Sunday, December 22, 2024
Opinions

‘நோட்டா’வுடன் போட்டி! குறைந்த வாக்கு பெற்றவர்கள் தேர்தலில் தடையா?

ஒரு வேட்பாளருக்கு வாக்கு அளிக்க எத்தனை உரிமை இருக்கிறதோ, அதேபோல் வாக்கு செலுத்தாமல் இருப்பதற்கும் முழு உரிமையும் உள்ளது. அதன்படிதான், 2013-ம் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு (None of the Above, NOTA) ’நோட்டா’வுக்கு வாக்களிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில், ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களைவிட, நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தால், அதற்கு அடுத்தபடியாக உள்ள வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்ற விதிமுறை தற்போது உள்ளது.

இந்த நிலையில் , ஒரு தொகுதியில் அதிகப்படியான ஓட்டுகள் நோட்டாவுக்கு விழுந்திருந்தால், அங்கு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகள், சமீபகாலமாக வலுத்து வருகின்றன. இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், பிரபல எழுத்தாளருமான ஷிவ் கெரா, நோட்டா தொடர்பாக பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

முன்வைத்த முக்கியமான கோரிக்கைகள்

  1. ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து, வேட்பாளர் குறைந்த வாக்குகள் பெற்றால் அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும்.
  2. ஒரு தொகுதியில் நோட்டாவைவிட குறைந்த வாக்குகள் பெரும் வேட்பாளர் அதே தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
  3. நோட்டாவை விடக் குறைவான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
  4. நோட்டாவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு கற்பனை வேட்பாளரைப் போல விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
  5. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைக்கப்பட்ட முக்கியமான வாதம் என்ன?
குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதால், அங்கே பாஜக வேட்பாளர் மட்டுமே இருந்ததால் அங்கே தேர்தல் நடத்தப்படாமல் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரே ஒரு வேட்பாளர் இருந்தாலும், வாக்காளருக்கு விருப்பத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். நோட்டாவிற்கும் களத்தில் இருக்கும் வேட்பாளருக்கும் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வாதங்களை முன்வைத்தார். நோட்டாவுக்கான முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும் என்பதே முக்கியமான வாதமாக இருந்தது.
இந்த மனுவுக்குப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.

நோட்டவும் தேர்தலும்!
இந்தியத் தேர்தல் விதிகள் 1961-இன் விதி எண் 49-ஓ ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்பதை வாக்காளர்கள் பதிவுசெய்ய அனுமதித்தது. வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரியிடம் தெரிவித்து, இதற்கான படிவத்தைப் பெற்றுப் பதிவுசெய்யலாம். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று 2013 செப்டம்பர் 27 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதே நேரம், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை வாக்காகவே பதிவுசெய்வதற்கான வாய்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ‘யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை’ (None of the Above, NOTA) என்பது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் சேர்க்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 1.08% நோட்டாவுக்குப் பதிவானது. 2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 1.06% பதிவானதுஇந்த நோட்டா அமல்படுத்தியதற்கு முக்கியமான காரணம் போலி வாக்குகள் தடுப்பது , குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்குப் பதிலாக, மக்களின் மதிப்பைப் பெற்ற வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் நிறுத்துவதற்கான தார்மீக அழுத்தத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது எதுவுமே நடக்கவில்லை. அதற்குப் பதிலாக முதல், இரண்டாம் இடத்தைப் பிடிக்க வேட்பாளர் இடையே தீவிரமான போட்டியை மட்டுமே நோட்டா உருவாக்கி வருகிறது.

நோட்டாவுக்கு கூடுதல் அதிகாரம்?

மக்களின் நியாயமான முடிவுகளைத் தெரிந்துகொள்ள நோட்டாவுக்கு கூடுதல் அதிகாரம் தரவேண்டும் என்பது தற்போது கோரிக்கையாக வலுத்துவருகிறது. குறிப்பாக, அனைத்து வேட்பாளர்களையும் நிராகரித்து நோட்டாவுக்கு வாக்களிக்கும் மக்களின் மனநிலைக்கு கூடுதல் மதிப்பு தரவேண்டும். அந்த வேட்பாளரின் பின்னணி என்ன? என்பதைக் கவனிக்கும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. அதனால், அவர்கள்மீது இருக்கும் கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்களும் வேட்பு மனுவில் இணைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் தெரிந்துகொள்வதற்கான வெளிப்படைத்தன்மையும் உள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு வேட்பாளரைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக நோட்டாவுக்கு மக்கள் வாக்களிக்கலாம். ஆனால், நோட்டாவுக்குப் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்வது சாத்தியமாகுமா?எனினும், மக்களின் மனநிலையைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு தடை, மறுவாக்குப்பதிவு நடத்துவது, வேட்பாளர்களை மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையம் யோசிக்கலாம் என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் மொத்தமுள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையில், ஒரு வாக்கு சதவீதத்தை நிர்ணியத்து, அந்த அளவிற்கு நோட்டா வாக்குப் பதிவானால் மறுதேர்தல் நடத்தலாம். வேட்பாளர்களை மாற்றுவதைக் கட்டாயப்படுத்துவதும், இல்லை அரசியல் கட்சிகளின் கைகளில் விட்டுவிடுவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றலாம்.

எடுத்துக்காட்டு: தொகுதி மொத்த வாக்காளர் என்ணிக்கை: 15 லட்சம்
அதில், 5% வாக்குகள் (75,000) நோட்டாவுக்குப் பதிவானால் அங்கு மறுதேர்தல் நடத்தலாம் என்னும் நடைமுறையைக் கொண்டுவரலாம்.
ஆனால், இதில் முழுஅதிகாரம் பெற்றிருக்கும் தேர்தல் என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொறுந்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *