இந்திய வரலாற்றில் இடஒதுக்கீடு: நீதிக்கட்சியின் கம்யூனல் ஜி.ஓ. ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும், நீதிக்கட்சியின் கம்யூனல் ஜி.ஓ. எனப்படும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையின் வரலாறு தெரியுமா? அதன் முக்கியத்துவம் என்ன?
மெட்ராஸ் மாகாணம் தென்னிந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவின் மலபார் பகுதி, லட்சத்தீவுகள், கர்நாடகாவின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இந்த பகுதிகளில் கல்வி சாலைகளும் அரசு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின. ஆனால், கல்வி பயிலவும் அரசுப் பணியில் சேரவும் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிராமணர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் இருந்தன.
இந்நிலையில், டாக்டர் சி.நடேசன், டி.எம்.நாயர், தியாகராய செட்டி ஆகியோரால், 1916ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி, நீதிக் கட்சி (Justice Party) என்று அறியப்பட்ட ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (South Indian Liberal Federation) உருவாக்கப்பட்டது. அந்த சங்கம் ‘பிராமணர் அல்லாதோர் கொள்கை அறிக்கை’யை வெளியிட்டது.
அறிக்கையில், கல்வியிலும் அரசு வேலைகளிலும் பிராமணர் அல்லாதோரின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், பெரும்பாலான வேலைவாய்ப்புகள் பிராமணர்களுக்கே செல்வதாகக் குற்றம்சாட்டியது. அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என, வலியுறுத்தியது.
இந்நிலையில் 1919ல் பிரித்தானிய இந்தியாவில் மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் (Montagu–Chelmsford Reforms) அமலுக்கு வந்தன. இந்தியாவிற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. மாகாணச் சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
1920ம் ஆண்டு நவம்பர் மாதம் மெட்ராஸ் மாகாணத்தில் முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில், நீதிக்கட்சி வெற்றி பெற்று, 1920 டிசம்பர் 17ம் தேதி ஏ.சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அரசமைத்தது. ஏ.சுப்பராயலு ரெட்டியார் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சரானார்.
நீதிக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், ‘அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்புகள்’ என்பதை வலியுறுத்தியிருந்தது. அதைச் சட்டமாக்கும் முயற்சியில் நீதிக்கட்சியினர் ஈடுபட்டிருந்த வேளையில், 1921ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி முதலமைச்சர் சுப்பராயலு ரெட்டியார் உயிரிழந்தார். உடனடியாக, பனகல் அரசர் ராமராயநிங்கர் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவையில், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்தும், பிராமணர் அல்லாதவர் யார்? என்பது குறித்தும் பெரும் விவாதங்கள் நடைபெற்றன. ‘பிராமணர் (பார்ப்பனர்) அல்லாதார் என்றால்… முகமதியர் (முஸ்லிம்கள்), ஜைனர்கள், பார்சிகள், இந்திய கிறிஸ்தவர்கள், பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகிய மற்றுமுள்ளோர் என்று பொருள்’ என, டாக்டர் சி.நடேசன் விளக்கமளித்து தீர்மானம் நிறைவேற்றினார்.
பார்ப்பனர் அல்லாதார் என்பதில் பிராமணர் அல்லாத இந்துக்கள் மட்டுமின்றி மற்ற மதத்தவர்களும் அடங்குவர் என்பதையும் இந்தத் தீர்மானம் உறுதிப்படுத்தியது.
1921ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, மெட்ராஸ் மாகாணச் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் ஓ.தணிகாசலம் செட்டியார், ‘‘அரசு அலுவலகத்தில் ரூ.100 அளவுக்கு ஊதியம் வாங்கும் அனைத்து அதிகாரிகள் மட்டத்திலும் 66 சதவீதம் அளவுக்கு பிராமணர் அல்லாதார் இடம்பெறும்வரை, கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பிராமணர் அல்லாத வகுப்பினருக்கு முன்னுரிமை தர வேண்டும். பிராமணர்களைவிட மற்றவர்கள் சற்றுத் தகுதிக்குறைவானவர்களாக இருந்தாலும் இதைச் செய்ய வேண்டும். 100 ரூபாய்க்கு கீழே ஊதியம் பெறுபவர்களில், 77 சதவீதம் பிராமணர் அல்லாதவர்களாக இருக்கும் நிலை ஏற்பட வேண்டும். 7 ஆண்டுகளில் இதை எட்ட வேண்டும். தலைமைச் செயலகத்தில் ஐ.சி.எஸ்., பிரிவு அதிகாரிகளைத் தவிர, பிற பிரிவுகளுக்குப் பிராமணர் அல்லாதவர்களையே நியமிக்க வேண்டும்,’’ எனத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானங்களை வழிமொழிந்த நடேச முதலியார், ‘‘பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் வரி இல்லை,’’ என்று முழங்கமிட்டார். அவையிலிருந்த பி.சிவாராவ், எல்.ஏ.கோவிந்தராகவ அய்யர் போன்ற பிராமண உறுப்பினர்கள் இந்தத் தீர்மானங்களைக் கடுமையாக எதிர்த்ததோடு, ‘உலகம் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்’ என விமர்சித்தனர்.
தீர்மானங்களை ஆதரித்த ஆர்.கே.சண்முகம் செட்டியார், ‘‘இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டிற்கே விடுதலை அளித்த மனிதர்களாக எதிர்கால சந்ததி நம்மைக் கருதும்,’’ என்றார். இப்படி பிராமணர் அல்லாதாரின் பேராதரவோடு தீர்மானங்கள் நிறைவேறின.
இதையடுத்து 1921ம் ஆண்டு செப்., 16ம் தேதி மெட்ராஸ் மாகாண முதலமைச்சரான பனகல் அரசர் ராமராயநிங்கர், ‘வகுப்புவாரி அரசாணை’யை (Communal G.O.) வெளியிட்டார்.
1921 அரசாணையில்…
அரசு அலுவலகங்களில் பிராமணர் அல்லாதவர்கள் பெற்றுள்ள பணி இடங்களை அதிகரிக்க, பல்வேறு சாதி, சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக வருவாய்த் துறையில் நிலை ஆணை 128(2) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை அரசின் அனைத்து துறைகளுக்கு மட்டுமின்றி அனைத்து மட்டத்திற்கும் செயல்படுத்த வேண்டும்.
வரும் காலத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, அனைத்துத் துறைகளின் தலைவர்களும், பணி நியமனம் செய்யும் தகுதியுள்ள அதிகாரிகளும் இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அரசுத் துறைகளின் தலைவர்கள், ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள் ஒவ்வொரு அரையாண்டிற்கும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கையில், கடந்த அரையாண்டில் தங்களுக்குக் கீழுள்ள அலுவலகங்களிலும் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பதை குறிப்பிட வேண்டும். அதைப் பின்வருமாறு பிரித்துக் காட்ட வேண்டும்
1. பிராமணர்கள்
2. பிராமணர் அல்லாத இந்துக்கள்
3. இந்திய கிறிஸ்தவர்கள்
4. முகமதியர்கள்
5. ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள்
6. மற்றவர்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15, ஜூன் 15ம் தேதிக்குள் அறிக்கையை அனுப்ப வேண்டும். முதல் அறிக்கையை 1921 டிசம்பர் 31க்குள் அளிக்க வேண்டும்.
-ஆளுநரின் ஆணைப்படி, என்.இ.மேஜர்ஐபாங்ஸ், தலைமைச் செயலர்.
மேலும் அரசாணையில், அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்புகளை அளிக்கும்போது, 12 இடங்களாக தொகுத்து அளிக்க வேண்டும். அதன்படி, பிராமணர் – 2 இடங்கள், பிராமணர் அல்லாதவர்கள் – 5 இடங்கள், இஸ்லாமியர் – 2 இடங்கள், கிறிஸ்தவர், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ – இந்தியர்களுக்கு – 2 இடங்கள், ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு இடமும் வழங்க வேண்டும். அதை, பின்வரும் வரிசையில் நிரப்பவும் உத்தரவிடப்பட்டது.
1. பிராமணர் அல்லாத இந்து
2. இஸ்லாமியர்
3. பிராமணர் அல்லாத இந்து
4. ஆங்கிலோ – இந்தியர் அல்லது இந்திய கிறிஸ்தவர்
5. பிராமணர்
6. பிராமணர் அல்லாத இந்து
7. ஓடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்
8. பிராமணர் அல்லாத இந்து
9. இஸ்லாமியர்
10. பிராமணர் அல்லாத இந்து
11. ஆங்கிலோ – இந்தியர் அல்லது இந்திய கிறிஸ்தவர்
12. பிராமணர்.
சதவீதப்படி…
பிராமணர் அல்லாதவர்கள் – 44%
பிராமணர்கள் – 16%
முகமதியர்கள் – 16%
ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் – 16%
பட்டியல் இனத்தவர்கள் – 8%
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த ஆணை முறையாகச் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுவையும் நீதிக்கட்சி அமைத்தது.
பிரித்தானிய இந்தியாவில் ‘அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்புகள்’ என்ற கருத்தை வலியுறுத்தி அரசாணை வெளியிட்டு நிறைவேற்றிய முதல் மாகாணமாக மெட்ராஸ் மாகாணம் திகழ்ந்தது.
கல்வி – இட ஒதுக்கீடு
1922 ஆகஸ்ட் 15ம் தேதி கல்வி நிலையங்களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அளிக்கும் அரசாணையை நீதிக்கட்சி வெளியிடப்பட்டது. ஆனால் இது உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை. 1928 டிசம்பர் 15ம் தேதி வெளியிடப்பட்ட 3வது கம்யூனல் ஜி.ஓ. மூலம்தான் கல்வியில் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது.
நீதிக்கட்சி கொண்டு மூன்று கம்யூனல் ஜி.ஓ.க்களும் பிராமணர் அல்லாதவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குவதாக இருக்கவில்லை. பிராமணர்களுக்கும் 16 சதவீத இடஒதுக்கீடு அவை வழங்கின.
1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியா சுதந்திரம் பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த போதும் , நீதிக்கட்சி கொண்டுவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால், வகுப்புவாரி இடஒதுக்கீட்டினை பிராமணர்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வந்தனர். குறிப்பாக, ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 15, 16க்கு விரோதமானது’ என, ‘சேலம் பிராமண சேவா சங்கம்’ குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியது.
இந்நிலையில், 1950-51ம் கல்வியாண்டிற்கான மருத்துவ, பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அவற்றில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தங்களுக்கு இடம் மறுக்கப் பட்டதாகக் கூறி இரு பிராமண மாணாவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் 1950ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி மனுகளை தாக்கல் செய்தனர்.
சம்பகம் துரைராஜன் என்னும் மாணவி சென்னை மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை என்றும், சி.ஆர்.சீனிவாசன் என்ற மாணவர், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்க வில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
‘பிராமணர் என்ற காரணத்தால் தனக்கு இடம் தர மறுப்பது அரசியலமைப்பு சட்டத்தின் 226 பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்ட அடிப்படை உரிமையை மறுப்பதாகும்’ என, சம்பகம் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். விசாரணையில் அவர், கல்லூரிக்கு விண்ணப்பம் செய்யவில்லை என்பது தெரிய வந்தது.
சீனிவாசன் கிண்டி கல்லூரிக்கு விண்ணப்பத்து இருந்தாலும், ‘பிராமணருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 14.29 % இடங்கள் ஏற்கனவே பூர்த்தியானதால் தனக்கு இடம் தரப்படவில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இரு மனுக்களையும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், ஜூலை 27ம் தேதி மனுதாரர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
சென்னை மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி ஹீராலால் கானியா தலைமையில் ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்சு இவ்வழக்கை விசாரித்தது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று அறிவித்த நீதிபதிகள், சென்னை மாநிலத்தின் இட ஒதுக்கீடு அரசாணை அரசியலமைப்பு சட்டத்தின் 29(2)வது பிரிவுக்குப் புறம்பாக உள்ளதாகத் தீர்ப்பளித்தது. அதன் பிறகு, இடஒதுக்கீடு அளிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.