BSNLக்கு மாறும் மக்கள்; பா.ஜ.க. புத்துயிர் அளிக்குமா… இறுதி உயிர்த் துடிப்பையும் நிறுத்துமா?
கடந்த நிதி ஆண்டில் ‘ஜியோ’ நிறுவனம் தொலைத்தொடர்பில் மட்டும் ரூ.20,600 கோடி லாபம் ஈட்டியது. தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத்தால் இந்த லாபம் இரு மடங்கு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் தனியார் வசம் ஒப்படைக்கும் ஒன்றிய அரசு, தனியார் நெட்வொர்க்குடன் போட்டிப் போடும் வகையில் பி.எஸ்.என்.எல்.க்கு ஊக்கம் தருமா?
உலகிலேயே இரண்டாவது அதிகத் தொலைத்தொடர்பு பயனாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆனால், இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை தனியார் நிறுவனங்களின் கைகளில் சிக்குண்டிருக்கிறது. செல்வம் படைத்தவர்கள் மட்டுமே செல்போன்களைப் பயன்படுத்த முடியும் என்னும் நிலையை மாற்றும் நோக்கத்தில், 2000ம் ஆண்டு ஒன்றிய அரசால் பொதுத்துறை நிறுவனமாக பி.எஸ்.என்.எல். உருவாக்கப்பட்டது. ஆனால், 2014ல் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த பின், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டதோடு, பி.எஸ்.என்.எல்.–ன் உயிர்த் துடிப்பு மட்டுப்படுத்தப்பட்டது.
‘ஜியோ’ அறிமுகம்!
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நான்காவது ஆண்டில், உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்திற்குப் போட்டியிடும் இந்தியாவின் முன்னணி பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி ‘ஜியோ’ நெட்வொர்க்கை 2018ல் அறிமுகம் செய்தார். அதன்பிறகு தான் தனியார் நெட்வொர்க்கின் வளர்ச்சி இந்திய சந்தையில் உச்சத்தைத் தொட்டது. அதற்கு முன்பு, ‘ஏர்செல், ஏர்டெல், வொடோஃபோன்’ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும் ‘ஜியோ’ கொண்டுவந்த பிளான்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக, குறைந்த கட்டணத்துக்கு அதிக டாடாக்களை (DADA), ‘3ஜி, 4ஜி, 5ஜி’ என அதிவேக நெட்வொர்க்களில் வழங்கி, பல கோடி வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்தது ஜியோ. இதனால், நாளுக்கு நாள் ஜியோ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. ஜியோவுடனான போட்டியில் ‘ஏர்செல்’ போன்ற தனியார் நிறுவனங்கள் கூட தாக்குப்பிடிக்காத சூழல் உருவானது. இந்தக் காலகட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஒன்றிய அரசால் கைவிடப்பட்ட நிலையை எட்டி, 2ஜி, 3ஜி நெட்வொர்க் சேவையை மட்டுமே வழங்கி, தனது இறுதி அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது.
சந்தையில் தனக்குப் போட்டியாளர்களே இல்லாத சூழலை உருவாக்கிய ‘ஜியோ’ விலை உயர்வுகளை அடுத்தடுத்து அறிவித்தது. அனைத்து இடங்களிலும் நெட்வொர்க் சிக்னல் மற்றும் அதிவேக டாடா சேவையில் ஜியோவுடன் போட்டியிட முடியாவிட்டாலும் சந்தையில் ஜியோவிற்கு மாற்றாகவுள்ள ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் விலையை உயர்த்தின.
இதனால், சிரமம் ஏற்பட்டாலும் ஜியோ கூறும் தொகையைக் கட்டி சேவையைப் பெறும் நிலைக்கு இந்திய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தனியார் நிறுவனங்கள் ‘5ஜி’ சேவையை வழங்கி வரும் நிலையில், 4ஜி சேவையைக் கூட முறையாக வழங்க முடியாததால் பி.எஸ்.என்.எல். பக்கம் மக்கள் திரும்பவில்லை.
ஆனால் தற்போது ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் மீண்டும் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளன. இதனால் பலரும் கடும் அதிருப்தியில் ‘டாடா’ வேகமில்லை என்றாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் பி.எஸ்.என்.எல்-க்கு மாற ஆர்வம் காட்டி வருகின்றனர். ‘ஜியோ’ விலை உயர்வை அறிவித்த 20 நாட்களில் 2.5 லட்சம் பேர் பி.எஸ்.என்.எல். நெர்வொர்க்கிற்கு மாறியுள்ளனர். இது, இறுதி அத்தியாயத்தை எழுதி வரும் பி.எஸ்.என்.எல்.-க்குப் புத்துயிர் அளித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் ஜியோ தொலைத்தொடர்பில் மட்டும் ரூ.20,600 கோடி லாபம் ஈட்டியது. தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத்தால் இந்த லாபம் இரு மடங்கு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அனைத்தையும் தனியார் வசம் ஒப்படைக்கும் ஒன்றிய அரசு, தனியார் நெட்வொர்க்குடன் போட்டிப் போடும் வகையில் பி.எஸ்.என்.எல்.க்கு ஊக்கம் தருமா? என்னும் கேள்வி எழுந்துள்ளது.
Make in India – முட்டுக்கட்டையா?
இந்தியா முழுவதிலும் பி.எஸ்.என்.எல்-க்கு 80,000 டவர்கள் இருக்கின்றன. அவற்றில், 49,000 டவர்கள் ‘4ஜி’ சேவைக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் வசதி கொண்டவை. மீதமுள்ள டவர்களை மாற்ற முடியாது. புதிய டவர்களை அமைக்கவோ, 5ஜி சேவையைப் பெறவோ பி.எஸ்.என்.எல்.லால் முடியவில்லை.
இந்தியாவில் தயாரித்த பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்னும் ‘Make in India’ திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தியாவில் தொலைத்தொடர்பு சார்ந்த எந்தப் பொருட்களும் தயாரிக்கப்படுவதில்லை. தொலைத்தொடர்பு சேவைக்கான பொருட்களைப் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் இந்திய நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு விதித்துள்ளது. இதனால், 2020ல் ‘டாடா’ (TATA) நிறுவனத்துடன் பி.எஸ்.என்.எல். ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, தேவையான தொலைத்தொடர்பு உபகரணங்களை டாடா நிறுவனம் இந்தியாவிலேயே தயாரித்து, பி.எஸ.என்.எல்.–க்கு வழங்க வேண்டும். அப்படி வழங்கினாலும் 5ஜி சேவையை அளிக்கும் தகுதியை பி.எஸ்.என்.எல். பெறுமா என்பது சந்தேகமே.
தனியாருக்கு அரசுதான் முதலீட்டாளர்!
‘வொடோஃபோன், ஐடியா’ போன்ற நிறுவனங்களின் பெரிய முதலீட்டாளரே இந்திய அரசுதான். அவர்களுக்கு அனைத்து இடங்களிலும் டவர்கள் இருக்கின்றன. அதைப் பி.எஸ்.என்.எல். சேவைக்குப் பயன்படுத்த ஒன்றிய அரசு ஒப்பந்தம் போடலாம். ஆனால் பா.ஜ.க. அரசு அதைச் செய்ய விரும்பவில்லை. தனியார் நிறுவனத்தின் முதலீட்டாளராக இருக்க அரசால் முடிகிறது. ஆனால், அரசின் பொதுத்துறைச் சேவையை மேம்படுத்த முனைப்புக் காட்ட அரசு தயங்குகிறது. இதனால் பொதுத்துறை நிறுவனம் விரைவில் அழியும் என்பதில் சந்தேகமில்லை.
ஏன் பி.எஸ்.என்.எல். தேவை?
லாப நோக்கத்திற்காக மட்டுமே செயல்படும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மலைப்பகுதிகளில் டவர்களை அமைப்பதில்லை. குறிப்பாக, மலைப்பகுதிகளில் இருக்கும் குறைந்தளவு மக்களால் கிடைக்கும் குறைந்த லாபத்திற்காக அதிக ரிஸ்க் எடுத்து டவர்கள் அமைக்கத் தனியார் நிறுவனங்கள் தயாராக இல்லை.
ஆனால், மக்களுக்குச் சேவையளிக்கும் நோக்கில் இயங்கும் பி.எஸ்.என்.எல். மலைகளில் டவர் அமைத்து, மலைப் பகுதி மக்களுக்கும் எளிதாகத் தொலைத்தொடர்பு சேவை பெற வழிவகை செய்துள்ளது.
அதேபோல், புயல், மழை, வெள்ள பாதிப்பு போன்ற பேரிடர் காலங்களில் தனியார் நிறுவனங்கள் முடங்குகின்றன. இடர் காலங்களில் பி.எஸ்.என்.எல். மட்டுமே தடையின்றி சேவை அளிப்பதைச் சமீப ஆண்டுகளில் நாம் கண்கூடாகப் பார்த்தோம்.
உலக அளவில் 2,600 மில்லியன் டாலராக (ரூ.21.76 ஆயிரம் கோடி) இருக்கும் தொலைத்தொடர்புத் துறைகளின் வர்த்தகம் இன்னும் சில ஆண்டுகளில் 3,800 மில்லியன் டாலராக (ரூ.31.81 ஆயிரம் கோடி) அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுத் துறை நிறுவனத்தைக் காப்பாற்றினால் அரசுக்கு லாபம் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அழிவுப் பாதையில் இருந்து மீளத் துடிக்கும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.–ன் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மன்றத்தில் வலுத்து வருகிறது. ஆனால், தனியார்மயத்தை ஊக்குவிக்கும் பா.ஜ.க. அரசு அதைச் செய்யுமா?