இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடுமத அடிப்படையில் உருவாக்கப்பட்டதா?
மோடி vs லாலு பிரசாத் மோதல் பின்னணி என்ன?
லோக்சபா தேர்தல் களத்தில் மூன்று கட்ட வாக்குப் பதிவுகள் நடந்து முடிந்துள்ளன. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எந்தக் கூட்டணிக்கு இருக்கிறது என்பது ஓரளவு யூகிக்கும் வகையில் நிலை மாறி வருகிறது.
இதனால், ஆளும் பா.ஜ.க., ஆட்சியைத் தக்க வைக்க பல்வேறு உத்திகளை முன்னெடுத்து வருகிறது. இந்துக்களின் ஓட்டுக்களைப் பெற, சிறுபான்மையினருக்கு எதிரான, சர்ச்சைக்கு வித்திடும் கருத்துக்களை ஒவ்வொரு நாளும் பா.ஜ.க., தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகப் பிரதமர் மோடி, ‘இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு மத அடிப்படையிலானது. மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்க, அரசியலைப்புச் சட்டத்தில் கூறப்படவில்லை’ எனப் பேசி வருகிறார்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த லாலு பிரசாந்த் யாதவ், ‘‘அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள இட ஒதுக்கீடு பிரிவுகளுக்கு எதிரான கட்சி பா.ஜ.க., எனவே, அரசியலமைப்புச் சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் இட ஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய அரசு விரும்புகிறது,’’ என்றார்.
‘இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு வழங்கி விடுவர் எனப் பாஜக குற்றச்சாட்டுகிறதே’ என்ற கேள்வியை முன்வைத்த போது, “இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்” என, லாலு பிரசாத் யாதவ் உறுதியாகக் கூறிச் சென்றார்.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் மோடி, “பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களின் இடஒதுக்கீட்டைப் பறித்து, தனது வாக்கு வங்கிக்குக் கொடுத்துவிட இண்டியா கூட்டணி மிகப்பெரிய சதித்திட்டத்தைத் தீட்டி உள்ளது. நான் உயிருடன் இருக்கும் வரையிலும் மத அடிப்படையில் இடஒதுக்கீடு தர விடமாட்டேன்,’’ என்று பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்துள்ள லாலு பிரசாத் யாதவ், “இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். ஆனால் அந்த இட ஒதுக்கீடு சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர மத அடிப்படையில் இருக்கக் கூடாது” என விளக்கம் அளித்தார்.
மேலும் அவர், ‘‘பிரதமர் மோடியைவிட மூத்த அரசியல்வாதி நான். எனக்குத் தெரிந்த பல விஷயங்கள் மோடிக்குத் தெரியாது. மண்டல் ஆணையப் பரிந்துரை எனது ஆட்சிக் காலத்தில் தான் அமல்படுத்தப்பட்டன. அந்த அறிக்கைப்படி நூற்றுக்கணக்கான சமூகங்கள் இட ஒதுக்கீடு பெற்றன. ஆனால், அந்த இடஒதுக்கீடு மத அடிப்படையில் வழங்கப்படவில்லை. மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் இடம் கொடுக்காது. ஆனால், அந்தச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பாஜக அரசு ஆணை அமைத்தது. இதன் மூலம் சட்டத்தை ரத்து செய்து, இட ஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக நினைத்தது நிரூபணமானது” எனக் கூறினார்.
அரசியலைப்பு சொல்வது என்ன?
இந்தியாவில் சட்டப்பிரிவு 16(4)ன் படி போதிய பிரதிநிதித்துவம் இல்லாத எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கலாம்.
‘ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினராகக் கருதப்படும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம்’ என, உச்சநீதிமன்றம் 1992ம் ஆண்டு இந்திரா சாவ்னி வழக்கில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் 1995ல், தேவகவுடா தலைமையிலான கர்நாடக அரசு, ஓபிசி ஒதுக்கீட்டிற்குள் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இதனால், தென் மாநிலத்திலுள்ள, 36 முஸ்லிம் ஜாதிகள் இடஒதுக்கீட்டிற்குத் தகுதி பெற்றனர்.
அதேபோல், தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் 2007ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கக் கூடிய 30% இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 3.5% பின்தங்கிய இஸ்லாமியச் சமூகத்தினருக்கு வழங்கப்பட்டது.
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில், இண்டியா கூட்டணி இந்துக்களுக்குக் குறிப்பாக இடைநிலை ஜாதியினருக்கு எதிராகச் செயல்படுவதாக பா.ஜ.க., தலைவர்கள் கட்டமைக்க முயற்சிக்கின்றனர். ஆனால், கர்நாடகாவிலும் தமிழகத்திலும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு மத அடிப்படையில் இல்லாமல் ஜாதி அடிப்படையில் இருப்பதே உண்மை. இதை முன்னிறுத்தி பா.ஜ.க.,வின் மத அரசியலைக் காங்கிரஸ் முறியடிக்க முயல்கிறது. இது எந்த அளவு பலன் தரும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.