வயநாடு நிலச்சரிவுக்கு இதுதான் காரணமா… நீலகிரியில் Debris Flow Landslide ஏற்பட வாய்ப்பா?
‘கேரள மாநிலம் வயநாட்டில், மலைகளின் செம்மண் அடுக்குகளுக்குள் மழைநீர் புகுந்து மண்ணைக் கரைத்ததே நிலச்சரிவுக்குக் காரணம். இதே போன்ற ஆபத்தான பகுதிகள் நீலகிரி மாவட்ட மலைகளிலும் உள்ளன’ என, பேரிடர் மேலாண்மைத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான பகுதிகள் கேரளாவில் உள்ளன.
நிலச்சரிவைப் புவியியல் நிகழ்வாக வரையறுக்கும் வல்லுநர்கள், ‘டெப்ரிஸ் புளோ லேண்ட் ஸ்லிப், லேண்ட் ஸ்லைட், மட் ஸ்லிப், சாயில் பிப்பிங்’ என நிலச்சரிவுகளை வகைப்படுத்துகின்றனர். பாறைகள் இன்றி செம்மண் அதிகமாக உள்ள மலைப் பகுதிகளில் மழைக்காலத்தில் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. இதை, ‘டெப்ரிஸ் புளோ லேண்ட் ஸ்லிப்’ என வல்லுநர்கள் வகைப்படுத்துகின்றனர்.
மலைப் பகுதிகளில் மண் அடுக்குகள் இருக்கும் பகுதிகள் குறித்த புரிதலின்றி மனித நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது, அங்கு இந்த வகை நிலச்சரிவு ஏற்படும். வயநாட்டில் ஏற்பட்டுள்ளது இந்த வகை நிலச்சரிவாக இருக்கலாம்.
மண் கரையும்… நிலத்தை சரிக்கும்!
‘கேரளா வயநாடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மலைகள், செம்மண் அடுக்குகளால் ஆனவை. அங்கு, 60 – 70 அடி உயரத்துக்குச் செம்மண் அடுக்குகள் உள்ளன. மண் அடுக்குகளுக்கு இடையே இயற்கையாகவே நீரோட்டப் பாதைகள் இருக்கும். சாதாரண அளவில் இல்லாமல், குறுகிய நேரத்தில் அதி கனமழை கொட்டித் தீர்க்கையில், அதிக அளவு மழைநீர் மண் மலைகளின் நீரோட்டப் பாதைகளில் செல்லும். அப்போது மண் கரையும்; சில இடங்களில் நீரோட்டம் தடைப் பட்டும், ஓரிடத்தில் தேங்கும் மழைநீரால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து, குழைவுத் தன்மையும் ஏற்படும். இதனால் மண் மலை சரிந்து விழும். இப்படித்தான் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது’ என, சென்னை அண்ணா பல்கலை காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
ஒரே ஆண்டில் 5,000 நிலச்சரிவு
கேரளாவில் தென்மேற்குப் பருவமழைக் காலமான, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்களில் அதிகபட்ச மழை பெய்யும். இதனால், செம்மண் அடுக்கு உள்ள மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
கேரள பேரிடர் மேலாண்மை ஆணைய அறிக்கையில், ‘கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 12ல் நிலச்சரிவு அதிகமாக ஏற்படுகிறது. 2018ல் 5,000 இடங்களில் பெரிய, சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் மட்டும் 3,000க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 155 பேர் வரை இறந்தனர். உள்கட்டமைப்பு உள்ளிட்ட வகையில், ரூ.40,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாய கட்டத்தில் நீலகிரி
‘வயநாட்டில் ஏற்பட்டது போன்ற நிலச்சரிவு அபாயம் நீலகிரி மாவட்டத்துக்கும் அதிகமாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாறைக்குப் பதில் 30–40 அடி உயரம் வரை செம்மண் அடுக்குகள் உள்ளன. அவற்றில் மழைநீர் புகுந்தால் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக www.landslip.org போன்ற ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. மண் அடுக்கு வலுவாக இல்லாத இடங்களில் மனித நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. ரிசார்ட்டுகளும் அகலமான சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் பேரிடரைச் சந்திக்க நேரிடும்’ என, துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.