13ல் 10: ‘இண்டியா’ கூட்டணி வெற்றி: பா.ஜ.க. சறுக்கக் காரணம் என்ன?
இந்தியாவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் , இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், பிஹார் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த முதல் இடைத்தேர்தல் என்பதால், பலரது கவனமும் தேர்தல் முடிவுகளை நோக்கி இருந்தன. குறிப்பாக, ஆளும் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அடங்கிய ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பொதுவாக இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்பது ‘விதி’யாகவே கொள்ளப்பட்டாலும் இந்த இடைத்தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே ஆளும் பா.ஜ.க.வும், 10 இடங்களில் ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளும் ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளரும் கைப்பற்றி இருப்பது அரசியல் நோக்கர்களை உற்றுநோக்கச் செய்துள்ளது.
இடைத்தேர்தல் நிலவரம்!
1. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. ஏற்கனவே, தி.மு.க. வேட்பாளர்தான் இந்தத் தொகுதியில் வென்றிருந்தார். தற்போது தி.மு.க.வே தொகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
2. மேற்கு வங்கத்தில் பாக்தா, ரனாகாட் தக்ஷின், மணிக்தலா மற்றும் ராய்கஞ்ச் ஆகிய நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், ஒரு தொகுதியைத் திரிணமூல் காங்கிரஸ் தக்கவைத்தது மட்டுமின்றி, பா.ஜ.க. வசம் இருந்த மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது.
3. இமாச்சல் பிரதேசத்தில் ஹமிபூர், டெஹ்ரா மற்றும் நலகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ.க. ஒரு தொகுதியில் புதிதாக வென்றது. மற்ற இரு இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
4. பிஹாரில் ரூபாலி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வசமிருந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் கைப்பற்றியுள்ளார். பெரிய கட்சிகள் களத்தில் இருந்தும் சுயேச்சை வேட்பாளர் வென்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
5. பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. கடந்த 2022ம் ஆண்டு ஆம் ஆத்மி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரான ஷீடல் அங்கூரல் பா.ஜ.க.வில் இணைந்தார். அதன்பிறகு தான் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்முறை பா.ஜ.க.விலிருந்து போட்டியிட்ட ஷீடல் அங்கூரல் தோல்வியைத் தழுவியிருக்கிறார். ஆகவே, ஆம் ஆத்மி தங்கள் தொகுதியைத் தக்கவைத்துள்ளது.
6. உத்தரகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. ஒரு தொகுதியைத் தக்கவைத்த காங்கிரஸ், மற்றொரு தொகுதியைப் புதிதாகக் கைப்பற்றியுள்ளது.
7. மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமர்வாரா தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் இத்தொகுதியில் வென்றது. அந்தத் தொகுதி வேட்பாளர் பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக அவரே களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, கூட்டணியாகப் பார்க்கும்போது இண்டியா கூட்டணிக் கட்சிகள் மாநில இடைத்தேர்தலில் வென்று கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் ஒரு இடத்தை இழந்தும் 3 இடங்களைக் கூடுதலாகப் பெற்றும் ஒரு இடத்தைத் தக்கவைத்தும் உள்ளது. ஆம் ஆத்மி தன் ஒரு இடத்தைத் தக்கவைத்துள்ளது. திரிணமூல் 3 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. தி.மு.க. தன் ஒரு இடத்தைத் தக்கவைத்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை இரண்டு இடங்களில் புதிதாக வென்றும் 3 இடங்கள் இழந்தும் இருக்கிறது பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்தை இழந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும் எனப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகவே, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தபோதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க.வின் 10 ஆண்டு ஆட்சியின் மீதான அதிருப்தி தான் பின்னடைவுக்குக் காரணம் என எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். தற்போது இடைத்தேர்தல் முடிவுகளும் பா.ஜ.க.வுக்குச் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிராக, மாநிலக் கட்சிகளான திரிணமூல், ஆம் ஆத்மி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. அந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால், ‘இண்டியா’ கூட்டணியின் மையப்புள்ளி பா.ஜ.க.வின் கொள்கை எதிர்ப்புதான். அதனால்தான் மாநில அளவில் மேற்கு வங்கத்தில் திரிணமூல், காங்கிரஸ் இரு துருவங்களாக இருந்தாலும் ‘இண்டியா’ கூட்டணிக்குத் தான் மம்தா ஆதரவு தெரிவித்தார். எனவே, மாநில அளவில் கூட்டணிக் கட்சிகள் எதிர் எதிராக நின்று போட்டியிட்டிருந்தாலும், ஒன்றிய அளவில் நிலைப்பாடு வேறாகவே இருந்துள்ளது. அதவால் இந்த வெற்றி ‘இண்டியா’ கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் குறிப்பாக, பா.ஜ.க.வுக்கு எதிரான வெற்றி என்னும் அளவுகோலில் இது ‘இண்டியா’ கூட்டணியின் வெற்றி எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்னும் கருத்துக்களை அரசியல் விமர்சகர்கள் முன்வைப்பதைத் தவிர்த்துவிட முடியாது.
ஆக, எதிர்க்கட்சிகள் முன்வைப்பது போல், அடுத்தடுத்து சறுக்கல்கள் பா.ஜ.க. மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்து வருவதை உறுதிப்படுத்துகின்றன. இதை எதிர்க்கட்சிகள் சரியாகக் கையாண்டு மக்கள் மன்றத்தில் செல்வாக்கு பெற விளைவார்களாக என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.