ஒருங்கிணைப்பு கூடாது… கூட்டணியே தலைகாக்கும்: பழனிசாமியின் வியூகம் என்ன?
தி.மு.க.வுக்குத் தொடர் வெற்றியைத்தேடி தந்தது அவர்கள் அமைத்த பலமான கூட்டணி மட்டுமல்ல… அவர்கள் முன்வைத்த கருத்தியலும்தான். குறிப்பாக, சனாதனம், வகுப்புவாதங்களுக்கு எதிராகக் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிய முதல்வர் ஸ்டாலின், ‘பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்தியல் யுத்தம்’ என, பல மேடைகளில் முழங்கினார். அதன்படி அனைத்துத் தேர்தல்களிலும் தொடர் வெற்றியையும் பதிவு செய்தார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தொடர் தோல்வியே மிஞ்சியதால், ஸ்டாலின் முன்வைத்த கருத்தே சரியானது என்பதை உணர்ந்த பழனிசாமி…
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கான காரணங்கள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. தோல்விக்கான காரணங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனையைத் தொடங்கியுள்ள வேளையில், ‘சிதறுண்டு இருக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைத்துத் தேர்தலை எதிர்கொள்வதே வெற்றிக்கு வித்திடும்’ என, அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் முன்வைத்த கருத்து மேலும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ’அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும்’ என்னும் குரல், கட்சியின் அனைத்து மட்டத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு பற்றிக் கடந்த சில ஆண்டுகளாகவே சசிகலா பேசி வருகிறார். ஆனால், அதற்குப் பழனிசாமியிடம் எந்த ரியாக்ஷனுமில்லை. பா.ஜ.க.வுடன் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்துத் தோல்வியைத் தழுவிய பிறகு, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பு குறித்து பன்னீர்செல்வம் பேசித் தொடங்கியுள்ளார்.
இதற்கு முன், பன்னீர்செல்வம் நடத்திய ‘தர்மயுத்தத்தை’ ஆதரித்து, அவருடன் இணைந்திருந்த ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி ஆகியோர், பன்னீர்செல்வத்தின் அணியிலிருந்து வெளியேறி, கேசி பழனிச்சாமியோடு இணைந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழுவை நிறுவினர்.
இப்படி, ‘அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு’ குறித்து விலகியவர்களும் விலக்கப்பட்டவர்களும் சத்தமாகவே பேசி வருகின்றனர். ஆனால், இவர்களின் குரல் கட்சிக்கு வெளியில் இருந்தே எழுப்பப்படுபவையாகவே கருதப்பட்டன. தற்போது அது கட்சிக்குள்ளும் கேட்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சில தினங்களுக்கு முன், செங்கோட்டையனின் இல்லத்தில் நடந்த விழாவில் அ.தி.மு.க.வின் முக்கியமான நிர்வாகிகள் பழனிசாமியுடன் தீவிரப் பேச்சுவார்த்தையில் இறங்கினர். ‘அ.தி.மு.க. ஒன்றிணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும்’ எனவும் வலியுறுத்தியுள்ளனர். அதற்கும் பழனிசாமி ஒத்துழைக்க வில்லை. இதுதான் பழனிச்சாமிக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், கட்சியின் முக்கியத் தலைவர்கள் கூடும் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குரல் ஓங்கி ஒலிக்கக் கூடாது என்பதால், ‘ஒருங்கிணைப்பு குறித்து யாரும் பேசக் கூடாது’ என ஆர்டர் போட்டார் பழனிச்சாமி. அதன்படி, ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்புப் பற்றி எந்த சத்தமும் எழவில்லை. ஆனால், ‘சரியாகக் கூட்டணியை அமைத்திருந்தால் வெற்றியைப் பெற்றிருக்கலாம்’ என்ற கருத்தை முக்கிய நிர்வாகிகள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக, ‘பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தால், வட மாவட்டங்களில் குறிப்பிட்ட வெற்றியைப் பெற்றிருக்கலாம்’ என்பது நிர்வாகிகளின் ஒருமித்த குரலாக ஒலித்திருக்கிறது. இதை எதிர்பார்த்திருந்த பழனிசாமி, உடனடியாக, ‘2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமையும்; அது நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரும்’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், பிற குழுக்களில் இருக்கக் கூடிய அ.தி.மு.க. தொண்டர்களைக் கட்சிக்குள் கொண்டுவர நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் பழனிச்சாமி. ஆம், தலைவர்களுக்கு ‘நோ’ சொல்லிவிட்டு… தொண்டர்களுக்கு ‘எஸ்’ சொல்லியிருக்கிறார்.
