Monday, December 23, 2024
Critics

இஸ்லாமியர்கள் மக்கள் தொகை சர்ச்சையாவது ஏன்?

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு சமீபத்தில், வெளியிட்ட இஸ்லாமியர்கள் பற்றிய தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 3-ம் கட்ட தேர்தல் முடிந்தபின்பு வெளியான இந்தத் திடீர் அறிக்கையின் பின்னணி குறித்துப் பார்க்கலாம்.

கடந்த 1950 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கை 78.2% சரிவைச் சந்தித்துள்ளது. அதேவேளையில், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 43.15%, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 5.3 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளதாகப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 167 நாடுகளில் இந்தப் பகுப்பாய்வு நடந்துள்ளது. 1950-ம் ஆண்டு அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டதற்கு இரண்டு முக்கிய காரணங்களும் அதில் கூறப்பட்டுள்ளன.

  1. ’இந்த ஆண்டில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் சர்வதேச மனித உரிமைகளுக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டது’.
  2. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 70 ஆண்டுகளில் பல நாடுகள் முக்கியமான மாற்றங்களைக் கண்டது. குறிப்பாக, 1950-ல் 28% இருந்த ஜனநாயக நாடுகளின் எண்ணிக்கை 2005-ல் 63% அதிகரித்தது. இந்தக் காரணத்திற்காக 1950 தொடங்கி 2015 வரையிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

வெளியான முக்கியமான தரவுகள் என்ன?

இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையான இந்துக்களின் எண்ணிக்கை கடந்த 1950 முதல் 2015 காலகட்டத்தில் 84.68 சதவீதத்திலிருந்து 78 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேநேரம் கடந்த 1950 -ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகையில் 9.84 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2015 -ம் ஆண்டில் 14.09% -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.24 சதவீதத்திலிருந்து 2.36 சதவீதமும், சீக்கியர்களின் எண்ணிக்கை 1.24 சதவீதத்திலிருந்து 1.85 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது. இப்படியாக, இந்தியாவில் சிறுபான்மையினர் எனக் கருதப்படும் சமூகங்களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்பதுதான் அந்த அறிக்கையின் தகவலாக உள்ளது.

தரவுகள் வெளியிட்டதற்கான காரணம் என்ன?

வங்கதேசம், பாகிஸ்தான் ,இலங்கை ,பூட்டான் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை சமூகத்தின் எண்ணிக்கை அதிகரித்தும் சிறுபான்மை சமூகத்தின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனால், இந்தியாவை ’இந்து நாடாக’ மாற்றச் சிறுபான்மையினர் மீது தாக்குதலைப் பாஜக நடத்துவதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பகுப்பாய்வு என்பது இந்திய நாட்டில் பன்முகத்தன்மை வளர்ந்திருக்கும் சூழலை வெளிக்காட்டும் என்னும் அடிப்படையில் இதை வெளியிட்டிருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.

அதில் உள்ள சிக்கல் என்ன?

இந்தியாவில் முதன்முதலாக 1951-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த ஆய்வு தொடங்கப்பட்டதாக சொல்வது 1950. இந்தத் தரவுகள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது கேள்வியாகவுள்ளது. அதேபோல், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் பொதுத் தளத்தில் கிடைக்கப்பெறக் கூடிய தரவாக இருக்கிறது. ஆனால், 2015-ம் ஆண்டு வரை இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, பொதுத் தளத்தில் இல்லாத தரவுகள் வெளியாகியிருப்பதும் பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

ஆனால், இதற்குப் பின் பாஜகவின் ’டார்கெட் இஸ்லாம்’ நகர்வு இருப்பதாகக் கருத்துக்களும் எதிர்க்கட்சியினரால் சொல்லப்படுகிறது. தற்போது நடந்து முடிந்திருக்கக் கூடிய மூன்று கட்ட தேர்தலில் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்படும் என ரகசிய சர்வே முடிவுகள் வெளியானதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, கடந்த முறை வெற்றி பெற்ற இடங்களிலும் கூட பாஜக இம்முறை சரிவைச் சந்திக்கும் என சர்வே முடிவு தெரிவித்ததால் அடுத்து வரும் தேர்தல்களில் வாக்குகளைப் பெற தன் கடந்த கால ஆயுதத்தைப் பாஜக கையிலெடுத்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்களை டார்கெட் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

பாஜகவின் ’டார்கெட் இஸ்லாம்’ பிரச்சாரங்கள்

காங்கிரஸ் ஆட்சியில் மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகப் பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த நிலையில், தற்போது வெளியான தரவுகள் 1950 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கு உட்பட்டது. அப்போது காங்கிரஸ்தான் அதிகமுறை இந்தியாவை ஆட்சி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகப் பாஜக வெளியிட்டிருக்கும் இந்த தரவுகள் பேசுபொருளாகியுள்ளது.

Group of christianity people praying hope together

இந்த ஆய்வறிக்கை குறித்து உத்தரப் பிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பேசுகையில், “இந்து மக்கள் தொகை குறைவதற்குக் காங்கிரஸே காரணம். இந்துக்களின் மக்கள் தொகை குறைவதும், முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரிப்பதும் கவலைக்குரிய விஷயம். காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம் லீக் போலச் செயல்பட்டது. அதனால்தான் நாட்டில் மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் பொது சிவில் சட்டத்தை பாஜக கோருகிறது. அப்போதுதான் நாட்டில் மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் இருக்கும். இல்லாவிட்டால் இங்கே இன்னொரு பாகிஸ்தானுக்கான கோரிக்கை எழும்” என்றார். இதுதான் இந்த ஆய்வு முடிவு வாயிலாகப் பாஜக முன்வைக்க நினைக்கும் பிரச்சாரம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

’அதிகரிக்கும் இஸ்லாம்’ என்னும் கட்டமைப்பு!: இதனை தற்போது வெளியிடுவதற்குக் முக்கிய காரணம் ’தேர்தல்’ மட்டும்தான். தவிர, இந்த தரவுகளைக் குழு எப்படி சேகரித்தது என்பதும் பெரும் கேள்வியாக இருக்கிறது. காரணம், கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதன்பின் 2021 -ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா சூழல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே முழுமையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இருந்தால் அனைத்து தகவலும் பொது தளத்திலும் கிடைத்திருக்கும். ஆனால், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஒரு கட்டமைப்பை உருவாக்க இந்தத் தரவுகளை வெளியிடப்பட்டதா? என்னும் கேள்வி முன்வைக்கப்படுகிறது. இது முற்றிலும் அரசியல் உள்நோக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது என சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்து தீவிரமான விமர்சனத்தைப் பிரதான எதிர்க்கட்சிகள் முன்வைக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆனால், இது தேர்தலில் எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *