ரோட்டுக்குக் கோடு: தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் ‘மெகா’ ஊழல்: ரூ.1,200 கோடி இழப்பு என ஐகோர்ட்டில் தகவல்
தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் ‘ரோடு மார்க்கிங்’ செய்வதில் மட்டுமே, தமிழ்நாடு அரசுக்கு ரூ.1,200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தென்னிந்திய காண்ட்ராக்டர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்த தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததும் முறைகேடு நிறுவனத்துடன் கூட்டு வைத்து ஊழலுக்குத் துணை போவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
புதிதாக சாலைகள் அமைக்கும்போதும், சாலைகளைச் சீரமைக்கும்போதும், சாலையோர எல்லை மற்றும் நடுப்பகுதியை பிரித்துக் காட்ட, வெள்ளைக் கோடுகள் இடுப்படுகின்றன. சாலை ஒப்பந்தப் பணிகளின் ஒரு பகுதியாகவே இந்தப் பணியும் நடந்து வந்தன. ஆனால் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக, கோடு போட மட்டும் தனியாக ‘டெண்டர்’ விடப்படுகிறது.
சாலைகளில் கோடு போடுவது மற்றும் ஒளிரும் விளக்குகள் (ஸ்டட்ஸ்) பொருத்துவதற்கும் சேர்த்து, ‘ரோடு மார்க்கிங் அண்ட் ரோடு பர்னிச்சர்’ என்ற பெயரில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டெண்டர் முறை தொடங்கப்பட்டது. இந்த டெண்டர்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட வெவ்வேறு துறைகளின் சார்பில், சாலைகள் அமைக்கும் பணி நடந்தாலும், அந்த சாலைகளில் கோடு போடுவது, ‘ஸ்டட்ஸ்’ பொருத்துவது, வழிகாட்டி போர்டுகள் வைப்பது போன்ற அனைத்துப் பணிகளும், புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சியாக எதிர்ப்பு;
ஆட்சியைப் பிடித்ததும் கைகோர்ப்பு
இதுபற்றி அப்போதே எதிர்க்கட்சிகள் (தி.மு.க. தரப்பு) தரப்பில் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் ஆட்சி மாறிய பின், எதிர்ப்புகள் கரைந்தன; முறைகேடுகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, அ.தி.மு.க. ஆட்சியில் கோலோச்சிய அதே நிறுவனத்துக்கு இரட்டிப்பாகப் பணிகள் வழங்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. வெகுநாட்களாகப் புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரம், இப்போது ஐகோர்ட் வரை சென்றுள்ளது.
இது தொடர்பாக, தென்னிந்திய காண்ட்ராக்டர்கள் சங்கம் போர்க்கொடி துாக்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஒப்பந்தப்பணிகளை மேற்கொள்ளும் காண்ட்ராக்டர்களை உள்ளடக்கிய இந்த சங்கம், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்குப் புகார் தெரிவித்தது. எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ‘ரோடு மார்க்கிங்’கில் நடக்கும் ஊழல் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், சாலை சீரமைப்புப் பணியிலேயே, ‘ரோடு மார்க்கிங்’ பணியையும் உள்ளடக்கி டெண்டர் விட நெடுஞ்சாலைத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனு விசாரணைக்கு (W.P., No. 10879/2024) ஏற்கப்பட்டுள்ளது.
50 சதவீதம் லாபம்!
தென் மண்டல காண்ட்ராக்டர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கலாகியுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ள விபரங்கள், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதில், ‘கடந்த மூன்றாண்டுகளில், ‘ரோடு மார்க்கிங்’கிற்கு தனியாக டெண்டர் விட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. டெண்டர் தொகையில் 50 சதவீதம் லாபம் வைத்து தொகை நிர்ணயிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘ரூ.100 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளை மேற்கொள்ள ரூ.25 கோடி மதிப்பிலான இயந்திரங்களைக் கொண்ட நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். ஆனால், இந்தப் பணிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் போதுமென்று நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் தரம் குறைகிறது. கடந்த மூன்றாண்டுகளில், இந்த டெண்டர்களில் மட்டுமே, தமிழக அரசுக்கு ரூ.1,200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், பினாமி நிறுவனங்கள் ரூ.600 கோடிக்கு லாபம் பார்த்துள்ளன. இதில் 20 சதவீதம், அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது’ என்று கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
சி.பி.ஐ. விசாரணை தேவை!
இந்த மனுவின் அடிப்படையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த ‘ஹரி வே லைன்ஸ்’ நிறுவனத்துக்கும் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே நிறுவனம் தான், கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் இதே பணிகளைப் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செய்து வந்துள்ளது. அதனால் இந்த விவகாரத்தை, தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிப்பதை விட சி.பி.ஐ. விசாரித்தால் இரு ஆட்சியிலும் நடந்த பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் அம்பலத்துக்கு வரலாம்!