வயநாட்டில் முதல் வெற்றி! தென்னிந்தியாவின் முகமாகிறாரா பிரியங்கா? காங்கிரஸ் வியூகம் என்ன?
இதுவரை மக்களவைத் தேர்தலில் கேரளாவில் வெற்றி பெறாத பாஜக, நடிகர் சுரேஷ் கோபியின் வெற்றி வாயிலாக தன் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே, பாஜகவுக்கு தென்னிந்தியாவில் சவாலை தரும் அடிப்படையில் வயநாட்டில் காங்கிரஸ் இருப்பு அவசியம்.
2024 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி களமிறங்கி தன் முதல் தேர்தல் அரசியலைத் தொடங்குவார் எனப் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. குறிப்பாக காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலியில் இருந்து கணக்கை தொடங்குவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை. அந்தத் தொகுதியில் ராகுல் காந்தி களமிறங்கி வெற்றி பெற்றார். தற்போது வயநாடு தொகுதியின் இடைத்தேர்தலில் களமிறங்கி பிரியங்கா வெற்றி வாகை சூடியிருக்கிறார்.வடக்கில் உள்ள தொகுதியைத் தவிர்த்துவிட்டு தெற்கில் தன் தேர்தல் கணக்கை தொடங்கியிருக்கிறார் பிரியங்கா காந்தி. இதன் பின்னணியில் உள்ள வியூகம் என்ன?
பிரியங்கா காந்தியின் அரசியல் பயணம்!
தாத்தா இந்திய நாட்டின் முதல் பிரதமர், பாட்டி இந்திய நாட்டின் முதல் பெண் பிரதமர், தந்தையும் இந்திய நாட்டின் பிரதமர். தாய் காங்கிரஸ் என்னும் பேரியக்கத்தின் தலைவர் என இப்படியான பின்னணி இருந்தும் அரசியலில் கால் பதிக்காமல் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தார் பிரியங்கா காந்தி. 1984-ல், அவருக்கு 12 வயதாக இருந்தபோது, அவரது பாட்டி இந்திரா சொந்த பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது தந்தை ராஜீவ் பிரச்சாரக் கூட்டத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போது பிரியங்கா காந்திக்கு வயது 19. இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் குடும்பங்களில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக பிரியங்காவை மக்கள் கருதினர். ஆனால், அவர் அரசியலில் ஈடுபடவில்லை.
தன் தந்தை மறைவுக்குப் பின் பிரியங்கா பொதுமக்களின் பார்வையில் முழுமையாக தெரிந்தது, தொழிலதிபர் ராபர்ட் வத்ராவுடன் நடந்த அவரின் திருமணத்தில் தான். அதன்பின் தன் குழந்தை மற்றும் குடும்பத்தைக் கவனித்து வந்தார்.1999-ம் ஆண்டு பிரியங்கா காந்தி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ”அரசியல் தன்னை ஈர்க்கவில்லை” எனப் பேசியிருந்தார். ஆனால், பிற்காலத்தில் அரசியல் அவரை ஈர்த்துக் கொண்டது என்பது தான் நிதர்சனமான உண்மை. அரசியலில் இருந்து சற்றே விலகி நின்றவரைக் காலம் அரசியலுக்குள் கொண்டுவந்தது.
கடந்த 2004-ம் ஆண்டு தன் முதல் அரசியல் பிரவேசத்தை உத்தரப் பிரதேசத்தில் நிகழ்த்தினார் பிரியங்கா. மக்களவைத் தேர்தலில் களமிறங்கிய தன் தாய் மற்றும் சகோதரருக்கு ஆதரவாக ரேபரேலி மற்றும் அமேதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால், அதிகாரப்பூர்வமான இவரின் அரசியல் அறிமுகம் நிகழ்ந்தது 2019-ம் ஆண்டில்தான். காங்கிரஸ் கிழக்கு உத்தரபிரதேசப் பகுதிக்குப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராகப் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. 2022-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தீவிரமான களப்பணி ஆற்றினார்.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிகரமான களப்பணி ஆற்றும் தலைமை கிடைத்தது. 2024-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போதே இவரைத் தேர்தலில் களமிறங்க மக்கள் பணித்தனர். ஆனால், அவர் பல இடங்களுக்குச் சென்று பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்னும் காரணத்தை முன்வைத்து அவர் போட்டியிடவில்லை.இந்த நிலையில் இரு தொகுதியில் வென்ற ராகுல் காந்தி வயநாட்டைக் கைவிட்டார். அங்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றிருக்கிறார் பிரியங்கா.
வடக்கில் ராகுல், தெற்கில் பிரியங்கா?
ரேபரேலியில் ராகுல் போட்டியிட்டதற்கு முக்கிய காரணமே வட இந்தியாவில் ராகுல் மற்றும் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்பதுதான். அதற்கு ஏற்றாற்போல் இம்முறை உத்தரப்பிரதேசம் மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியை இண்டியா கூட்டணிக்கு வழங்கியது. அம்மாநிலம் வரும் 2025-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது. ஆகவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அங்கு காங்கிரஸை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டி ராகுல் ரேபரேலியைத் தக்கவைத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ராகுல் இருப்பதன் பின்னணியில் அவர் டெல்லி அரசியலை உற்றுநோக்குவார் என்னும் பேச்சு அடிபட்டது. அந்தவகையில் அவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியைப் பாஜக பிடித்திருக்கும் சூழலில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட திட்டமிட்டுள்ளனர். அதற்கு வட இந்தியாவில் ராகுல் இருப்பது டெல்லி அரசியலைக் கவனிக்க முடியும் என்னும் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
பிரியங்கா வயநாட்டில் போட்டி ஏன்?
வயநாடு தொகுதி ராகுலுக்கு மிகவும் நெருக்கமான தொகுதியாகத்தான் இருந்துள்ளது. இதனை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் ராகுல். ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் பாஜக பல இடங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதுவரை மக்களவைத் தேர்தலில் கேரளாவில் வெற்றி பெறாத பாஜக, நடிகர் சுரேஷ் கோபியின் வெற்றி வாயிலாக தன் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே, பாஜகவுக்கு தென்னிந்தியாவில் சவாலை தரும் அடிப்படையில் வயநாட்டில் காங்கிரஸ் இருப்பு அவசியம்.
அதேவேளையில், எதாவது ஒன்றை தியாகம் செய்ய வேண்டும் என்னும் அடிப்படையில் ஏற்கனவே பலம்வாய்ந்த கேரளாவை விடுத்து, உத்தரபிரதேசத்தைத் தக்கவைத்துள்ளார். குறிப்பாக, ராகுல் வயநாட்டின் எம்பி பதவியை ராஜினாமா செய்வது , கடந்தமுறை அமேதியில் வெற்றி கிடைக்காததால் வயநாடு எம்பியாக தொடர்ந்ததாகவும் தற்போது ரேபரேலியில் வெற்றி பெற்றதால் வயநாட்டை கைநழுவிட்டதாக எதிர்த்தரப்பினர் பிரச்சாரத்தை வைத்தனர். இது ராகுல் மீது அதிருப்தி உண்டாக்கியதாக சொல்லப்பட்டது. ஆகவே, அதனை சமன் செய்யும் பொருட்டு வலுவான போட்டியாளராக இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில் பிரியங்கா காந்தி களத்தில் இறக்கப்பட்டார். வயநாட்டில் போட்டியிடுவது குறித்து பேசிய பிரியங்கா காந்தி, “வயநாடு மக்கள் ராகுல் காந்தி இல்லையே என்று சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வேன்” என்று பதிலளித்தார்.
’நான் வயநாட்டில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் உங்களுக்கு என் சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறேன்’ என ராகுல் முன்வைத்த பிரச்சாரங்கள் எடுபட்டுள்ளது என்பதைத் தான் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு வயநாடு தொகுதியில் 7,06,367 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. அவர் மீண்டும் 2024-ம் ஆண்டு 6,47,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குறிப்பாக, ராகுல் காந்தி 3,64,422 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார். தற்போது அதனை முறியடிக்கும் வகையில் 3,82,975 ( மதியம் 2.30 நிலவரப்படி) வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலையில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது கேரளா. எனவே, பிரியங்காவின் வருகை கேரளாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல், பிரியங்கா காந்தியின் எண்ட்ரி தென்னிந்தியா முழுவதிலும் காங்கிரஸை வலுப்படுத்த உதவும் என அக்கட்சி நம்புகிறது. அதற்காக தான் பிரியங்கா காந்தியைக் கேரளத்தில் களமிறக்கியது காங்கிரஸ் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆகவே, வயநாட்டில் வெற்றி பெற்று காங்கிரஸின் இந்த வியூகத்துக்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறார் பிரியங்கா காந்தி. இனி வரும் காலங்களில் தென்னிந்தியாவின் காங்கிரஸ் முகமாக மாறுவாரா பிரியங்கா காந்தி? பார்க்கலாம் பொறுத்திருந்து. ஆனால், பிரியங்கா காந்தியின் இந்த வெற்றி மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.