Sunday, December 22, 2024
ExplainerPolitics

விக்கிரவாண்டி: அ.தி.மு.க. விலகியது ஏன்… சாதி அரசியல் தோற்றதா? தி.மு.க. வென்றது எப்படி?

விக்கிரவாண்டி தொகுதி வன்னியர் சமுதாய வாக்குகள் அதிகமுள்ள தொகுதி. எனவே, அது பா.ம.க.வுக்குச் சாதகமாக அமையும் என அக்கட்சியினர் மட்டுமின்றி அ.தி.மு.க. தலைமையும் நம்பியது. அதுமட்டுமின்றி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணியை மனதில் வைத்து பா.ம.க.விற்குத் தொகுதியை விட்டுக்கொடுத்தார் பழனிசாமி. அதை உறுதி படுத்தும் விதமாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ’அ.தி.மு.க. தொண்டர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்’ எனப் பேசியிருந்தார். இருந்தும்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஏலம் விட்டு தி.மு.க. வெற்றி பெற்றதாகப் பா.ம.க., நாம் தமிழர் என, இரு கட்சிகளும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ‘இலவச பொருட்களுக்கும் தி.மு.க. செலவளித்த ரூ.250 கோடிக்குக் கிடைத்த வெற்றி’ எனக் கடுமையாக விமர்சித்தார். உண்மையில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வெற்றியைச் சாத்தியப்படுத்தியது எப்படி?

விக்கிரவாண்டி தி.மு.க. – எம்.எல்.ஏ.வான புகழேந்தி மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்து காலமானார். அதனால், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் யாரும் எதிர்ப்பாராத வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்தது அ.தி.மு.க. அதனால் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பாக சி.அன்புமணி ஆகியோர் பிரதானப் போட்டியாளர்களாகக் களத்தில் இருந்தனர்.

இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10ம் தேதி நடந்தது. அங்கு 82.48 சதவீதம் வாக்குப் பதிவானது. இதன் முடிவுகள் ஜூலை 13ம் தேதி வெளியானது. இதில், அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56,296​​ வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது. சுமார் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார்.
தி.மு.க. இந்த வெற்றியைப் பெற்றது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, கடந்த காலத் தேர்தல் வரலாறு குறித்து பார்ப்பதும் அவசியம்.

தேர்தல் வரலாறு!

தொகுதி மறுவரை செய்யப்பட்டு 2011ம் ஆண்டு தான் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் ஒரு இடைத்தேர்தலைச் சந்தித்துள்ளது விக்கரவாண்டி தொகுதி. இதில் இரண்டு முறை தி.மு.க. வென்றுள்ளது. ஒரு இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வென்றுள்ளது.
2016, 2019 (இடைத்தேர்தல்) மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. – அ.தி.மு.க. நேரடியாகப் போட்டியைச் சந்தித்தன.

விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தி.மு.க.

ஆனால், இம்முறை சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் இருந்து விலகியிருக்கிறது அ.தி.மு.க. இதனால், தி.மு.க. – பா.ம.க. என, இரு கட்சிகளுக்கு இடையே போட்டி எனக் களம் மாறியது. குறிப்பாக, கடந்த 2016ல் தி.மு.க. சார்பாகப் போட்டியிட்ட ராதாமணி 63,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் 3.98% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 2019 நடந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பாகப் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன் 1,13,766 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 23.81% வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பாகக் களம் கண்ட புகழேந்தி 68,842 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இந்த நிலையில், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கிய புகழேந்தி 93,730 வாக்குகள் பெற்று 4.97% வாக்கு வித்தியாசத்தில் வென்றார். விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க.வுக்கும் குறிப்பிட்ட அளவில் வாக்கு வங்கி இருக்கிறது. 2016ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சியும் தனித்தனியாகத் தேர்தலைச் சந்தித்தன. அப்போது, தி.மு.க. 35% வாக்குகளையும் அ.தி.மு.க. 31% வாக்குகளையும் பா.ம.க. 23% வாக்குகளையும் மக்கள் நலக் கூட்டணியில் சி.பி.எம். 5% வாக்குகளையும் பெற்றிருந்தன.

அ.தி.மு.க. விலகல் தி.மு.க.வுக்கு சாதகம்!

விக்கிரவாண்டி தொகுதி வன்னியர் சமுதாய வாக்குகள் அதிகமுள்ள தொகுதி. எனவே, அது பா.ம.க.வுக்குச் சாதகமாக அமையும் என அக்கட்சியினர் மட்டுமின்றி அ.தி.மு.க. தலைமையும் நம்பியது. அதுமட்டுமின்றி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணியை மனதில் வைத்து பா.ம.க.விற்குத் தொகுதியை விட்டுக்கொடுத்தார் பழனிசாமி என்னும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதை உறுதி படுத்தும் விதமாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ’அ.தி.மு.க. தொண்டர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்’ எனப் பேசியிருந்தார்.

அன்புமணி, எடப்பாடி பழனிசாமி.

ஆக, அ.தி.மு.க. விலகல் பா.ம.க.வுக்குப் பெரிய அளவில் கைகொடுக்கலாம் என சொல்லப்பட்டது. 2016ல் பா.ம.க. சார்பாகக் களம் கண்ட சி.அன்புமணி 41,428 வாக்குகள் பெற்றார். அவரே இம்முறை களம் இறக்கப்பட்டார். ஆனால் அவர் அப்போது பெற்றதைவிடக் கூடுதலாக 14,868 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். ஆகவே பெரியளவில் அ.தி.மு.க.வின் வாக்குகள் பா.ம.க.வுக்குக் கிடைக்கவில்லை.

களத்தில் ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக பலமான கட்சியாக பா.ம.க. மட்டுமே இருப்பதால் தி.மு.க.வுக்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரத்தைக் கையிலெடுத்தது பா.ம.க. குறிப்பாக, தி.மு.க. ஆட்சியின்போது ரத்து செய்யப்பட்ட 10.5% வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது பா.ம.க. மேலும், சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் குரலெழுப்பி வெளிநடப்பு செய்வது எனப் பல முன்னெடுப்புகளைத் தி.மு.க.வுக்கு எதிராகச் செய்தது பா.ம.க. ஆனால், அந்த வியூகங்கள் ஏதும் பெரிதாக வாக்குகளைப் பெற்றுத் தரவில்லை.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடந்த விஷச்சாராய மரணங்களும், பகுஜன் சமான் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையும் தி.மு.க.வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்; தி.மு.க. ஆட்சியின் மீதான அதிருப்தியாளர்களின் வாக்குகளை பா.ம.க. அறிவடை செய்யும் எனச் சில தரப்பினர் பேசத் தொடங்கினர். அதனால், பா.ம.க. மட்டுமின்றி நாம் தமிழர் கட்சியினரும் இவ்விரண்டு சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகளை முன்வைத்தே பிரச்சாரத்தையே மேற்கொண்டனர்.
ஆனால், சட்டப்பேரவை இடைத் தேர்தலைப் பொறுத்தவரை அந்தத் தொகுதிக்கு ஆளும் அரசால் என்ன பலன் என்பதைக் கணக்கிட்டுத்தான் மக்கள் தங்கள் வாக்கைச் செலுத்துவர். அதுதான் இந்தத் தேர்தலிலும் நடந்திருக்கிறது. அதனால்தான் கள்ளக்குறிச்சி விஷச்சாராய சாவும், ஆம்ஸ்ட்ராங் படுகொலையும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளும் எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.


அதேவேளையில், பட்டியலின மக்களின் வாக்குகள் தி.மு.க. – வி.சி.க. கூட்டணிக்குச் சென்றிருக்கிறது. ஒருவேளை, அ.தி.மு.க. களத்தில் இருந்திருந்தால் பட்டியலின மக்கள் வாக்குகள் சிதறியிருக்கும். ஆனால், பா.ம.க. – பா.ஜ.க. கூட்டணி அமைத்து எதிர்வரிசையில் இருப்பதால் பட்டியலின மக்கள் வாக்குகள் மட்டுமின்றி சிறுபான்மையினர் வாக்குகளும் அவர்கள் பக்கம் செல்லவில்லை. அது முழுவதும் தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மேலும் தி.மு.க. கொண்டுவந்த சமூக நலத் திட்டங்கள் தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *