சபாநாயகரின் ‘வார்த்தைத் தடை’ புத்தகத்திற்குச் சொற்களை வாரி வழங்கிய ராகுல்! என்னென்ன சொற்கள் தெரியுமா?
பிரதமர் மோடியின் இதற்கு முந்தைய ஆட்சியில் மக்களவைச் சபாநாயகராக இருந்தார் ஓம் பிர்லா. அவர், மக்களவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை 2022 ஜூலையில் வெளியிட்டார். அதே ஓம்பிர்லாதான் தற்போதைய மக்களவையிலும் சபாநாயகராக பா.ஜ.கவால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
மக்களவையில் நேற்று (ஜூலை 1) எதிர்க் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்தி ஆற்றிய முதல் உரையில் பா.ஜ.க.வுக்கு எதிராகப் பல்வேறு கருத்துக்களை அடுக்கினார். அவர் பேச்சின் உக்கிரம் தாங்காமல் சபையே கொந்தளித்தது. எதிர்க்கட்சிகள் ராகுலின் ஒவ்வொரு கேள்விக்கும் மேடையைத் தட்டி கொண்டாடினர். ஆனால் ஆளும் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
ராகுலின் பேச்சைத் தாக்க முடியாமல், பிரதமர் மோடி இருமுறை ராகுல் பேசும் போது குறுக்கிட்டுப் பேசினார். அதைத் தொடர்ந்து, ராகுலின் பேச்சை, உள்துறை அமைச்சர் அமித்ஷா நான்கு முறையும், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பார்லிமென்ட் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபீந்தர் சீங் யாதவ் தலா ஒரு முறையும் குறுக்கிட்டனர்.
இவ்வளவு குறுக்கீடுகளையும் கடந்து ராகுல் காத்திரமாக உரையாற்றி, சரமாரியான கேள்விகளைத் தொடுத்தார்.
இந்நிலையில், ராகுல் பேச்சின் சில பகுதிகளையும் அவர் பயன்படுத்திய பல்வேறு வார்த்தைகளையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கியிருக்கிறார் ஓம்பிர்லா.
கடந்த ஆட்சியில் அவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என, ஓம்பிர்லா வெளியிட்ட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் சில…
வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு, கொரோனா பரப்புபவர், வாய் ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜக வாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலைக் கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட்.
‘தற்போது, ராகுல் பேச்சில் ஒலித்த… ‘அதானி, அம்பானி, நீட் தேர்வு, அக்னிபாத், அக்னிவீர், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து சமுகம், சிறுபான்மையினர், பண மதிப்பிழப்பு, மணிப்பூர் கலவரம், ஹிந்து, வேளாண் சட்டங்கள், உடலை வளைத்து வணங்குதல்’ ஆகிய வார்த்தைகளை நீக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த வார்த்தைகள் விரைவில் ‘வார்த்தைத் தடை’ புத்தகத்தில் இடம்பெறக் கூடும்’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
‘கடந்த ஆட்சியில் மக்களவைக்குள் பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி மிக மோசமான வார்த்தைகளால் சமாஜ்வாடி எம்.பி. டேனிஷ் அலியைத் திட்டினார். அதைவிடவா ராகுல் காந்தி மோசமாகவா பேசிவிட்டார்? தடை செய்யப்பட்ட வார்த்தைகளுக்காகப் புத்தகம் போட்டவர்களின் ஆட்சியில்தான், தடை செய்யப்பட்ட பொருட்களை அவைக்குள்ளே கொண்டு வந்து, புகை மூட்டம் போட்டனர்’ என, அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.