இந்த ஒருங்கிணைப்புக் குரல்கள் இப்போது ஒலிக்கத் தொடங்கியவை அல்ல. அ.தி.மு.க. சருக்கலைச் சந்தித்த போதெல்லாம் ஒருங்கிணைப்பு என்ற வார்த்தையை மூத்த நிர்வாகிகள் உச்சரிக்கத் தவறியதில்லை. 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னும் தோல்விக்குப் பின்னும் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்னும் பேச்சு எழுந்தது. ஆனால், அதனை மறுத்தார் பழனிசாமி. அதன்பின், உள்ளாட்சித் தேர்தலில் தொடர் தோல்வியைச் சந்தித்தது அ.தி.மு.க. அப்போதும் ஒருங்கிணைப்புப் பேச்சை மூத்தவர்கள் முணுமுணுக்காமல் இல்லை. அவை எதுவும் பழனிசாமியிடம் பலிக்கவில்லை. தற்போது நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், சரியான கூட்டணியை அமைக்காததால் பா.ஜ.க. தனித்து களம் கண்டது. கோவை போன்ற அ.தி.மு.க. கோட்டையில் பா.ஜ.க. இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ‘மூன்று, நான்காம் நிலையைக் கனவாகக் கொண்டு, நோட்டாவுக்குப் போட்டியாகவும் இருந்த தேசிய கட்சிகள், தமிழகத்தில் வளரும் நிலையைப் பழனிச்சாமியின் தவறான முடிவுகளே உருவாக்கின’ என, அரசியல் விமர்சகர்கள் மட்டுமின்றி, அ.தி.மு.க. தொண்டர்களும் பேசத் தொடங்கியுள்ளனர். எதிர்க்கட்சிகள், பத்து தோல்வி பழனிசாமி’ என்ற ஹேஸ்டேக்களையே உருவாக்கிக் கலாய்க்கத் தொடங்கியுள்ளன. இதனால் தான் ஒருங்கிணைப்புக் குரல் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
‘தேர்தலில் தோல்வியைத் தவிர்க்க ஒருங்கிணைப்பு அவசியம்’ என, அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளும் தொண்டர்களுமே வலியுறுத்தியும் ஏன் அதை ஏற்கத் தயங்குகிறார் பழனிச்சாமி என்ற கேள்வி பலருக்கும் எழுகின்றன. அது தயக்கமில்லை… அதன்பின் அவரின் வியூகம் ஒழிந்திருக்கிறது.
வியூகம் என்ன?
தி.மு.க.வுக்குத் தொடர் வெற்றியைத்தேடித் தந்தது அவர்கள் அமைத்த பலமான கூட்டணி மட்டுமல்ல. அவர்கள் முன்வைத்த கருத்தியலும்தான். குறிப்பாக, சனாதனம், வகுப்புவாதங்களுக்கு எதிராகக் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிய முதல்வர் ஸ்டாலின், ‘பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்தியல் யுத்தம்’ என, பல மேடைகளில் முழங்கினார். அதன்படி அனைத்துத் தேர்தல்களிலும் தொடர் வெற்றியையும் பதிவு செய்தார்.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தொடர் தோல்வியே மிஞ்சியதால், ஸ்டாலின் முன்வைத்த கருத்தே சரியானது என்பதை உணர்ந்த பழனிசாமி, அக்கருத்துக்களைப் பின்பற்றும் வகையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது மட்டுமின்றி, கடுமையான வார்த்தைகளால் பா.ஜ.க.வை விமர்சிக்கவும் செய்தார். கூட்டணி தர்மத்தால் பா.ஜ.க.வின் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களுக்கும், சட்டத்திருத்தங்களுக்கும் பல்வேறு திட்டங்களுக்கும் மக்களவையில் வாக்களிக்க நேர்ந்ததாக, மக்கள் மன்றத்தில் மன்னிப்புக் கோரும் வகையில் மேடைகளில் பேசவும் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. கூட்டணியை உடைத்து, வாக்குவங்கியுள்ள கட்சிகளை மட்டுமின்றி, கருத்தியல் ரீதியில் தனதுக்குப் பலம் தரும் கட்சிகளையும் தலைவர்களையும் தன் பக்கம் ஈர்க்கும் திட்டத்தையும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார். அந்தத்திட்டம் கைகூடினால், ‘தொடர் தோல்வி பழனிசாமி’ என்ற விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, கட்சிக்குள் இழந்த செல்வாக்கை மீட்பதுடன் ஒருங்கிணைப்பு கருத்தையும் ஒடுக்கிவிடலாம் எனக் கருதுகிறார்.
அதற்கான வேலையைக் கடந்த தேர்தலின்போதே பழனிசாமி தொடங்கிவிட்டதை உறுதிப்படுத்தும் வகையில், அ.தி.மு.க. கூட்டணியில் இணைய தனக்குப் பழனிசாமி தூது அனுப்பியதை மேடையிலேயே போட்டு உடைத்தார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்.
ஸ்டாலின் கட்டமைத்துள்ள கருத்தியல் கூட்டணியை உடைக்கும் முயற்சி பலன் தராததால், 2026 தேர்தலுக்குள் வேறு ஒரு பலமான கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறார் பழனிசாமி. ஏற்கனவே, தே.மு.தி.க. – அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவரத் தோட்டத்திற்குத் தூது விட்டும், மத்திய அமைச்சராகும் ஆசையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தது பா.ம.க. 2026ல் பா.ம.க.வைக் கூட்டணிக்குள் கொண்டுவந்தால் மட்டுமே தன் திட்டம் பலன் தரும் என்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையே பா.ம.க.வுக்கு விட்டுக் கொடுத்துள்ளார் பழனிசாமி.
பா.ம.க.வுக்காகவே இம்முடிவை பழனிசாமி எடுத்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், ‘அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். பா.ம.க.வுக்கு வாக்களியுங்கள்’ எனப் பேசினார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
இதற்கு முந்தைய தேர்தல்களில் பழனிசாமி வகுத்த வியூகங்களும் திட்டங்களும் கட்சிக்குப் பின்னடைவைத் தந்ததால் தற்போது பழனிசாமி வகுத்திருக்கும் வியூகமும் அதற்காக இடைத்தேர்தலையே விட்டுக் கொடுத்ததையும் சகித்துக்கொள்ள முடியாத முக்கிய தலைவர்கள், ‘கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும்’ என வலியுறுத்துகின்றனர்.
சமீபத்தில் ஜானகி கடிதம் போன்று சசிகலா கடிதம் கொடுத்தால் ஒருங்கிணைப்பு நடக்க வாய்ப்பிருப்பது போலப் பழனிசாமி பேசினாரே? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆம், எப்படி என்ன இருந்தாலும், சசிகலாதான் பழனிசாமிக்கு முதல்வர் வாய்ப்பை வழங்கினார். அதனைச் சரியாகப் பயன்படுத்தி கட்சி, ஆட்சி என இரண்டையும் தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார் பழனிசாமி என்பது வேறு கதை. அதுதவிர, சசிகலா எதிர்பார்ப்பது கட்சி அதிகாரம்தானே தவிர, ஆட்சி அதிகாரத்தில் தலையை நுழைக்க மாட்டார். அதனால் சசிகலாவை மட்டும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை பழனிசாமிக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மற்ற தலைவர்கள் கூறுவது போல் கட்சியை ஒருங்கிணைத்தால், ஆட்சி – அதிகாரத்தில் பன்னீர் செல்வமும், டி.டி.வி.தினகரனும் பங்கு கேட்பர். மேலும் தன் மீதான அனைவரது குற்றச்சாட்டுகளும் உண்மைதான் என்பதைத் தானே ஒப்புக்கொண்டதாகவும் மாறிவிடும். அதனால், ‘தனி ஒருவனாக’ தன் கூட்டணி வியூகத்தை வெற்றியடைச் செய்யப் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார் பழனிசாமி.