பேரழிவின் வடுவாக வயநாடு: 40 ஆண்டுகள் கடந்து அதே இடத்தில் நிலச்சரிவு!
1984ல் நிலச்சரிவு ஏற்பட்ட போது ஒரே நாளில் 340 மி.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. இப்போது ஏற்பட்டது போல் அப்போதைய நிலச்சரிவின் போதும் சாலியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஆற்றில் இறந்த உடல்கள் மிதந்ததாகவும் பலரது உடல்கள் காணாமல் போனதாகவும் அப்போதைய அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
வயநாட்டில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கடும் பாதிப்பைச் சந்தித்த முக்கியமான கிராமம் முண்டக்கை. கடந்த ஜூலை 30ம் தேதி நடந்த நிலச்சரிவில் இந்தக் கிராமமே மண்ணில் புதையுண்டது. தோண்டத் தோண்டச் சடலங்கள் கிடைக்கின்றன. அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் மண்ணில் புதைந்துள்ளனர். தற்போது வரை 270க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கேரள வரலாற்றில் நடந்த மிக மோசமான பேரழிவாக இது உள்ளது. வயநாட்டில் ஏற்படும் முதல் நிலச்சரிவா இது?
கடந்த 40 ஆண்டுகளில் இரண்டு மோசமான நிலச்சரிவுகளைக் கண்டுள்ளது வயநாட்டில் உள்ள முண்டக்கை கிராமம். 1984ல் நடந்த நிலச்சரிவில் சிக்கி 14 பேர் மரணமடைந்தனர். அதனோடு ஒப்பிட்டால் இந்த நிலச்சரிவின் தாக்கம் அதிகம்தான். 1984ல் நிலச்சரிவு ஏற்பட்ட போது, ஒரே நாளில் 340 மி.மீ., மழை பெய்துள்ளது. அப்போது சாலியாற்றில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. ஆற்றில் இறந்த உடல்கள் மிதந்ததாகவும் பலரது உடல்கள் காணாமல் போனதாகவும் அப்போதைய அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
அதன்பின், ’கோழிக்கோடு – வயநாடு’ எல்லைப் பகுதியில் அதிகமான நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே ஆராய்ச்சியாளர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் முண்டக்கை கிராமத்தில் இரண்டாவது முறையாகக் கடந்த 2019ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அப்பகுதியில் 24 மணி நேரத்தில் 240 மி.மீ., மழை பெய்தது. முன்னெச்சரிக்கையாக முண்டக்கை பகுதியில் உள்ள 34 குடும்பங்களைச் சேர்ந்த 177 பேர் வெளியேற்றப்பட்டனர். முன்கூட்டியே மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. அந்த நிலச்சரிவில் நான்கு வீடுகள் மட்டும் சேதமடைந்தன.
தற்போது வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 270க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 150க்கும் அதிகமானவர்கள் நிலை என்னானது என்றே தெரியவில்லை. மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றே கணிக்கப்படுகிறது. இதே மாதத்தில் 1984ல் இந்தக் கிராமம் நிலச்சரிவைச் சந்தித்தது. 40 ஆண்டுகள் கடந்து அதே மாதத்தில் மற்றொரு பேரழிவைச் சந்தித்துள்ளது முண்டக்கை கிராமம். ஆனால், இம்முறை கேரள வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான பேரழிவாகவே இது மாறியுள்ளது.