Sunday, December 22, 2024
CriticsEventsPolitics

தி.மு.க. – எம்.எல்.ஏ.வின் பாட்டிக்கு விஜய் மாநாட்டில் பிரமாண்ட ’கட் அவுட்’… த.வெ.க. அட்மினுக்குத் தெரியுமா?

சுதந்திரப் போராட்டத்தில் தன்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அஞ்சலை அம்மாளைக் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெருமைக்கும் வாக்குவங்கி அரசியலுக்கும் பயன்படுத்துவது எப்படி சரியானதாக இருக்கும்? சாதிய அரசியலுக்காகச் சுதந்திரப் போராளியைப் பயன்படுத்துவது மோசமான செயல் மட்டுமல்ல அவரைச் சிறுமைப் படுத்துவதாகவும் அமையும்.
– எழிலன், தி.மு.க. – எம்.எல்.ஏ.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக். 10) விக்ரவாண்டியில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தது. மாநாட்டு மைதானத்தின் ஒவ்வொரு அசைவுகளும் வைரலாகின. அதில் குறிப்பாக மாநாட்டில் வைக்கப்பட்ட ‘கட் அவுட்’கள் பேசுபொருளாகின. முதல் நாள் ‘கட்அவுட்’டில் அம்பேத்கர், காமராஜர், பெரியார் படங்கள் இடம்பெற்றன. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை இடம்பெறாதது விமர்சிக்கப்பட்டதோடு, பெரியார் ஈ.வெ.ராமசாமியின் படம் இடம்பெற்றதை, பா.ஜ.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை நடிகர் விஜய் எடுத்திருப்பதாகவும், இது திராவிடக் கட்சிகளின் வாக்குகளை சரிக்கும் என்றும் கூறப்பட்டன.

அடுத்த நாள் வைக்கப்பட்ட ‘கட்அவுட்’களில், தமிழ் அன்னை, சேரர், சோழர், பாண்டியர், வேலு நாச்சியார் படங்களோடு அஞ்சலை அம்மாளின் படமும் இடம்பெற்றது.

‘அஞ்சலை அம்மாள் யார்?’ என, விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலதரப்பினரும் இணையத்தில் தேடினர். அவர்களுக்கு ‘தென்னிந்தியாவின் ஜான்சி ராணி அஞ்சலை அம்மாள்’ என்ற தகவல்கள் பரவலாகக் கிடைத்துள்ளன.

யார் இந்த அஞ்சலை அம்மாள்?

கடலூரில் 1890ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி அம்மாக்கண்ணு – முத்துமணி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் அஞ்சலை அம்மாள். தன் சொத்துக்களை விற்று சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டார். குறிப்பாக, 1921ம் ஆண்டில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தென்னிந்தியாவில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

அஞ்சலை அம்மாள்


1934ம் ஆண்டு தமிழ்நாடு வந்த காந்தி, அஞ்சலையைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அதற்கு ஆங்கிலேய அரசு தடை விதித்ததால், பர்தா அணிந்து வந்து காந்தியைச் சந்தித்தார். அவரது நெஞ்சுரத்தைப் பாராட்டி, அவரை ‘தென்னிந்தியாவின் ஜான்சிராணி’ என, காந்தி புகழாரம் சூட்டினார்.
1931ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்திற்கு அஞ்சலை தலைமை தாங்கினார். மேலும், 1937, 1946, 1952 என, மூன்று முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகக் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1961ம் ஆண்டு காலமானார். அஞ்சலை அம்மாளின் பேரன் தான் ஆயிரம் விளக்குத் தொகுதியின் தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான எழிலன்.

இதுகுறித்து தி.மு.க. – எம்.எல்.ஏ. எழிலன் கூறுகையில், “நான் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவுடன் எந்தப் பின்புலமும் இல்லாமல் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன் . குறிப்பாக, எளிய பின்னணி கொண்ட பாட்டி அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 9 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். பெரியார் மற்றும் காந்திக்கு நெருக்கமானவர். அஞ்சலை அம்மாளின் கடலூர் வீட்டுக்குக் காந்தி வந்திருக்கிறார். ஆகவே, இவருக்கு மரியாதை செய்யும் வகையில் எனது கோரிக்கை ஏற்கப்பட்டு கடலூரில் சிலை அமைக்கப்பட்டது.
ஆனால், தற்போது அஞ்சலை அம்மாளைக் குறிப்பிட்ட சமுதாயத்துக்காகவும் வெறும் வாக்கு அரசியலுக்காகவும் பயன்படுத்துவது எப்படிச் சரியானதாக இருக்கும்? த.வெ.க. மாநாட்டில் கட்அவுட் வைக்கப்பட்டது குறித்து நான் கருத்துச் சொல்ல முடியாது. ஆனால், அவரின் பெயரை வெறும் வாக்கு, சாதிய அரசியலுக்காகப் பயன்படுத்துவது மோசமான செயல்,” என, தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாகச் சாடினார்.

எழிலன், தி.மு.க. – எம்.எல்.ஏ.

இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் சிலர், “தொடக்கத்தில் இருந்தே விஜய்யின் வெற்றிக் கழகம் முதிர்ச்சியற்ற கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கட்சி பெயரில் எழுத்துப் பிழை, கொடி மற்றும் சின்னங்களில் சர்ச்சை என முதிர்ச்சியற்ற கட்சி என்னும் பெயரை எடுத்துள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. – எம்.எல்.ஏ.வின் பாட்டிக்கு கட் அவுட் வைத்துள்ளனர். அஞ்சலை அம்மாளை பா.ம.க.வினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். உண்மையிலேயே அஞ்சலை அம்மாள் தி.மு.க. – எல்.எல்.ஏ. எழிலனின் பாட்டி என்பதைத் தெரிந்துதான் தமிழக வெற்றிக் கழகம் அவருக்கு கட் அவுட் வைத்ததா? அவரைப் பற்றி முழுமையான வரலாறு கட்சியினருக்குத் தெரியுமா? இல்லை கூகுளில் தேடிப் படத்தை மட்டும் வைத்துள்ளனரா? ’’ எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

கட்அவுட்டில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் முற்றிலும் முரணான கருத்துக்களைக் கொண்டவர்கள். அதனால் தலைவர்களது கட்அவுட்களைக் கொண்டு விஜய் முன்வைக்கும் தனது கட்சியின் கொள்கை என்ன என்பதை யாராலும் கணிக்கவோ அவதானிக்கவோ இயலாது. த.வெ.க.வின் கொள்கை கோட்பாடுகளை மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் மேடையேறி விஜய் கூறுவார் என்ற நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் மாநாட்டிற்குள் சென்றுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

One thought on “தி.மு.க. – எம்.எல்.ஏ.வின் பாட்டிக்கு விஜய் மாநாட்டில் பிரமாண்ட ’கட் அவுட்’… த.வெ.க. அட்மினுக்குத் தெரியுமா?

  • நீங்கள் எப்படி அஞ்சலை அம்மாள் ஒரு சாதிய கட்சியை சார்ந்தவர் என்று சொல்லலாம் அந்த சாதி ஓட்டுகள் வேண்டும் என்பதால் தான் அவர் படம் வைக்கப்பட்டது என்பது தான் முதிர்ச்சி இல்லாமையை காட்டுகிறது

    ஒவ்வொரு கட்சியின் பேனர்களிலும் ஒவ்வொரு தனித்துவம் வாய்ந்த மக்களுக்காக போராடியவர்கள் படம் வைக்கப்படும் அவர்கள் அனைவருக்கும் ஒரு சாதி உள்ளது நீங்கள் எப்படி அஞ்சலை அம்மாள் மட்டும் ஒரு சாதிய ஓட்டாக பரப்புகிறீர்கள் அப்படி என்றால் நீங்கள் தான் வைரல் ஆக்குகிறீர்கள்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *