களும், மலையகத் தமிழர்களும் இந்த அரசியலைப் புரிந்துகொண்டே வாக்களிக்கிறார்கள். குறிப்பாக, இன அழிப்பிற்குப் பிறகு நடந்த தேர்தல்களில் ஆட்சியைப் பிடித்த கட்சிகளுக்கு தமிழர்கள் வாக்களிக்கவில்லை.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டு இடதுசாரி அதிபர் எனப் போற்றப்படும் திசாநாயக்க இனவாதம் போற்றும் பவுத்தப் பிக்குகளுடன் நெருக்கமான உறவை வளர்த்து, அவர்களது பேராதரவைப் பெற்றே தேர்தலை எதிர்கொண்டார்.
தொடக்கத்திலிருந்தே தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஜே.வி.பி. எடுத்ததில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக, தமிழகத் தொழிலாளர்களை எதிரிகளாகப் பாவித்து அரசியல் செய்த ஒரு கட்சி தன்னை ‘இடதுசாரி’ எனக் கூறிக் கொள்ளும் ஒற்றைக் காரணத்திற்காக, ‘இலங்கை வரலாற்றில் மாற்றம் நிகழும், இடதுசாரி அதிபர் பொறுப்பேற்றிருக்கிறார்’ என, சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு மார்தட்டிக்கொள்ளும் இணைய வாசிகளின் கொண்டாடத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
இடதுசாரி ஆட்சியே சாட்சி!
பல நாடுகளிலும் இடதுசாரிகள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஆனால் இடதுசாரியச் சிந்தனையோடு ஆட்சி நடைபெறுவதில்லை. சர்வாதிகாரத்தைத் தான் கையில் எடுத்துள்ளனர். அல்லது எதிர்க்கருத்தோ, எதிர்க்கட்சிகளோ இல்லாத ‘ஒற்றை தன்மை கொண்ட ஆட்சி’ என்னும் நிலையை நோக்கி நகர்ந்துள்ளனர். உதாரணமாக, இடதுசாரி என்னும் கருத்தியலுக்குத் தாயகமாக இருக்கும் ரஷ்யா, எதிர்க்கட்சியையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழித்தொழித்ததோடு, அண்டை நாடான உக்ரைன் பகுதிகளைத் தாங்கள் நாட்டுக்குள் கொண்டு வர ஓராண்டுக்கும் மேலாகப் போரை நடத்திவருகிறது. அதேபோல், சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் ஆட்சி தன்னை அதிகாரமிக்க ஒற்றை ஆட்சியாக வளர்த்தெடுத்துள்ளது.
இப்படியாக இடதுசாரி கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் ஆட்சியைப் பிடித்ததும் அடக்குமுறையைத் தான் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையிலும் வன்முறையை நிகழ்த்தியதோடு, இன–மதவாதங்களை ஆதரித்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ளது. அது ஆட்சியைப் பிடித்ததும் அடக்குமுறையும் அதிகார போதையையும் கைவிட்டு, ‘இடதுசாரி’ என்ற தனது போலி முகத்தை உண்மை முகமாக மாற்றிக் கொள்ளுமா?
தமிழர்களுக்கு எதிரானவரா திசாநாயக்க?
திசாநாயக்க சார்ந்திருக்கும் ஜே.வி.பி. கட்சித் தமிழர்களையும் முஸ்லிம்களையும் கிட்டத்தட்ட ஒதுக்குகிறது. இதனால் இலங்கையில் எந்த தமிழ் அரசியல் கட்சியும் திசாநாயக்கவையோ அல்லது அவர் ஆதரிக்கும் அரசியலையோ ஏற்கவில்லை. 2005ம் ஆண்டு சுனாமிக்குப் பிந்தைய காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்படுவதை எதிர்த்த காரணத்தினால் தான் சந்திரிகா அமைச்சரவையில் குறுகிய காலம் வரை திசாநாயக்கவால் நீடிக்க முடிந்தது. இதிலிருந்து அவரின் நிலைப்பாடு என்னவென்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அதேபோல், திசாநாயக்க 1987ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் ஜே.வி.பி.யில் இணைந்து ஈடுபட்டார். குறிப்பாக, இந்தியா – இலங்கையின் அமைதி ஒப்பந்தத்தையும் எதிர்த்தார். ஆகவே இந்த நிலைப்பாடு காரணமாக திசாநாயக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டாலும் தமிழர் தொடர்பாக எந்த முன்னேற்றமும் இருக்காது என்பதே பலரின் கருத்தாகவுள்ளது.
ஆக, இலங்கை வரலாறு நெடுகிலும் இடதுசாரி என்னும் வார்த்தைக்கு உண்மையாக இல்லாத ஒரு கட்சியை ‘இடதுசாரி’ எனக் கொண்டாட முடியாது. ஆனால், வரலாறு தெரியாத சிலர் இடதுசாரி ஆட்சி அமைந்ததாகக் கொண்டாடி வருவதுதான் வருத்தமாகவுள்ளது. ஆகவே அவர்கள் வரலாற்றைக் கொஞ்சமாவது வாசிக்கவும் இதுவரை அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் வரலாற்றை மறு வாசிப்பு செய்வதும் அவசர அவசியம்!