Sunday, December 22, 2024
CriticsExplainerPolitics

சிவனைப் பார்த்ததும் பா.ஜ.க. அலறியது ஏன்? சாவர்க்கர் தாக்கப்பட்டாரா?

காங்கிரஸின் தொடர்ச்சியான ஆட்சியில் அதிருப்தியுற்ற மக்கள், ஆட்சி மாற்றத்தை விரும்பினர். அப்போது சரியாகக் காய்களை நகர்த்தி, டிஜிட்டல் வளர்ச்சியை நுட்பாமாகப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ஆனால் மக்கள் விரும்பிய ஆட்சியாக அது அமைந்ததா என்பது வேறு கதை. சார்வர்க்கரின் கனவுகளுக்கு உயிர்கொடுக்க முயன்ற பா.ஜ.க. பன்மைத் தன்மைக்கு எதிரான சாவர்க்கரின் கருத்தாக்கங்களால் ஆட்சியைத் தக்கவைப்பதும் தொடர்வதும் சாத்தியமற்றது என்பதை உணர்ந்தது. உடனடியாகச் சாவர்க்கரின் தத்துவங்களில் தளர்வுகளை ஏற்படுத்தி, சிவனை போற்றுவதாகக் காட்டிக் கொண்டது. அதே சிவனைக் கொண்டு பா.ஜ.க.வின் நுண் அரசியலைத் தகர்த்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்.

’Rama has made this land holy and happy’ இது யாருடைய கருத்து தெரியுமா? சாவர்க்கர் எழுதிய ’The essentials of Hindutva’ என்னும் புத்தகத்தில் பல முறை இடம்பெற்ற கருத்து இது. சாவர்க்கர் அந்த புத்தகத்தில் எழுதிய ஒவ்வொரு வரிகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பதையே ஆர்.எஸ்.எஸ். மட்டுமின்றி அதன் வழித் தோன்றிய பா.ஜ. கட்சியும் லட்சியமாகக் கொண்டியங்கி வருகின்றன. அந்த வகையில்தான் ராமனைப் பிரதானப்படுத்தி அரசியலை முன்னெடுத்து வருகிறது பா.ஜ.க. குறிப்பாக, ராமர் கோவில் திறப்பு போன்றவற்றை மிகவும் பிரமாண்டமாக நடத்தியது. அது அவர்களுக்குப் பெரிய அளவில் வாக்குகளை அறுவடை செய்து தரும் என்றும் எண்ணியது. இப்படி ராமனை அடியொட்டிய கருத்துக்களை முன்வைத்தது பா.ஜ.க.

சாவர்க்கர் படத்தை வணங்கும் பிரதமர் மோடி.

சரி, இதைப் பற்றி இப்போது பேச வேண்டிய தேவை என்ன?

சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி மக்களவையில் சிவனின் படத்தைக் காட்டினார். ராகுலின் செயல் ஒட்டுமொத்த பா.ஜ.க.வினரையும் அலறச் செய்தது. மேசையைத் தட்டி கூச்சலிட்டு அமளியில் ஈடுபட முயன்றனர். சபாநாயகர் ஓம் பிர்லா, கடவுள் படங்களில் அவையில் காட்டுவது தவறு என்றார்.

எதையும் கண்டுகொள்ளாத ராகுல் சிவனின் படத்தைக் கையில் வைத்துக் கொண்டு, ‘‘இந்துக் கடவுளான சிவனின் படத்தைக் காட்ட அனுமதி இல்லையா?’’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் தொடர்ந்தவர், “சிவன் கையிலிருக்கும் திரிசூலம் வன்முறைக்கானது அல்ல, அகிம்சைக்கானது. இந்து மதம் அமைதியை மட்டுமே போதிக்கிறது. தங்களை இந்து என, எப்போதும் கூறிக்கொள்பவர்கள் வன்முறையையும், வெறுப்பையும் மக்களிடையே தூண்டிவிடுவதை முழுநேர வேலையாகச் செய்கின்றனர். பிரதமர் மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பற்றித்தான் பேசுகிறேன். உங்களை நீங்கள் ஒட்டுமொத்த இந்து சமூகமாகக் காட்டிக் கொள்ளத் தேவையில்லை. சிவன் படத்தைக் காங்கிரஸ் காட்டியதால் சிலருக்குக் கோபம் வந்திருக்கலாம்” என்றார்.

ஏன் பாஜக கோபமடைந்ததாக ராகுல் கூறினார்?

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சிவன் படத்தைக் காட்டியதுமே பா.ஜ.க.வினருக்கு ஏன் கோபம் வந்தது என்பதைக் காணும் முன், மோடி ஏன் வாரணாசியில் போடடியிட்டார் என்பது குறித்துப் பார்க்க வேண்டும்.

காங்கிரஸின் தொடர்ச்சியான ஆட்சியில் அதிருப்தியுற்ற மக்கள், ஆட்சி மாற்றத்தை விரும்பினர். அப்போது சரியாகக் காய்களை நகர்த்தி, டிஜிட்டல் வளர்ச்சியை நுட்பாமாகப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ஆனால் மக்கள் விரும்பிய ஆட்சியாக அது அமைந்ததா என்பது வேறு கதை. ஆனால் பா.ஜ.க. சார்வர்க்கரின் கனவுகளுக்கு உயிர்கொடுக்கும் ஆட்சியை செய்தது. குறிப்பாக, தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பா.ஜ.க. சாவர்க்கரையும் அவர் முன்வைத்த ‘இந்துத்துவா, ராமர், ஹிந்தி’ போன்ற கருத்தாக்கங்களை முன்வைத்தும் தான் அரசியல் செய்து வந்தது. பன்மைத் தன்மைக்கு எதிராக சாவர்க்கரின் கருத்தாக்கங்களால் மக்கள் அதிருப்தியடைந்ததை உணர்ந்த பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைப்பதும் தொடர்வது சிக்கலுக்கு உள்ளாகும் எனக் கருதியது. இதையடுத்து சாவர்க்கரின் கருத்துக்களில் சற்றுத் தளர்வுகளை ஏற்படுத்தியது. ராமன் மட்டுமல்ல சிவனும் நாங்கள் போற்றும் கடவுள் தான் என மேடைகளில் பேசினார் பிரதமர் மோடி.

மக்களிடம் தோன்றிய வெறுப்புணர்ச்சி வெளிப்படையாக வெளியில் தெரிந்த போது, ‘அனைத்து இந்து கடவுள்களும் எங்களுக்கு ஒன்றுதான்’ எனும் தொனியில் பேசியது பா.ஜ.க. அப்படியென்றால் சிவனின் உறைவிடமாகக் கருதப்படும் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி, பிரதமர் ஆகும் முன்னரே ஏன் அங்கு போட்டியிட வேண்டும்? என்ற கேள்வி எழுவது சரிதான்.

2014 மக்களவைத் தேர்தலின் போது, சாவர்க்கரின் கருத்துக்களை பகிரங்கமாக முன்வைக்காமல், பா.ஜ.க. என்பது அனைத்து இந்துக்களுக்குமானது என்று கூறிக் கொண்டது. அதை வெகுமக்களுக்கு நம்பச் செய்ய, சைவம் கோலோச்சிய வாரணாசியில் களம் கண்டார். இது, ராமனைப் பின்பற்றுவோரை அதிருப்தியடையச் செய்யாதா என்ற கேள்வி எழலாம். அவர்களைச் சமாதானப் படுத்தும் பல திட்டங்களை தேர்தல் வாக்குறுதியில் வைத்திருந்தது பா.ஜ.க. அதில் மிக முக்கியமான ஒன்று, ராமனுக்கு அயோத்தியில் பிரம்மாண்டமான கோவில் கட்டுவது.

இப்படி, சைவர்களை உள்ளடக்கிய வைணவர்களைத் திருப்திப்படுத்திய வைதீக அரசியலை குறிப்பாக, சாவர்க்கர் கனவை நனவாக்கும் இந்துத்துவத்திற்கான நுண் அரசியலைச் செய்தது பா.ஜ.க. ஆனால், தொடர் ஆட்சியில் பா.ஜ.க.வின் பல செயல்களும் திட்டங்களும் வைணவத்தை முன்வைத்த இந்துத்துவத்தின் புனித தேசியத்தைக் கட்டமைப்பதாகவே இருந்தது. இதை மக்களும் உணரத் தொடங்கினர். இதை அறிந்த பா.ஜ.க. ஆட்சியை இழந்தால், சாவர்க்கரின் கனவு நாடான ‘Hindu Holy Land – இந்து புனித பூமி’யை உருவாக்க முடியாமல் போகலாம் என பயந்தது. இதற்காக தன் ராமனை முதன்மைப்படுத்தும் திட்டங்களில் சற்றுத் தளர்வுகளை ஏற்படுத்திக் கொண்டது.

மோடி உச்சரித்த ’ஹர ஹர மாகதேவ்’!

தொடர் பத்தாண்டு ஆட்சியில் எப்போதும் ராமனின் பெயரையே உச்சரித்த பிரதமர் மோடி, கடைசி இரண்டு ஆண்டுகளில் சிவனின் பெயரையும் உச்சரிக்கத் தொடங்கினார். குறிப்பாக, கடந்த ஆண்டு வாரணாசியில் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் ’ஹர ஹர மாகதேவ்’ என முழங்கினார். மேலும் தமிழகத்தில் சத்குரு நடத்திய சிவராத்திரி நிகழ்விலும் மோடி கலந்துகொண்டார். இவையெல்லாவற்றையும், சைவர்களைத் தங்கள் பக்கம் தக்கவைப்பதற்காகவே பா.ஜ.க. செய்தது என்பதில் மாற்றுக் கருத்து எழ வாய்ப்பில்லை.

சைவர்களைத் தன் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தும் பா.ஜ.க.வின் நுண் அரசியலை மக்களுக்கு உணர்த்தவே சிவன் படத்தைக் கையில் எடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல். அவரது பேச்சிலும், ‘தங்களை இந்து (சாவர்க்கரின் ராமனை முன்வைத்த இந்து) என, எப்போதும் கூறிக்கொள்பவர்கள் வன்முறையையும், வெறுப்பையும் மக்களிடையே தூண்டிவிடுவதை முழுநேர வேலையாகச் செய்கின்றனர். சிவன் கையிலிருக்கும் திரிசூலம் வன்முறைக்கானது அல்ல, அகிம்சைக்கானது. இந்து மதம் அமைதியை மட்டுமே போதிக்கிறது’ என, பா.ஜ.க. முன்வைக்கும் இந்துத்துவ அரசியலில் இருந்து இந்து மதம் வேறுபட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது, சைவம் பா.ஜ.க.வின் இந்துத்துவக் கொள்கையிலிருந்து விலகி இருப்பதைச் சுட்டிக்காட்டினார். தனது நுண் அரசியல் தகர்ந்ததால் ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் பதட்டமாகி எதிர்ப்பைப் பதிவு செய்தது.

ராகுல் அவையில் பேசியதோடு நிற்காமல் தன் சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்ட மற்றொரு வீடியோவிலும் சிவன் படத்தை வைத்திருந்தார். ஆக, இனி வரும் நாட்களிலும், சாவர்க்கரும் அவரது கொள்கைகளும், அதைப் பின்பற்றும் பா.ஜ.க.வும் தொடர்ந்து சிவனைக் கொண்டு தாக்கப்படலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *