தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் எழுப்பும் 5 குற்றச்சாட்டுகள் என்ன?
இந்தியாவில், மக்களவைத் தேர்தல் நடந்துவருகிறது. 7 கட்டங்களாக நடக்கும் தேர்தலில் முதல் மூன்று கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, அவர்கள் முன்வைக்கும் முக்கியமான 5 குற்றச்சாட்டுகள் என்ன என்பதை இந்தக் காணொலியில் காணலாம்.
- வாக்குப் பதிவு இயந்திரத்தில் குறைபாடு
வாக்குப் பதிவு இயந்திரத்திலும் அதன் நம்பகத்தன்மையிலும் இருக்கும் சந்தேகங்களை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால், மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் போதுமான நம்பகத்தன்மை இருப்பதாகவும் அதனால் மீண்டும் வாக்குச் சீட்டு மூறைக்கு மாற்ற தேவையில்லை என உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.
இருப்பினும், சந்தேகிக்கும் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு எண்ணிக்கை மற்றும் விவிபேட் சீட்டுகளைச் சோதனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியது நீதிமன்றம்.
- பல கட்டங்களாக நடக்கும் தேர்தல்
தேர்தல் ஆணையத்தால் பல கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை எழுப்புகின்றனர். 2024-ம் ஆண்டு இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்கிறது. அதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆனால், அதே எண்ணிக்கை கொண்டுள்ள கர்நாடகத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதைக் குற்றச்சாட்டாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றனர்.
குறிப்பாக, வாக்குப்பதிவுக்கும் முடிவுகள் அறிவிப்பிற்கும் நீண்ட நாட்கள் இடைவேளி இருப்பதால் வாக்கு இயந்திரங்களில் குளறுபடி ஏற்படுமோ? என்னும் சந்தேகத்தை முன்வைக்கின்றனர். - பாதுகாப்பு குறைபாடு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைகளில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் செயலிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் முதல்கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நிறைவடைந்தது. - இந்தநிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ’ஸ்டார்ங் ரூமில்’ சிசிடிவி கேமிராக்கள் செயலிழக்கும் சம்பவங்கள் நடந்தது. நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் ஸ்டார்ங் ரூமில் உள்ள கேமிராக்கள் செயலிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
- வாக்குப்பதிவு சதவீதப் பிரச்சினை
வாக்கு எண்ணிக்கையை சிலமணி நேரங்களில் முடிக்கும் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் செய்வது ஏன்? என்னும் கேள்வியை முன்வைக்கின்றனர் எதிர்க்கட்சிகள்.
தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகள், ஒவ்வொரு மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் போன்ற புள்ளிவிவரங்கள் ஏதும் குறிப்பிடவில்லை. எனவே, வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்படும் முரண்களைக் களைவதற்கு ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்களை வெளியிட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. - புள்ளி விவரங்களில் முரண்
முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை 4 நாட்கள் கழித்தும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. - வெளியிட்ட தரவுகளிலும் தேர்தல் நடந்து முடிந்த அன்று வெளியான சதவீதத்துக்கும், நீண்ட தாமதத்துக்குப் பிறகு வெளியான வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் சில முரண்பாடுகள் இருப்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தநிலையில், இத்தகைய முரண்பாடுகள் கவலை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றனர். இது தேர்தலில் சுதந்திரம் மற்றும் நியாயமான நம்பகத் தன்மை மீது சந்தேகங்கள் எழுப்புகின்றதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறியுள்ளார்.
இது குறித்து இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ 102 இடங்களைக் கொண்ட முதல் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் 60% என வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாள் தேர்தல் ஆணையம் தகவலை வெளியிட்டது. ஆனால், 8 நாட்கள் கடந்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் அது 65. 5% அதிகரித்திருந்தது. 5% வாக்குப்பதிவு அதிகரிப்பது எப்படி என்னும் கேள்வியை எழுவகிறது” எனக் கடிதத்தில் கூறியுள்ளார். இதேபோல், இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்து வெளியான வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் முரண்பாடு உள்ளதாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இப்படியாக, தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முக்கியமான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு உரிய பதிலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டால் மட்டுமே மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீதுள்ள நம்பகத்தன்மை காக்கப்படும்.