வாக்கு வங்கி அரசியல் செய்வது யார்?காங்கிரஸா? பாஜகவா?
இந்தியாவில், 7 கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தலில் முதல் இரண்டு கட்ட தேர்தல் மட்டும்தான் நிறைவடைந்துள்ளது. இதனால் தேர்தல் களத்தில் பிரதான தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இடையே தீவிரமாகக் கருத்து மோதல் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, ஒருவர் மாற்றி ஒருவர் கட்சிக்கும் இருக்கும் வாக்கு வங்கி அரசியல் என்ன என்பதைக் குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். வாக்கு வங்கி அரசியல் குற்றச்சாட்டுகளின் தொகுப்பு இதோ!
காங்கிரஸ் வாக்கு வங்கி என பாஜக முன்வைக்கும் வாதங்கள்:
- கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான பிஎஃப்ஐ-க்கு ஆதரவு அளித்துள்ளது.
- அரசியலுக்காக நவாப்புகள், நிஜாம்கள், சுல்தான்கள் மற்றும் பாட்ஷாகளின் அடாவடிகள் குறித்து அமைதி காக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி. ஆனால், இந்து ராஜாக்களை அவமதித்துப் பேசி வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்.
- துவாரகாவில் நீருக்கடியில் மோடி பிரார்த்தனை செய்ததைக் கேலி செய்தார் ராகுல் காந்தி. இதுவும் “வாக்கு வங்கி அரசியலுக்காக” ராகுல் காந்தி செய்ததது தான்.
- ராமர் கோவிலைக் கட்டக் கூடாது என்பதில் காங்கிரஸ் தீவிரமான முடிவில் இருந்தது. கோவில் திறப்புக்கு சில நாட்களுக்கு முன்னரும் கூட அதைத் தடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இப்படியாக பல ஆபத்தான வாக்கு வங்கி அரசியலைக் காங்கிரஸ் கையிலெடுத்திருப்பதாகக் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது பாஜக தரப்பு.
பாஜக வாக்கு வங்கி அரசியல் எனக் காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்:
- வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பாஜக அரசு அமல்படுத்துவதாகக் கூறியது. இதனால், இஸ்லாமியர்கள் எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்ய பாஜக திட்டமிட்டிருப்பதாகக் காங்கிரஸ் கூறுகிறது.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது எனப் பிரதமர் மோடி பேசினார். இதுவும் இந்து மக்களின் வாக்கு வங்கியைக் கவர பாஜக கூறியதாகப் பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 3. தேர்தல் நடக்கும் நிலையில், அவசர அவசரமாக திறக்கப்பட்ட ராமர் கோவில் பின்னணியில் இந்து மக்களின் வாக்கு வங்கி தான் காரணம் என்னும் வாதம் வைக்கப்பட்டது.
பாஜகவின் ஓபிசி வாக்கு வங்கியை வலுப்படுத்துவதில் பிஎம் விஸ்வகர்மா போன்ற திட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், ஓபிசி மக்களுக்குப் பிரதிநிதித்துவத்தைப் பாஜக வழங்கியதாகக் கூறி முன்வைக்கும் முக்கியமான வாக்கு வங்கி பிரச்சாரங்கள் என சொல்லப்படுகிறது.
இப்படியாக, இந்த இரு தேசிய கட்சிகளும் வெளிப்படையாக எதிர்த்தரப்பினரின் வாக்கு வங்கி என்ன? என்பதை வெளிப்படையாகக் கூறி விமர்சித்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது யாருக்குப் பலனளிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.