மம்தா vs நிர்மலா: பொய் சொன்னாரா மம்தா? நிதி ஆயோக் கூட்டத்தில் நடந்தது என்ன?
நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே பேச முடிந்ததாகவும் அதன்பின் தன் மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும் கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தார். அவர், பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். இதன் பின்னணி என்ன?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9வது ஆட்சிக்குழுக் கூட்டம் டெல்லியில் ஜூலை 27ம் தேதி தொடங்கியது. இதில், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவை, வளர்ந்த நாடாக மாற்றுவது குறித்து இந்தக் கூட்டத்தில் பேசப்படும். ஆனால், 2024 மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
குறிப்பாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். இந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் குரலாகத் தான் பங்கேற்க உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி இருந்தார். அதன்படி அவர் கூட்டத்திலும் பங்கேற்றார். கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குப் பேச அதிக நேரம் வழங்கியதாகவும் மம்தாவுக்கு வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே பேச வாய்ப்புக் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துக் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “கூட்டத்தில் மாநில அரசுகளை ஒன்றிய அரசு பாரபட்சமாக நடத்தக் கூடாது எனக் கூறினேன். தொடர்ந்து பேச விரும்பினேன். ஆனால் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தனர். எனக்கு முன் பேசியவர்கள் 10 – 20 நிமிடங்கள் வரை பேசினர். எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்ற போதும், என்னைப் பேசவிடாமல் தடுக்கிறார்கள். இது வங்கத்தை மட்டுமல்ல, அனைத்து பிராந்தியக் கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும்,” என்றார்.
மம்தா புறக்கணிக்கப்பட்டதற்குத் தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். அதில், “இதுதான் கூட்டாட்சியா? ஒரு மாநில முதலமைச்சரை நடத்தும் முறை இதுதானா? எதிர்க்கட்சிகளும் ஜனநாயகத்தின் அங்கம் என்பதையும், அவர்களை எதிரியாகப் பார்க்கக் கூடாது என்பதையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு புரிந்து கொள்ள வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மம்தா பானர்ஜி கூறுவது முற்றிலும் பொய் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , “ஒவ்வொரு முதல்வருக்கும் குறிப்பிட்ட நேரம் வழங்கப்பட்டது. அது ஒவ்வொரு முதல்வரின் மேசையின் முன்பும் இருந்த திரையில் காட்டப்பட்டது. தனது மைக் அணைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி ஊடகங்களில் கூறியிருந்தார். ஆனால், அது முற்றிலும் பொய். பொய்யை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார். இதன் பின்னணியில் உள்ள உண்மையை அவர் பேச வேண்டும்” என நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதேபோல், பி.ஐ.பி. தன் எக்ஸ் பக்கத்திலும், “மம்தா பானர்ஜி பேசும்போது மைக் அணைக்கப்பட்டதாகக் கூறுவதில் உண்மை இல்லை. அவருடன் நேரம் தான் முடிந்ததே தவிர மைக் அணைக்கப்படவில்லை” எனப் பதிவிட்டுள்ளது.
மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவித்ரி, “ஒரு மாநில முதல்வருக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் பேச அனுமதி வழங்கவில்லை எனக் கூறுவதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை,” எனப் பேசியிருக்கிறார்.
‘மைக் அணைக்கப்பட்டதாக மம்தா கூறுவதைப் பலரும் பொய் எனக் கூறலாம். ஆனால், இந்த விவகாரத்தில் நாம் பேச வேண்டியதும் சிந்திக்க வேண்டியதும் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் பிரதிநிதியாகச் சென்றவருக்கு, 30 நிமிடங்கள் கூடப் பேச வாய்ப்பளிக்காமல், தனது கூட்டணிக் கட்சியினருக்கு மட்டுமே கூடுதல் நேரம் பேச பா.ஜ.க. வாய்ப்பளித்திருக்கிறது என்பதைப் பற்றித்தான். இது கண்டனத்திற்கு உரியது. இது நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் அவமதிப்பதாக மட்டுமல்ல, எதிர்க் கருத்துகளைச் செவி மடுத்துக் கேட்கக்கூடப் பா.ஜ.க. விரும்பாததையே உணர்த்துகிறது. சகிப்பின்மையை ஒன்றிய அரசு கைவிட்டால்தான் நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கி நகரும்’ என, அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.