Sunday, December 22, 2024
Opinions

மோடியை எதிர்க்க முடியாது! வாரணாசியில் பா.ஜ.க., கட்டமைக்க முயல்வதென்ன?

2014ம் ஆண்டு வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிட்ட போது, அவருக்கு எதிராக 41 வேட்பாளர்கள் களமிறங்கினர். மோடி பிரதமரான பின்னர் 2019-ம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் களமிறங்கினார். அப்போது எதிர்த்துப் போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆகக் குறைந்தது. தற்போது மூன்றாவது முறையாக அதே தொகுதியில் களமிறங்குகிறார் மோடி. ஆனால், அவருக்கு எதிராகப் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆகச் சரிந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராகப் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பிரதமருக்கு எதிராகக் களம் காண்போம் என்று அறிவித்தவர்கள், வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாத படி தடுத்து நிறுத்தப்பட்டனர். ‘மோடியை யாராலும் எதிர்க்க முடியாது; அவரை எதிர்க்க ஆட்களே இல்லை’ என்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கிறதா பா.ஜ.க., வேட்புமனுக்கள் நிராகரிப்புத் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறதா? இதன் பின்னணி என்ன?

இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளுக்குக் கடைசிக் கட்டமாக ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் மே 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது.

4.8 லட்சம் வித்தியாசம்!
கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு  4.8 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அதற்கு முன்பு நடந்த தேர்தலில் வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றார். அதில், வாரணாசியில் 3.72 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார். இரு முறை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றதால் தற்போது மூன்றாவது முறையாக வாரணாசியில் களமிறங்குகிறார். வேட்புமனுத் தாக்கலின் இறுதி நாளான மே 14ம் தேதி, பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பிற மாநில முதல்வர்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த மோடி

வாரணாசி தொகுதியில் மொத்தமாக 55 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றைச் சரிபார்க்கும் பணி மே 15ம் தேதி நடந்தது. அதில், 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதில் குறிப்பாக ஷ்யாம் ரங்கீலாவின் மனு நிராகரிக்கப்பட்டது பேசுபொருளானது.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஷ்யாம் ரங்கீலா பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போன்ற அரசியல்வாதிகளை மிமிக்ரி செய்து பிரபலமானவர். இவர் 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். பின்னர் பா.ஜ.க.வுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக விமர்சனங்கள் செய்து வந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

‘தேர்தல் பிராமணப் பத்திரத்தில் குறைகள் இருந்ததாலும், வேட்புமனுத் தாக்கலின்போது பின்பற்றப்படும் நடைமுறை சம்பிரதாயங்களைப் பின்பற்றவில்லை’ என்றும் கூறி, அவரது வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

நிராகரிக்கப்பட்ட மனுக்கள்

ஷ்யாம் ரங்கீலா, “வேட்புமனுத் தாக்கல் செய்ய என் வழக்கறிஞரை என்னுடன் அனுமதிக்கத் தேர்தல் அதிகாரி மறுத்தார். என்னைத் தனிமைப்படுத்தி வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்தனர். என் நண்பரைத் தாக்கினர். பிரதமர் மோடி நடிக்கலாம், அழுகலாம். நான் இங்கு அழப்போவதில்லை. தேர்தல் ஆணையத்தைப் பார்த்துச் சிரிப்பதா, அழுவதா? என்று தான் தெரியவில்லை,” எனக் கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் தலைவர் சுரேந்திர ராஜ்புத், ‘‘ஷ்யாம் ரங்கீலாவுக்குத் தேவையான நியமனப் பத்திரங்களை வழங்கவில்லை. பிரதமர் மோடிக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சுதந்திரம் உள்ளது. ஆனால், மற்ற தொகுதியில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய யாரையும் அனுமதிக்கவில்லை,” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். 

தமிழக விவசாயிகளுக்குத் தடை
‘கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில், பிரதமர் மோடி விவசாயிகளுக்கு எந்த நலத் திட்டங்களையும் தரவில்லை’ எனக் கூறி, மோடிக்கு எதிராகப் போட்டியிடவுள்ளதாகத் தமிழகத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு உட்பட 111 விவசாயிகள் அறிவித்தனர். தமிழக விவசாயிகள், வாரணாசியில் மே 13ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யத் தீர்மானித்தனர். மே 10ம் தேதி செல்லும் கன்னியாகுமரி – பனாரஸ் ரயிலில், 120 பேருக்குத் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்தனர். முன்பதிவில் 39 பேருக்கு மட்டுமே எஸ்-1 கோச்சில் இருக்கை உறுதியானது. மற்ற விவசாயிகளுக்கு முன்பதிவு டிக்கெட் கிடைக்கவில்லை. அவர்கள் முன்பதிவில்லா பெட்டியில் பயணிக்க முடிவு செய்தனர்.

மே 10ம் தேதி காலை திருச்சி ரயில் நிலையத்தில் விவசாயிகள் காத்திருந்தனர். ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்தது. அதில், விவசாயிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிந்த எஸ்-1 பெட்டி இணைக்கப்படாமல் இருந்தது. ரயில்வே அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டதற்கு, ‘தொழில்நுட்பக் கோளாறால் எஸ்–1 பெட்டி சேர்க்கப்படவில்லை. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அந்த பெட்டியை இணைத்து இருக்கை வழங்குவோம்’ என உறுதியளித்தாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால், தஞ்சாவூர், விழுப்புரம் என அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் இருக்கையை உறுதி செய்வதாகக் கூறிய ரயில்வே அதிகாரிகள் அதைச் செய்யவில்லை. ஆத்திரமடைந்த விவசாயிகள், திருச்சி முதல் அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், 120 விவசாயிகளையும் ரயில்வே போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் மோடிக்கு எதிராகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாதநிலை தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டது.

‘ரிட்’ மனு தள்ளுபடி

‘வாரணாசி தொகுதியின் வேட்புமனுத் தாக்கல் செய்யும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு ‘ரிட்’ மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘வாரணாசியில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள்? தமிழ்நாட்டில் ஏன் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? அங்கு யார் உங்களுக்கு வாக்களிப்பார்கள்? சமூக சேவகர் என்றால் தமிழ்நாட்டில் போட்டியிடுங்கள். விளம்பரத்துக்காக இதுபோன்று மனுத் தாக்கல் செய்யாதீர்கள்’ என, அய்யாக்கண்ணு தரப்பிற்கு அறிவுறுத்தியது.
அய்யாக்கண்ணு தரப்பு வழக்கறிஞர், ‘‘விளம்பர நோக்கில் வழக்குத் தொடரவில்லை. விவசாயிகளுக்காகப் போராடுகிறோம். இணையதளம் வாயிலாக வேட்புமனுத் தாக்கல் செய்ய வசதி செய்யப்படவில்லை,’’ என்று வாதிட்டார். இருந்தும் அய்யாக்கண்ணுவின் ‘ரிட்’ மனுத் தள்ளுபடி செய்ப்பட்டது.

வேற்று மாநிலத்தவர்களுக்கு ரெட் கார்டு

அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் தலைவரும் காந்தியவாதியுமான ரமேஷ் வாராணாசியில் மனுத் தாக்கல் செய்ய கடந்த மே 7ம் தேதி சென்றார். ‘மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்க மாட்டோம்’ என, தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சொந்த மாநிலத்தில் மட்டும்தான் போட்டியிட வேண்டுமா?. அப்படி ஏதேனும் தேர்தல் விதிகளில் சொல்லப்பட்டுள்ளதா?  பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள் எல்லோரும் அவர்களின் சொந்த தொகுதியில்தான் போட்டியிடுகிறார்களா? அரசியல் தலைவர்களுக்கு ஒரு நியாயம், சாதாரண மக்களுக்கு ஒரு நியாயமா? என்பது நிராகரிக்கப்பட்டவர்களின் குமுறலாகவுள்ளது. 

களத்தில் 7 பேர் மட்டுமே!

இறுதியாக வாரணாசியில் பெறப்பட்ட மனுக்களின் மொத்த எண்ணிக்கை 55. அதில் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 பேரின் 16 மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதில் ராஷ்டிரிய சமாஜ்வாடி ஜங்ராந்தி வேட்பாளர்  பரஸ் நாத் கேசரி வாபஸ் பெற்ற நிலையில் 7 பேர் போட்டியிடுகின்றனர். குறிப்பாக, காங்., உ.பி., மாநில தலைவர் அஜய், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் அதர் ஜமால் லாரி, பா.ஜ.க., சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, யுக துளசி கட்சியின் கோலிசெட்டி சிவ குமார், அப்னா தளத்தின் ககன் பிரகாஷ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சஞ்சய் குமார் திவாரி, தினேஷ் குமார் யாதவ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

படை பலத்துடன் மனுதாக்கல்

மோடி வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது பா.ஜ.க.வினர், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் என, ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக இருந்தது. குறிப்பாக, 25 கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மோடியை ஆதரித்து வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எனவே, மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றியைப் பிரதமர் மோடி பதிவு செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது பா.ஜ.க., ஆனால், முகமறியாதவர்களைக் கூட வாரணாசியில் போட்டியிட அனுமதிக்கவில்லை. இது உண்மையில் பா.ஜ.க.வின் அழுத்தத்தால் தான் நடந்தது என, பல தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

ஆண்டுவேட்பாளர் எண்ணிக்கை
201442
201926
20247

வாரணாசி தொகுதியில் போட்டியிடும்
வேட்பாளர்கள் எண்ணிக்கை.

குறையும் போட்டியாளர்களின் எண்ணிக்கை

2014-ம் ஆண்டு வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிட்ட போது, அவருக்கு எதிராக 41 வேட்பாளர்கள் களமிறங்கினர். மோடி பிரதமரான பின்னர் 2019-ம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் களமிறங்கினார். அப்போது எதிர்த்துப் போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆகக் குறைந்தது. தற்போது மூன்றாவது முறையாக அதே தொகுதியில் களமிறங்குகிறார் மோடி. ஆனால், அவருக்கு எதிராகப் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆகச் சரிந்துள்ளது. ‘மோடியை எதிர்க்க யாருக்கும் வலு இல்லை என்பதைக் காட்டவே, பலரின் வேட்பு மனுக்கள் பல்வேறு கரணங்கள் கூறி நிராகரிக்கப்பட்டதா… பலருக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவே வாய்ப்பு மறுக்கப்பட்டதா’ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ‘பா.ஜ.க., பயத்தின் உச்சத்தில் இருப்பதால், கடந்த 11 ஆண்டுகளாகக் கட்டமைத்த மோடி எனும் பிம்பம், தேர்தல் தோல்வியால் உடைபடாமல் இருக்கு இம்மாதிரியான அரசியல் நாகரீகமற்ற வேலைகளைச் செய்து வருகிறது’ என்ற கருத்துக்களை அரசியல் விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

பா.ஜ.க., மாடல் என்ன?

நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் சூரத்தில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிரதான எதிர்க்கட்சியினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எதிரிகளே இன்றி பா.ஜ.க., வேட்பாளர் வெற்றி பெறுவது அக்கட்சியின் பலத்தை மேலும் அதிகரித்து காட்டும் என, பா.ஜ.க., தலைவர்கள் நம்புகின்றனர். 

நடந்து முடிந்த 4 கட்டத் தேர்தலில் பல இடங்களில் பா.ஜ.க.வுக்குப் பின்னடைவு ஏற்படும் எனக் கணிக்கப்படுகிறது. அதனால் மோடியை எதிர்த்துப் போட்டியிட யாருமில்லை என்பது போன்ற பிம்பம் மீதமுள்ள தொகுதிகளில் தங்களுக்கு வாக்குகளை அதிகரிக்கச் செய்யும் என, பா.ஜ.க., தீவிரமாக நம்புகிறது. ஆனால், அரசியலில் வெற்றி என்பது யாருக்கும் நிரந்தரமில்லை என்பதையே வரலாறு உணர்த்தியிருக்கிறது. பா.ஜ.க.,வின் வியூகம் பலன் தருமா என்பதை ஜூன் 4ம் தேதி தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *