Monday, December 23, 2024
OpinionsPolitics

வரலாற்றில் முதல் முறை; சபாநாயகர் பதவிக்குத் தேர்தல்! எதிர்க்கட்சிகள் உணர்த்தும் செய்தி என்ன?

பா.ஜ.க.வின் பிரதான கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும் தெலுங்கு தேசம் கட்சியும் துணை சபாநாயகர் பதவியைக் கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றன. அவர்களின் ஆதரவு இல்லை என்றால் ஆட்சி நிலைக்காது. ஆகவே…

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்தான் சபாநாயகராக நியமிக்கப்படுவார். அவர் பெரும்பாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவராகத் தான் இருப்பார். ஆனால், இம்முறை இந்திய வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சி சார்பாக சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட மனுதாக்கல் செய்திருக்கிறது. அதன் பின்னணி என்ன?

18-வது மக்களவையின் சபாநாயகராகக் கடந்த முறை சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டு அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சி சார்பாக ஓம் பிர்லாவை சபாநாயகராக நியமிப்பதற்கு எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சியினருக்கு வழங்க பா.ஜ.க. முன்வராததால் எதிர்க்கட்சியினர் அவர்கள் சார்பாக கொடிக்குன்னில் சுரேஷை சபாநாயகர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

கொடிக்குன்னில் சுரேஷ்

துணை சபாநாயகர் பதவி நிராகரிப்பு!
மக்களவையில் அதிகமுறை எம்.பி.யாக இருப்பவருக்குத் தான் இடைகால சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும். அந்தவகையில், 8 முறை எம்.பி.யாக இருந்த கேரளாவின் கொடிகுன்னில் சுரேஷை இடைக்கால சபாநாயகராக நியமித்திருக்க வேண்டும். ஆனால், 7 முறை எம்.பி.யாக இருந்த பர்த்ருஹரி மஹதாப்பை இடைக்கால சபாநாயகராக அறிவித்தது மோடி தலைமையிலான அர்சு. இதற்கு இண்டியா கூட்டணி கண்டனம் தெரிவித்தது. பர்த்ருஹரி மஹதாப்பின் பதவியேற்பை நிராகரிக்கவும் செய்தது.

இந்த நிலையில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை இண்டியா கூட்டணி முன்வைத்தது. ஆனால், பா.ஜ.க. தரப்பில் அதற்குப் பாசிட்டிவ்வான எந்தப் பதிலும் இல்லை. பா.ஜ.க.வின் மவுனத்திற்குப் பின், அதன் கூட்டணிக் கட்சிகளின் தேவை ஒளிந்திருக்கிறது என்பதே பதிலாக உள்ளது.

ஏன் எதிர்க்கட்சியினருக்கு துணை சபாநாயகர் பதவி இல்லை?
இந்திய அரசியல் வரலாற்றில் துணை சபாநாயகர் பதவி உருவாக்கப்பட்டதிலிருந்து கடந்த 17-வது மக்களவையில்தான் துணை சபாநாயகர் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. எதிர்க்கட்சியிலிருந்து ஒருவரை துணை சபாநாயகராக நியமிக்கப்படுவதில் பா.ஜ.க.வுக்கு விருப்பமில்லை. அதனால், துணை சபாநாயகர் நியமிக்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர். ஆனால் அதையெல்லாம் பா.ஜ.க. பொருட்படுத்தவில்லை.

ஓம் பிர்லா

ஆனால், இந்தமுறை கதையே வேறு. கடந்தமுறை பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றிருந்தது. அதனால், பா.ஜ.க. துணை சபாநாயகர் பதவியை யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்ற தொனியில் செயல்பட்டது. ஆனால், இம்முறை 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க 32 தொகுதிகளுக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் பிரதானக் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும் தெலுங்கு தேசம் கட்சியும் துணை சபாநாயகர் பதவியைக் கோரி வருகின்றன. அவர்களின் ஆதரவு இல்லை என்றால் ஆட்சி நிலைக்காது. எனவே கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் எதிர்க்கட்சியினருக்குத் துணை சபாநாயகர் பதவகயைப் பா.ஜ.க. ஒதுக்க முடியவில்லை.
இதனால் துணை சபாநாயகர் பதவி குறித்து பாஜக மவுனம் காத்து வருகிறது. இதை உணர்ந்த இண்டியா கூட்டணி கேரளாவைச் சேர்ந்த எம்.பி. கொடிக்குண்ணில் சுரேஷை சபாநாயகர் பதவிக்கு வேட்பாளராக அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பதவிக்குத் தேர்தல் நடப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. கடந்தமுறை தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க.வால் இம்முறை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் நிலையான ஆட்சியைத் தர முடியுமா என்னும் கேள்வி எழுந்திருக்கிறது. அதை மக்கள் உணரவும், பா.ஜ.க.வின் ஏகோபித்த அதிகார தொனியை ஒடுக்கவும் எதிர் அணி தங்கள் வலுவைக் காட்டவும் சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடத்தும் சூழலை உருவாக்கியுள்ளது இண்டியா கூட்டணி. மக்களவையில் ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை உரக்கச் சொல்லும் நகர்வுதான் இது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *