தேர்தலில் பாஜகவுக்கு ஏற்படும் பின்னடைவு..காங்கிரஸ் வியூகம் என்ன?
இந்தத் தேர்தல் தொடங்கும்போது சில அரசியல் வியூகவியலாளர்கள் பாஜக மீண்டும் பெரிய வெற்றி பெறும் என்னும் கருத்தை முன்வைத்து வந்தனர். ஆனால், 6 கட்ட தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அவர்களே தங்களின் கருத்தை மாற்றி ‘ மக்களிடன் மாற்றம் ஏற்பட்டுள்ளது’ எனக் கூறுகின்றனர்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதில், பாஜக ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் ஒவ்வொரு வியூகத்தைக் கையிலெடுத்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால், காங்கிரஸின் தேர்தல் வியூகம்தான் என்ன?
வளர்ச்சி’தான் வியூகம்: தேர்தல் பிரச்சாரத்தில் பாஜவைப் போல பல வியூகங்களைக் காங்கிரஸ் கையில் எடுக்கவில்லை. தொடக்கம் முதலே, ஒரே வியூகத்தை முன்வைத்து பிரச்சாரத்தை நகர்த்திக் கொண்டுவருகிறது. அதுதான் திட்டங்கள், திட்டங்கள் உள்ளடக்கிய அக்கட்சியின் தேர்தல் அறிக்கை.
காங்கிரஸின் அதிகாரப்பூர்வமான தேர்தல் அறிக்கை வெளிவருவதற்கு முன்பாகவே, பெண்கள், விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகள் எனப் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கியது காங்கிரஸ். அதன்பின், வெளியான காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நல்ல வரவேற்பைப் பெற்றது. ’இண்டியா கூட்டணியின் கதாநாயகன்’ இந்தத் தேர்தல் அறிக்கை தான் என கூட்டணி கட்சித் தலைவர்களாலும் சொல்லப்பட்டது. ஆகவே, அதனை அடிப்படையாகக் கொண்டுதான் பாஜக பல விமர்சனங்களை முன்னெடுத்தது என்பது வேறு கதை.
காங்கிரஸின் முக்கிய தலைவராகக் கருதப்படும் ராகுல் காந்தியும் காங்கிரஸ் அமல்படுத்தவிருக்கும் திட்டத்தைக் குறித்து அதிகமாகப் பிரச்சாரத்தில் பேசினார். ஆட்சிக்கு வந்தால் இண்டியா கூட்டணி என்ன செய்யும்? என்பதைப் பிரச்சார மேடைகளில் முழங்குகிறார். அதேபோல், இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்புப் பிரச்சினையைத் தீர்க்க காங்கிரஸ் திட்டங்களை வகுப்பதாகவும் பிரச்சாரங்களில் கூறிவருகிறார்.
பாஜக மீது சாடல்?; பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் அரசியல் சாசனத்தை மாற்றிவிடும் என அக்கட்சி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டை வைக்கிறது.
- 1. தேர்தல் பத்திரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பும் காங்கிரஸுக்கு சற்றே சாதகமாக அமைந்தது. அதைக் கையிலெடுத்து பாஜக மீது கடுமையான விமர்சனத்தைக் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி முன்வைத்தது.
- 2. அதேபோல், பாஜக – அதானி, அம்பானி உறவு குறித்து காங்கிரஸ் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. இந்த அழுத்தத்தால் பிரதமர் மோடியே அவர்கள் குறித்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.
- 3. ’சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இந்தியாவை எக்ஸ்ரே எடுக்கவேண்டுமென’ ராகுல் பேசினார். ஆனால், இந்தக் கருத்து காங்கிரஸுக்கு சிக்கலாக முடிந்தது. குறிப்பாக, ” நீங்கள் சேர்த்து வைத்த சொத்துகளைக் காங்கிரஸ் அபகரித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடும்” என வாதத்தை முன்வைத்தார் மோடி. இது பெரும் விவாதப் பொருளானது.
- இப்படியாக, சில பிரச்சாரங்கள் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அது பெரிய அளவில் கைகொடுத்தா என்பது கேள்விதான்.
அமைதி தான் காங்கிரஸ் வியூகமா?: பாஜக முன்வைத்த சில முக்கியமான பிரச்சாரங்களில் காங்கிரஸ் விலகிதான் நின்றது. அதற்கு பதில் கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவோம் என திட்டவட்டமாகக் கூறியது பாஜக. அதற்கு எதிர்க் கட்சிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவில்லை. தேர்தல் அறிக்கையில் அமல்படுத்தமாட்டோம் எனக் கூறியுள்ளதாக சொல்கிறது காங்கிரஸ். ஆனால், அதனை அழுத்தமாக பிரச்சார மேடைகளில் காங்கிரஸ் சொல்ல தயங்குவது ஏன்?. இதனால், இந்து வாக்கு வங்கி பாதிக்கப்படுமோ என்னும் தயக்கத்தில் காங்கிரஸ் வெளிப்படையாகப் பேசவில்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
அதேபோல், காங்கிரஸின் வெளிநாடு வாழ் முன்னாள் தலைவர் சாம் பிட்ரோடா , இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து பேசிய கருத்தை நிற அரசியலாக திரித்து பாஜக பரப்பியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதற்கு அவருக்கு ஆதரவாக நிற்பதற்குப் பதிலாக , அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்ற முழு சம்மதம் தெரிவித்தது காங்கிரஸ். இதிலும், பாஜக தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கருத்து கூறினால் பாஜகவின் குரல் ஓங்கும், இதனால் காங்கிரஸ் மீதுதான் அவப்பெயர் உண்டாகும் என நினைத்து அமைதியானது காங்கிரஸ்.
அதன்பின்னர், தென்னிந்தியாவில் அனைத்து தேர்தல்களும் முடிந்த நிலையில், வட இந்தியாவில் வாக்குகளைக் கவர ‘வடக்கு- தெற்கு’ எனப் பிளவுவாத கருத்தைப் பிரதமர் மோடி முன்வைத்தார். அதற்கும் தென்னிந்திய தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதற்கு, காங்கிரஸ் தலைமையிடமிருந்து பெரிதாக எந்த ரியாக்ஷனும் இல்லை. அதேபோல், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர் ராகுல் காந்திக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தார். இதற்கு காங்கிரஸைப் பாகிஸ்தான் ஆதரிப்பதாகக் கருத்துக்கள் பாஜகவால் முன்வைக்கப்பட்டது. அதற்கும் எந்த எதிர்வினையும் காங்கிரஸிடமிருந்து பெரிதாக வரவில்லை.
காங்கிரஸ் மௌனத்தின் பின்னணி என்ன?: ஏற்கனவே, கூறியதுபோல் பாஜக ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் தன் பிரச்சார வியூகத்தை மாற்றி வருகிறது. சொல்லப்போனால், அவர்களின் இந்தப் பிரச்சார பிளானுக்கு ஏற்ற வகையில்தான் 7 கட்டங்களாக தேர்தல் பெரும் கால இடைவேளையில் நடக்கிறது என்பது பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
ஆனால், காங்கிரஸிடம் இப்படியான எந்தத் திட்டமிடலும் இல்லை. பல விவகாரங்களில் கூட்டணி கட்சிகள்தான் எதிர்வினையாற்றுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாகவும், அது அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்னும் கருத்தை முன்வைத்தார் மோடி. இதற்கு காங்கிரஸ் சார்பாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்னும் மேலோட்டமான பதில் கொடுக்கப்பட்டது. ஆனால், லாலு பிரசாத் யாதவ் தான் இதற்கு உரிய விளக்கத்தை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் மௌனப் பின்னணியில் ’பாஜக வாக்கு வங்கி’ அரசியலில் காங்கிரஸ் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டது தெளிவாக தெரிகிறது. அதனால்தான் எங்கே நாம் செய்யும் விமர்சனம் நம்மையும் , வாக்கு வங்கியைப் பாதித்து விடுமோ என்னும் குழப்பத்தில் அமைதி என்னும் யுக்தியைக் கையாண்டுவருகிறது காங்கிரஸ். இதனால்தான் மோடி கூறும் கருத்துக்களுக்கு எந்தக் கடுமையான விமர்சனத்தையும் காங்கிரஸ் கையாள்வதில்லை.
காங்கிரஸ் மௌனம் யாருக்கு சாதகம்?: தற்போது நடந்து முடிந்த 5 கட்ட தேர்தலில் பாஜகவுக்கு சற்று பின்னடைவு ஏற்படும் என்பதை அக்கட்சியின் தலைமை நன்கு உணர்ந்திருக்கிறது. ’பாஜக 400’ என தொடங்கிய பிரச்சாரம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால், இது முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளால் நிகழ்ந்த ஒன்றா? என்னும் கேள்வியை முன்வைக்க வேண்டும்.
காங்கிரஸ் சற்றே பலமான வியூகத்தை வகுத்து தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தால் பாஜகவின் அதிருப்தி வாக்குகள் மற்றும் குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் எளிமையாக திருப்பி இருக்க முடியும். ஆனால், அதை மிக சிறிய அளவில்தான் காங்கிரஸ் செய்துள்ளது.
இந்தத் தேர்தலில் இண்டியா கூட்டணி குறிப்பிடத்தகுந்த வேலைகளைச் செய்துள்ளது. ஆனால், அதற்கும் அதிகமாக மக்களே தங்களுக்குள் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டு சில முடிவுகளைப் பாஜகவுக்கு எதிராக எடுத்திருக்கின்றனர். குறிப்பாக, இந்தத் தேர்தல் தொடங்கும்போது சில அரசியல் வியூகவியலாளர்கள் பாஜக மீண்டும் பெரிய வெற்றி பெறும் என்னும் கருத்தை முன்வைத்து வந்தனர். ஆனால், 6 கட்ட தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அவர்களே தங்களின் கருத்தை மாற்றி ‘ மக்களிடன் மாற்றம் ஏற்பட்டுள்ளது’ எனக் கூறுகின்றனர். ஆனால், அது எந்த அளவிற்கான மாற்றம் என்பதைத் தற்போது கணிக்க முடியாது.
இருப்பினும், காங்கிரஸ் சற்றே பலமான வியூகத்தை வகுத்து தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தால் பாஜகவின் அதிருப்தி வாக்குகள் மற்றும் குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் எளிமையாக திருப்பி இருக்க முடியும். ஆனால், அதை மிக சிறிய அளவில்தான் காங்கிரஸ் செய்துள்ளது என்னும் வாதம்தான் வைக்கப்படுகிறது. ஆனால், கூட்டணியின் பிரச்சாரம், மக்கள் மனதில் ஏற்பட்டதாக சொல்லப்படும் மாற்றம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டும்.