சாதி அரசியலில் சசிகலா Vs பழனிசாமி: சிறுதாவூர் ரகசிய சந்திப்பு; அ.தி.மு.க.வில் பரபரப்பு
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின், பழனிசாமிக்கு எதிராகக் கட்சியில் முணுமுணுப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சசிகலா சாதி அஸ்திரத்தைக் கையில் எடுத்திருப்பதும்; அவரைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ரகசியமாகச் சந்தித்து வருவதும் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் செல்லும் முன், பழனிசாமியை முதல்வராக நியமித்தார். பழனிசாமிக்கு ஆதரவு அளிக்குமாறு அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் மட்டுமின்றி தொண்டர்களிடமும் கோரிக்கை விடுத்தார். சசிகலா சிறைக்குச் சென்ற சில நாட்களில், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து கட்சியிலும் ஆட்சியிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்தன.
முதலில், சசிகலாவின் உறவினர் தினகரன் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார்; சசிகலாவுக்கு எதிராகத் தர்மயுத்தம் துவங்கிய பன்னீர் செல்வம், பழனிசாமியுடன் கரம் கோர்த்துத் துணை முதல்வர் ஆனார். ஆனால், ஆட்சியைத் தக்க வைக்கும் பெரும்பான்மைக்குப் பலவிதமான சிக்கல்கள் எழுந்தன. இருந்தும், மத்தியில் ஆட்சியில் தனிப் பெரும்பாண்மையில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வின் முழு ஆதரவு பழனிசாமிக்குக் கிடைத்தது. இதனால் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி நாலரை ஆண்டுகள் நீடித்தது.
தினகரன் தனியாகக் கட்சியைத் துவக்கினார். ஆனால் ஆட்சியும் அதிகாரமும் கையில் இருந்ததால், பழனிசாமியின் பக்கம் அனைவரும் ஒன்றாக நின்றனர். சசிகலா தண்டனைக் காலம் முடிந்து 2021 பிப்., 9ல் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவர் கட்சியைக் கைப்பற்றுவார் என, அவரது தரப்பு மட்டுமின்றி பழனிசாமியுடன் கைகோர்த்தவர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், சசிகலாவுக்கு கட்சியிலுள்ள முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு கிடைக்கவில்லை; அரசியலில் இருந்தே ஒதுங்குவதாகத் தெரிவித்து, அமைதி காத்தார் சசிகலா.
ஆட்சிக்காலம் முடிந்து, 2021ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தபோதும், கட்சி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்தது. தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியைச் சந்தித்தாலும், கவுரவமான வெற்றியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ஆட்சியில் இருந்த வரை அடங்கியிருந்த பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி ஆனதும் பழனிசாமியின் ஒற்றைத் தலைமையை எதிர்க்கத் தொடங்கினார்.
பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்திற்குப் பிறகு பழனிசாமியோடு கைகோர்த்துத் துணை முதல்வராகப் பதவி பெற்ற போதும், பெயரளவில்தான் துணை முதல்வராக இருந்தார். ஆட்சியில் எவ்வித அதிகாரமும் அவருக்குப் பகிர்ந்தளிக்கப்படவில்லை. முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டார் பன்னீர் செல்வம். குறிப்பாக, அவருடைய சிபாரிசுடன் அனுப்பப்படும் ஃபைல்கள் கிடப்பில் போடப்பட்டன.
பரிந்துரைகள் உடனடியாக நிராகரிக்கப்பட்டால், வேறு வழிகளில் முயற்சித்து காரியம் சாதிப்பர். ஆனால், பன்னீர் செல்வம் மூலம் பெறப்பட்ட ஃபைல்கள் பல மாதங்கள் கிடப்பில் போடப்பட்டன. ஆட்சியில் எந்த அதிகாரமும் இன்றி பன்னீர் செல்வம் ஓரங்கட்டுப்பட்டு இருக்கிறார் என்பதை அவரின் ஆதரவாளர்களுக்கு நேரடியாகவே உணர்த்தவே இந்த அணுகுமுறை கையாளப்பட்டது. அ.தி.மு.க.வில் ஜெயலலிதா காலம் முதல் பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த காலம் வரை செல்வாக்குடன் இருந்த முக்குலத்தோர் கடும் சிக்கல்களைச் சந்தித்தனர்; ஆனால், கொங்கு அரசியல் கோலோச்சியது. இதனால் கடும் அதிருப்தியாளர்கள் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக ஓர் அணியில் திரண்டனர். இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே வெளிப்படையான மோதல்களையும் நாம் பார்க்க நேர்ந்தது.
கடந்த 2022 ஜூலை 11ல், கட்சியின் பொதுக்குழுவால் அ.தி.மு.க. பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார் பழனிசாமி. அதன்பின் பன்னீர் செல்வத்தின் அணி, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது. அதன்பின் கட்சிக்காகவும் சின்னத்திற்காகவும் இரு அணிகளும் நீதிமன்றத்தை நாடின. சட்டரீதியாகவும், தேர்தல் கமிஷன் மூலமாகவும் பழனிசாமிக்கு எதிராகப் பன்னீர் செல்வம் தொடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இப்போது வரையிலும் கட்சியின் ஒற்றைத் தலைமையாக, பொதுச் செயலாளராக பழனிசாமி நீடித்து வருகிறார்.
ஆனால் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் துவங்கி, 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் வரை, பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது. இதனால், கட்சியில் பழனிசாமிக்கு எதிராகச் சலசலப்புகள் அதிகரித்தன. நான்கு துண்டுகளாகக் கட்சி உடைந்து இருப்பதே தோல்விக்குக் காரணம்; ஒன்றிணைய வேண்டுமென்ற கோஷங்களும் வலுக்கத் துவங்கியுள்ளன.
இதற்குப் பழனிசாமி தரப்பு மறுத்து வரும் நிலையில், ‘‘அ.தி.மு.க.வில் சாதி அரசியல் செய்கிறார் பழனிசாமி; நான் சாதி பார்த்திருந்தால், அவரை முதல்வராக்கி இருக்க மாட்டேன்,’’ என்று சசிகலா கூறியிருக்கும் கருத்து, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில், பொது மக்களிடமும் இது பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
ஏற்கனவே, பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கொங்கு மண்டலப் பகுதிகளுக்கே அதிகத் திட்டங்கள் தரப்பட்டன; கட்சியும், ஆட்சி அதிகாரமும் அவருடைய சமுதாயத்தினரின் கையில் இருந்தது என்று அதிருப்தி எழுந்திருந்தது. அதற்கேற்ப, சட்டமன்றத் தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் தான் கட்சி அதிக இடங்களில் வென்றது. இப்போது அங்கேயும் கட்சி, படுதோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில்தான், சசிகலாவின் கருத்து கவனம் பெற்றுள்ளது. அவரால் கட்சி மீண்டும் ஒருங்கிணையுமா, பழனிசாமி ஒத்துவராவிட்டால், மற்றவர்கள் இணைந்து கட்சியைக் கைப்பற்ற முடியுமா என்ற விவாதம் எழுந்துள்ளது. இதற்கேற்ப, சிறுதாவூர் பங்களாவில் சசிகலாவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் பலரும் ரகசியமாக சந்தித்துப் பேசி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்புகளின் பின்னணியை மட்டுமின்றி அதனால் விளையும் பலன்கள் என்னவென்பது அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.
கொடநாடு: சசிகலா சொல்வதென்ன?
கொடநாடு பங்களாவைப் பற்றி ஜெயலலிதாவை விட அதிகம் தெரிந்தவர் சசிகலாதான். அங்கு நடந்த கொலை, கொள்ளை பற்றி கடந்த வாரம் கொடுத்த பேட்டி பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. ‘அந்த ஒரே வழக்கை வைத்துக் கொண்டு, பழனிசாமியைத் தி.மு.க. அரசு மிரட்டுகிறது’ என்ற தொனியில், ‘வழக்கை முடிக்க வக்கில்லையா… அது முடியும்போதுதான் உண்மை உலகிற்குத் தெரியும்’ என்று சசிகலா சொல்லியிருப்பது, கட்சியிலும், பொது வெளியிலும் பழனிசாமிக்கு எதிராகப் பல வித கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.
நான்காகச் சிதறுண்டிருக்கும் அ.தி.மு.க.வை இணைக்கும் முயற்றிக்குத் தடையாக பழனிசாமி செயல்பட்டால், கொடநாடு ரகசியங்கள் கசியலாம். அது, பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். அதற்கான மிரட்டல் தொனியாகவே சசிகலாவின் பேச்சு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கத்துரைக்கின்றனர்.
அதிமுகவின் தற்போதைய நிலையை தத்ரூபமாக கண் முன்னே நிறுத்திறனயது போல உள்ளது
மிகச் சிறந்த கள ஆய்வு
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சாதிய ரீதியாக உடைந்துள்ளது என்ற கருத்து தான் மக்களின் மனதில் பரவலாக உள்ளது.அதை மாற்ற வேண்டும் என்றால் கட்சி அனைத்து மட்டத்திலும் ஒன்றினைய வேண்டும் கட்சிக்குள்ளும் கூட்டணியிலும் பெரியவர் சின்னவர் என்று பாரபட்சமும் இல்லாமல் கூட்டணியுடன் அனுசரித்து விட்டு கொடுத்து போனால் மட்டும் தான் 2026 ல் கட்டியை தக்க வைத்துக் கொள்ள முடியும்