Decode News: எமர்ஜென்சியைப் பற்றி பா.ஜ.க. பேசலாமா?
2024 தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கக் காலத்தில், பா.ஜ.க. தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததும் அரசியலைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கும் என அதன் நிர்வாகிகள் பேசியதில் இருந்து, அதை மையப்படுத்தியும் அரசியல் அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுமே எதிர்க்கட்சியினர் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். வலுவான எதிர்க்கட்சியாகத் தேர்தலில் வென்றதையடுத்து பதவிப்பிரமாணத்தின் போது, அரசியலமைப்புப் புத்தகத்தை கையில் ஏந்தினர். கடந்த 10 ஆண்டு ஆட்சியில் ஜனநாயகத்திற்கு எதிரான ஒடுக்குதல்களை எதிர்க்கட்சிகள் அவையில் பேசும் முன், அவர்களின் வாய்களுக்குப் பூட்டு போடவும் திசை திருப்பவுமே எமர்ஜென்சியைக் கையிலெடுத்திருக்கிறது பா.ஜ.க.
DNOTe தளத்தில், நாளிதழ்களில் வெளியாகும் முக்கியச் செய்திகளை ‘டிகோட்’ செய்கிறோம். அந்த வகையில், 2024 ஜூன் 27ம் தேதி ‘தி இந்து’ ஆங்கில இதழிலின் நடுப்பக்கத்தில் வெளியான ‘Lip Service: Ruling Party cannot critique Emergency while promoting authoritarianism – எதேச்சாதிகாரத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் ஆளும் கட்சி எமர்ஜென்சியை விமர்சிக்க முடியாது!’ என்ற கட்டுரையை டிகோட் செய்திருக்கிறோம்.
கட்டுரையிலுள்ள முக்கியக் கருத்துக்கள்:
1. 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின் 21 மாதங்கள் அது அமலில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் எதிர்க்கருத்துக்கள் நசுக்கப்பட்டன. எதிர்ப்பாளர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடுமையான தடுப்புச் சட்டங்களும் அமலில் இருந்தன. இதனால் ஒட்டுமொத்த இந்தியர்களும் பாதிக்கப்பட்டனர் என்பது உண்மை.
2. ஆகவே, இன்றைய தலைமுறையினர் நினைவு கூறும் வகையில் எமர்ஜென்சி தொடர்பாக தீர்மானத்தைக் கொண்டுவந்ததாகப் பேசினார் சபாநாயகர் ஓம் பிர்லா. ஆனால், கடந்த மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா இருந்தபோது தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி எம்.பி.க்களைக் கூட்டாக சஸ்பெண்ட் செய்தார். எமர்ஜென்சி அறிவிக்காமலேயே இங்கு பல நிகழ்வுகள் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக இருந்தன. எனவே, இவர்கள் கொண்டுவந்திருக்கும் இந்தத் தீர்மானம் காங்கிரஸ் கட்சியை டார்கெட் செய்ய மட்டுமே.
3. கருத்துச் சுதந்திரம் எமர்ஜென்சி காலத்தில் பறிக்கப்பட்டது குறித்து அரசு பேசுகிறது. ஆனால், கடந்த கால பா.ஜ.க. ஆட்சியில் ஊடகத் துறை மீது கட்டவிழ்த்த அடக்குமுறை ஏராளம். சுதந்திர ஊடக நிறுவனங்கள் மீது விசாரணை அமைப்புகளை ஏவியது எனப் பா.ஜ.க. அட்சியில் பல அடக்குமுறைகள் நடந்தன. அதுமட்டுமின்றி, ஊடகவியலாளர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது என, ஊடக சுதந்திரத்திற்கு எதிராக பா.ஜ.க.வின் ஒட்டுக்குமுறைகளைப் பட்டியலிட்டால் அது நீளும். பா.ஜ.க.வின் இந்த அடக்குமுறைகள் அவர்களைப் பெரும்பான்மை இழக்கச் செய்துள்ளது. எமர்ஜென்சிக்குப் பிறகு 1977ல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது போல், பா.ஜ.க. 2024ல் தோல்வியைச் சந்திக்கவில்லை. ஆனால், பெரும்பான்மையை இழந்துள்ளது.
4. பா.ஜ.க. தன் அடக்குமுறைகளால் ஒடுங்கியுள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சிகள் இன்று பெரும் பலத்துடன் மக்களவையில் அமர்ந்துள்ளன. எதிர்க்கட்சிகள் கடந்த 10 ஆண்டு ஆட்சியின் அவலங்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்து ஆளும் கட்சியிடம் கேள்வித் தொடுக்கும். 2024 தேர்தல் நெருங்கிய தருணத்தில் இருந்து நீதித்துறையும் நீதியைக் காக்கும் படியாகச் செயல்பட்டு வருகிறது. அது இந்த ஆட்சியில் மேலும் வலுப்பெறும். இப்படி அனைத்து மட்டங்களிலும் மாற்றம் ஏற்படும். அப்போது எமர்ஜென்சி என்னும் வடு இந்தியாவில் இருந்து மறையும்.
இப்படி அந்தக் கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது. அச்சிறு கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை தான். கட்டுரையில் குறிப்பிடத் தவறியவற்றைப் பார்க்கலாம்.
பா.ஜ.க. எமர்ஜென்சி கையிலெடுத்த காரணம்
புதிய மக்களவை வளாகத்தில் செங்கோலை நிறுவியது பா.ஜ.க. இது, பா.ஜ.க. ஜனநாயக ரீதியாக அல்லாமல் முடியாட்சியைக் கையிலெடுத்து செயல்படுவதையே உணர்த்தியது. 2024ல் தனிப் பெரும்பான்மை பெற்றிருந்தால் ஜனநாயகத்தை ஒழித்து முடியாட்சியை அமல்படுத்தியிருக்கும். ஆனால், தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்த சரிவு, அவர்களை அரசியலமைப்பை ஏற்கச் செய்திருக்கிறது. குறிப்பாகப் பதவியேற்புக்கு முன்பு பிரதமர் மோடி அரசியலமைப்புப் புத்தகத்தை கைகளில் ஏந்தி கண்களில் ஒற்றி வணங்கினார்.
கடந்த இரு தேர்தல்களிலும் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இம்முறையும் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என பா.ஜ.க. கருதியது. அதனால், ‘400’ தொகுதிகளில் வெற்றி என்ற பிரச்சாரத்தை முன்வைத்தது. பெரும்பான்மை கிடைத்தவுடன் அரசியலமைப்பை மாற்ற பா.ஜ.க. திட்டமிட்டிருப்பதாக அக்கட்சியைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளே பொதுவெளியில் பேசினர். ஜனநாயகத்தை வேரறுக்கும் பா.ஜ.க.வின் இந்த Hidden Agenda வெளியாகிப் பரபரப்பை மட்டும் ஏற்படுத்த வில்லை. தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்தது. அதனால் முதல்கட்டத் தேர்தலில், 400 எனத் தொடங்கிய பா.ஜ.க. பின், தன் கட்சியின் வரலாற்றுச் சாதனையாகக் கருதும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை (Article 370) நினைவுப்படுத்தும் வகையில் ‘370’ எனத் தன் வெற்றி இலக்கைக் குறைத்துக் கூறியது. அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களில் மக்களின் அதிருப்தியை உணரத் தொடங்கியும் பா.ஜ.க. பிரச்சாரக் களத்தில் அமையானது வேறு கதை.
தேர்தல் முடிவுகள் அரசியலமைப்பை மதித்தாக வேண்டும் என பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்டியிருக்கிறது. பா.ஜ.க.வின் இந்தத் தோல்வி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என, எதிர்க்கட்சியினர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அதை மக்களவையில் மேலும் உணர்த்தவே எதிர்க்கட்சியினர் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு பதவியேற்றனர்.
எதிர்க்கட்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ‘ஜனநாயகத்திற்கு எதிராகக் காங்கிரஸ் தான் எமர்ஜென்சியை அமல்படுத்தியது’ என, மக்களவையில் சபாநாயகரைப் பேச வைத்திருக்கிறது பா.ஜ.க. மேலும், அவசர நிலை குறித்து குடியரசுத் தலைவரும் தன் உரையில், ‘‘எமர்ஜென்சி – அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்’’ எனக் குறிப்பிட்டார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும் வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் எம்பி சசிதரூர், “அவசர நிலை ஜனநாயகத்துக்கு எதிரானதுதான்.ஆனால், அது அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானதல்ல” எனக் கூறியிருக்கிறார்.
ஆம். சட்டப்பிரிவு 352ன் படி போர் நடக்க வாய்ப்பிருந்தாலும், பிரிவு 356ன் படி மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்தாலும், அரசியல் சாசனப் பிரிவுகள் கடைப்பிடிக்காவிட்டாலும், பிரிவு 360ன் படி நிதி நெருக்கடி ஏற்பட்டாலும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தலாம்.
ஆக, சட்டம் அனுமதித்த ஒன்றைத்தான் காங்கிரஸ் அமல்படுத்தியது; அதனால், பலர் பாதிக்கப்பட்டனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இதை இப்போது மக்களவையில் பேசுவதால் மக்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. ஆனால், அரசியலமைப்பைச் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகள், கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. மேற்கொண்ட ஒடுக்குமுறைகளை அவையில் பேசாமல் தடுக்கவே, எதிர்க்கட்சிகளைத் திசை திருப்பும் நோக்கில் எமர்ஜென்சியை பேசி வருகிறது பா.ஜ.க.
இறுதியாக, தி இந்து ஆங்கில நாளிதழ், ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்பின் மீதும் நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்ட கருத்துக்களையே முன்வைத்துள்ளது. அதனூடாக அவற்றிற்கு எதிராகச் செயல்பட்ட பா.ஜ.க.வையும் தோலுரித்துக் காட்டியுள்ளது!