மீண்டும் உடையும் அ.தி.மு.க.! பழனிசாமி – வேலுமணி தனித்தனியாகப் பேட்டி: பின்னணி என்ன?
அ.தி.மு.க., ஏற்கனவே மூன்று அணிகளாகப் பிளவுண்டுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியும், முன்னாள் அமைச்சர் வேலுமணியும் கோவையில் தனித்தனியாகப் பேட்டி கொடுத்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., பலமான கூட்டணியை அமைத்ததால், அதை எதிர்க்கும் அளவில், அ.தி.மு.க., தலைமையில் பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளை இணைத்து பலமான கூட்டணி அமைக்க, அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால் அ.தி.மு.க., பொதுச் செயலாளரான பழனிசாமி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை; இதனால், தமிழகத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது.
எதிர்க்கட்சிகளின் ஓட்டுக்கள் இரு அணிகளுக்கும் பிரிந்ததும், அ.தி.மு.க., இரு அணியாகப் பிரிந்ததால் ஏற்பட்டுள்ள குழப்பமும் தி.மு.க., கூட்டணிக்குச் சாதமானது. மேலும் தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி காரணமாக, பெரும்பாலான தொகுதிகளில் அந்தக் கூட்டணியே வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ‘அ.தி.மு.க., வேட்பாளர்கள் எங்குமே வெற்றி பெற இயலாது’ என்ற சூழல் உருவாகியுள்ளது. பல தொகுதிகளில், அ.தி.மு.க., மூன்றாமிடத்திற்குத் தள்ளப்படவும் வாய்ப்புள்ளது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் இதே நிலை தொடர்ந்தால், தி.மு.க., ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை ஒருமித்து அறுவடை செய்ய இயலாமல் போய் விடும்; அதனால் மீண்டும் கூட்டணி பலத்துடன் தி.மு.க., ஆட்சியைப் பிடித்து விடும் என்று யூகிக்கப்படுகிறது.
மூன்று அணிகளாகப் பிளவுபட்டுள்ள அ.தி.மு.க.,வை ஒருங்கிணைத்து, பலமான கூட்டணியை உருவாக்க வேண்டுமென்று, கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருதுகின்றனர். இதற்குப் பழனிசாமி ஒத்துவராதபட்சத்தில், அவரைத் தவிர்த்து விட்டு, மற்ற எல்லா அணிகளையும் ஒருங்கிணைத்து, அ.தி.மு.க.,வைப் பலப்படுத்தித் தேர்தலை எதிர்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர்.,க்குப் பிறகு அ.தி.மு.க.,வைத் தன்வசப்படுத்தி நெடுங்காலம் அதைத் தன் கைக்குள் வைத்திருந்த ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருக்கும் போதே திடீரென் உடல்நலன் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் எந்தப் பலனுமின்றி 2016 டிச., 5ம் தேதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்ததும் அ.தி.மு.க.,வின் அடுத்த தலைவர் யார்? அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
திடீர் முதல்வர்
சசிகலா தலைமையில் கட்சியும், ஓ.பன்னீர்செல்வம் முல்வராகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா. 2011ல் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனை மீண்டும் கட்சியில் 2017 பிப்.,ல் இணைத்தார். அப்போது, அ.தி.மு.க., மீண்டும் பலம்வாய்ந்த கட்சியாக மாறியது.
ஆனால், 2017 பிப்., 14ம் தேதி ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதித்தது உச்சநீதிமன்றம். பிப்., 15ல் சிறைக்குச் சென்றார் சசிகலா. அவர் சிறைக்குச் சென்ற பிறகும் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் நீடித்தார்.
‘கொங்கு’ அரசியல்
முதலவர் பதவியேற்ற பழனிசாமி, கொங்கு அரசிலை முன்வைத்து கட்சிக்குள் தேவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க நினைத்தார். அதற்காக தன் சாதியினரான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை தன் விசுவாசிகளாக மாற்றினார். அதன் பின், முதல் விக்கெட்டாக டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கினார். 2017 செப்., 12ம் தேதி அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் கூடி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கினார். ஓ.பன்னீர்செல்வமும் கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டார். அவர் ‘தர்மயுத்தம்’ நடத்தி துணை முதல்வரான போதும், முக்கியத்துவம் இன்றியே கட்சியில் தொடர்ந்தார்.
இப்படி முதல்வராகத் தொடர பழனிசாமிக்கு கைகொடுத்த கொங்கு அரசியல், அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் கைகொடுக்கவில்லை. தோல்விக்குக் கட்சி உடைந்ததே முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது. தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க., பழனிசாமியின் முடிவுகளால் பலவீமடைந்துள்ளதாகக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருதுகின்றனர். அதனால் அவர்கள் மூன்றாகப் பிளவு பட்டுள்ள கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியைத் தொடங்கிவிட்டனர். அதற்குத் தடையாகப் பழனிசாமி இருந்தால் அவரைத் தவிர்க்கவும் முடிவு செய்துவிட்டனர்.
பா.ஜ.க.,வுடன் நெருக்கும்!
கூட்டணிக்கு பல முறை தூதுவிட்டும் பழனிசாமி பிடிவாதமாக இருந்ததால் கூட்டணி அமையவில்லை. இதையடுத்து முக்கிய நிர்வாகிகளைத் தன்வசம் ஈர்க்க பா.ஜ.க., முடிவு செய்தது.
தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை செய்ய, பல்லடத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பிரதமர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் பா.ஜ.க.,வில் இணையவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், தங்கமணி, வேலுமணி, சிங்காநல்லூர் எம்.எல்.ஏ., ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், கிணத்துக்கடவு தாமோதரன் உள்ளிட்டோர் பா.ஜ.க.,வில் இணையவுள்ளதாகத் தகவல்கள் கசிந்தன.
கோவை – அவிநாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், பிப்., 27ம் தேதி இணைப்பு விழா நிகழ்ச்சிக்கு பா.ஜ.க., ஏற்பாடு செய்தது. ஆனால் அண்ணாமலை, ‘முக்கிய விக்கெட் விழும்’ எனப் பேசியது சர்ச்சையான நிலையில் மாற்றுக் கட்சியினர் யாரும் இணைப்பு விழாவிற்கு வரவில்லை.
இரு கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் தனித்தனியாகத் தேர்தலைச் சந்தித்தது தி.மு.க.,விற்குச் சாதகமாகிவிட்டது. இதனால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்து வாக்குகளை அதிகரிக்கவும் கூடுதல் எம்எல்ஏக்களை பெறவும் பாஜக முயற்சிக்கிறது. இதற்காக
பெயர் அடிபட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் பாஜக நெருக்கமாகவே இருந்து வருகிறது. கூட்டணிக்கு ஒத்துவராத போது பழனிசாமியை ஓரம்கட்டிவிட்டு, வேலுமணியை அந்த இடத்தில் அமர்த்த பாஜக பெருமளவு உதவும்.
பழனிசாமியைத் தவிர்த்து விட்டு, அ.தி.மு.க., ஒருங்கிணைக்கப்பட்டால், கொங்கு அரசிலை முன்னெடுப்பவராக மட்டுமின்றி அ.தி.மு.க.,வை வழி நடத்துபவராகவும் வேலுமணி உருமாறுவார். அதை நோக்கியே வேலுமணி காய்களை நகர்த்தி வருகிறார்.
பிளவுபட்டுள்ள அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க, பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கத்தைச் சமீபத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல்களை இரு தரப்பினரும் மறுத்துள்ளனர்.
செங்கோட்டையன் குடும்பத் திருமண விழாவுக்கு, முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என பலரையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுப்பதாக விளக்கம் தந்தனர்; வேலுமணி பகிரங்கமாகவே இதை மறுத்து, ‘தி.மு.க., ஐ.டி.,விங் உருவாக்கும் தகவல்களை நம்பி, ஊடகத்துறையினர் செய்தி பரப்புகின்றனர்’ என்று கூறியுள்ளார். ஆனால் இதை பழனிசாமி நம்பியதாகத் தெரியவில்லை.
‘பழனிசாமியே எங்கள் தலைவர்’ என்று வேலுமணி, அழுத்தம் திருத்தமாகத் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனாலும் கோவைக்கு மே 20ம் தேதி பழனிசாமி வந்தபோது, இருவரும் சேர்ந்து, பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவில்லை. கோவை கணபதியில் பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்; பழனிசாமி கிளம்பிச் சென்றபின், விமான நிலையத்தில் நிருபர்களை வேலுமணி சந்தித்துப் பேசினார்.
கோவைக்கு வரும்போதெல்லாம், வேலுமணி இல்லாவிட்டால், காத்திருந்து, அவர் வந்தபின்பே பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பதே பழனிசாமியின் வழக்கம். ஆனால் மே 20ம் தேதி மலரவன் வீட்டுக்குச் சென்றபோது, வேலுமணி அவருடன் செல்லவில்லை. சுவாமி கும்பிடுவதால், துக்க வீட்டுக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் பழனிசாமி பேட்டியளித்தபோதும், அவர் அருகில் வேலுமணி இல்லை.
விமான நிலையத்தில் இருவரும் சேர்ந்து பேட்டியளிப்பார்கள் என்று நிருபர்கள் எதிர்பார்த்தனர். அங்கும் அது நடக்கவில்லை. பழனிசாமி புறப்பட்ட பின்பு, ‘எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை’ என்று வேலுமணி தெரிவித்தார். வேலுமணி உள்ளிட்டோரின் திட்டத்தை உணர்ந்ததால் தான் இதைப்பற்றி வாய் திறக்கவேயில்லை பழனிசாமி.
கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஈடுபட்டதன் விளைவாக மீண்டும் உடையும் நிலை அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. பழனிசாமியும், வேலுமணியும் கோவையில் தனித்தனியாகப் பேட்டி கொடுத்தது அதை உறுதிப்படுத்தியுள்ளது.