அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படும் அண்ணாமலை!தமிழகத்தில் பா.ஜ.க. வாக்கு சரிவு… 2014-24 தேர்தல் முடிவுகள் கூறும் உண்மை நிலவரம்!
தோல்வியைத் தழுவியவராக இருந்தாலும் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டால் அவர்களுக்கு உயர் பதவிகளைத் தான் தேசிய பா.ஜ.க. வழங்கும். அதற்குப் பல உதாரணத் தலைவர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்கண்ட் ஆளுநராகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராகவும் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகவும் நியமித்து கவுரவித்தது பா.ஜ.க. தலைமை. ஆனால், தற்போது தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிலிருந்து மாற்றப்படும் அண்ணாமலைக்கு உயர் பதவி எதுவும் வழங்கப்பட வாய்ப்பில்லை. ஏன் தெரியுமா?
’தமிழக பா.ஜ.க. தலைவர் மாற்றப்படலாம்’ என்னும் தகவல் சொல்லப்படுகிறது. அந்த இடத்துக்கு யார் வருவார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, தற்போதைய தலைவர் அண்ணாமலை மாற்றத்துக்கு வித்திட்ட காரணங்கள் என்ன?
நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை ’விக்கட் விழும்’ எனக் கடுமையாக விமர்சித்ததால் கூட்டணியிலிருந்து வெளியேறியது அ.தி.மு.க. கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தியது பா.ஜ.க. தேசிய தலைமை வரை அ.தி.மு.க.வை அணுகியதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியை முறித்து தனித்து தேர்தலைச் சந்தித்தது.
தேர்தல் முடிவு இரு கட்சிகளுக்கும் பின்னடைவைத் தந்ததையடுத்து, தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க.வின் முக்கியத் தலைவரான வேலுமணி ‘பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்’ எனக் கருத்துத் தெரிவித்தார். ஆனால் அந்தக் ‘கூட்டணி ஏற்படாமல் இருக்கக் காரணம் அண்ணாமலையின் தகுதியற்ற பேச்சுதான்’ என்றும் வெளிப்படையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் தனித்து தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க. சில இடங்களில் இரண்டாம் இடம் பிடித்தது. ஆனால் வாக்கு சதவீதமும் அதிகரித்ததாகவும் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்திருப்பதாகவும் அவருடைய விசுவாசிகள் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்தனர். ஆனால், கூட்டணி வைத்திருந்தால் சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற குரல்கள் பா.ஜ. கட்சிக்குள் ஒலிக்கத் தொடங்கியது. தவிர, இதற்கு முன்பும் நல்ல வாக்கு சதவீதத்தைப் பா.ஜ.க. தமிழகத்தில் பெற்றதாகவும். தற்போது அந்த அளவு எட்டப்படவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. அதை பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே கூறியும் இருந்தார். இருந்தும் அண்ணாமலை தரப்பினர் பா.ஜ.க. தமிழகத்தில் தோற்றாலும் அதிக வாக்கு சதவீதம் பெற்று வளர்ந்துள்ளதாகத் தொடர்ந்து பேசி, ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கின்றனர்.
உண்மையில் பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்துள்ளதா?
பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில் நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் குறித்து உட்கட்சி அளவில் கூட விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பிட்ட சில தலைவர்களின் ஆதரவாளர்கள் பா.ஜ.க. பெரும் வளர்ச்சியை அடைந்திருப்பதாகச் சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், உண்மையில் இதற்கு முன்பு இந்த அளவுக்கு வாக்கு சதவீதத்தைப் பா.ஜ.க. தமிழகத்தில் பெற்றிருக்கிறது. ஆகவே, இப்போதுதான் வளர்ந்திருப்பதான பிம்பத்தைப் பா.ஜ.க.வின் ஒரு தரப்பினர் ஏற்படுத்த முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்பதை 2014 – 2024 வரையிலான தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு நோக்கலாம்.
2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க. தனித்து தேர்தலைச் சந்தித்தது. பா.ஜ.க… தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., ஐ.ஜே.கே., கொ.ம.தே.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. அதில், பா.ஜ.க., 8 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ஜ.க. கூட்டணி 18.80% வாக்குகளைப் பெற்றது. அதில், 8 தொகுதிகளில் போட்டியிட்டு 5.56% வாக்குகளைப் பெற்று ஒரு தொகுதியையும் கைப்பற்றியது பா.ஜ.க. அதாவது 20% இடங்களில் போட்டியிட்டு 5.56% வாக்குகள் பெற்றது.
அதன்பின், 2019ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து, 40ல் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 3.62% வாக்குகளைப் பெற்றது. ஆனால், வெறும் 5 தொகுதிகளில் அதாவது 12.5% இடங்களில் போட்டியிட்டு 3.62% வாக்குகளைப் பெற்றது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
இப்படி 2014–19 இடையேயான 5 ஆண்டுகளில் பா.ஜ.க. வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. அதன்பின், நடைப்பெற்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டு 2.6% வாக்குகளைப் பெற்றது. குறிப்பாக, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 8.5% இடங்களில் மட்டும் போட்டியிட்டு 2.6% சதவீதத்தை பெற்றது.
2024 மக்களவைத் தேர்தல்
இதில் பா.ஜ.க… பா.ம.க. மற்றும் பிற கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் 19 பேரும், பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் 4 பேரும் என மொத்தமாக 23 பேர் பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிட்டனர். அதில் 11.24% வாக்குகள் பெற்றது பா.ஜ.க.
இதில், பா.ஜ.க.வின் மிக முக்கியமான ஒரு வியூகம் கூட்டணிக் கட்சியைச் சார்ந்த சிலரது பெயரை தங்கள் கட்சியின் லெட்டர் பேடில் அறிவித்தது தான்.
குறிப்பாக பா.ஜ.க. கூட்டணியில் களமிறங்கிய இந்திய ஜனநாயகக் கட்சி (பாரிவேந்தர்), இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (தேவநாதன் யாதவ்), புதிய நீதிக் கட்சி (ஏ.சி.சண்முகம்) , தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (ஜான் பாண்டியன்) எனப் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்டவர்களைத் தங்கள் கட்சியினர் என்னும் அடிப்படையில் பெயரை வெளியிட்டு, தங்களது சின்னத்தில் களமிறக்கியது.
இவர்கள் நால்வர் போட்டியிட்ட தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு தனித்த செல்வாக்கு பெரிய அளவில் இல்லை. வேட்பாளர்கள் தங்களது சொந்த செல்வாக்கால் தான் வாக்குகளை பெற்றனர்.
பாரிவேந்தர், பெரம்பலூர்- 1,61,866
ஜான் பாண்டியன், தென்காசி – 2,08,825
தேவநாதன் யாதவ், சிவகங்கை – 1,95,788
ஏ.சி.சண்முகம், வேலூர் – 3,52,990
இந்த 4 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாங்கிய வாக்கு சதவீதம் 2.11%.
எனவே, தமிழகத்தில் பா.ஜ.க., பெற்றதாகக் கூறும் 11.24 சதவீதத்தில் 2.11 சதவீதத்தைக் கழித்தால் 9.13 சதவீத வாக்குகளை மட்டுமே பா.ஜ.க. பெற்றுள்ளது.
(அதுமட்டுமின்றி, இதில் சமத்துவ மக்கள் கட்சியைக் கலைத்துவிட்டு சரத்குமார் பா.ஜ.க.வில் இணைந்தார். அவரது மனைவி ராதிகா விருதுநகரில் களமிறங்கி மூன்றாமிடம் பிடித்தார். அவர் வாங்கிய வாக்கு 1,66,271. இது 0.3 % வாக்கு சதவீதம். )
2024ல் 19 இடங்களில் அதாவது 47.5% இடங்களில் போட்ட பா.ஜ.க. வெறும் 9% வாக்குகளை மட்டுமே பெற்றது. இது முன்பு பா.ஜ.க. பெற்ற வாக்கு சதவீதத்தை ஒப்பிடும்போது இப்போது பெற்றது குறைவுதான். ஆகவே, பா.ஜ.க.வில் ஒரு தரப்பினர் சொல்வது தமிழகத்தில் பா.ஜ.க. பெரிய வாக்கு சதவீதத்தைப் பெறவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிவிக்கிறது.
இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமெனில்,
- பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் 2014-ல் 8 இடங்களில் (20%) 5.56% வாக்கு சதவீதம் ( 1 தொகுதி வெற்றி)
- தமிழிசை சௌந்தரராஜன் தலைமையிலான பாஜக 2019-ல் நடந்த தேர்தலில் 5 இடங்களில்(12.5%) 3.62% வாக்கு சதவீதம்.
- அண்ணாமலை தலைமையில் 2024-ல் 19 இடங்களில் (47.5%) 9.13% வாக்கு சதவீதம்.
எனவே, இதிலிருந்து அண்ணாமலை ஆதரவாளர்கள் காட்டிய படம் ‘ஃபிளாப்’ என்பது தெளிவாகியுள்ளது. தோல்வியைத் தழுவியவராக இருந்தாலும் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டால் அவர்களுக்கு உயர் பதவிகளைத் தான் தேசிய பா.ஜ.க. வழங்கும். அதற்குப் பல உதாரணத் தலைவர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்கண்ட் ஆளுநராகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராகவும் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகவும் நியமித்து கவுரவித்தது பா.ஜ.க. தலைமை. ஆனால், தற்போது தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிலிருந்து மாற்றப்படும் அண்ணாமலைக்கு உயர் பதவி எதுவும் வழங்கப்பட வாய்ப்பில்லை. இதற்கு காரணம் மற்ற தலைவர்கள் எல்லோரும் கட்சியைத் தமிழகத்தில் வளர்ப்பதற்காக, கட்சியின் முகமாகச் செயல்பட்டனர். ஆனால், அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி மட்டுமே தமிழகத்தில் அரசியல் செய்திருக்கிறார். அதற்கு இடையூறாக இருந்தவர்களை, தலைமைப் பொறுப்புக்கு வந்த சில மாதங்களிலேயே கட்சியிலிருந்து ஓரங்கட்டினார். அவரினூடாகவே பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் அறிமுகம் கிடைப்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயன்றார். இதற்காக, தன் வார் ரூமை வைத்தே பிற பா.ஜ.க. தலைவர்களை மோசமாக விமர்சிப்பது போன்ற செயல்களை அவர் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை பா.ஜ.க. ஐ.டி.விங்கை எச்சரித்தார்.
இருந்தும், தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சி பெற்றதாகவும்; தனித்துத் தேர்தலைச் சந்தித்து அதிக வாக்குகள் பெற்று வாக்கு வங்கியை உயர்த்தியதாகவும் அதற்கு அண்ணாமலையே காரணம் என்றும் அவரது ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் ராக்கெட் விட்டு வருகின்றனர். போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் அண்ணாமலையின் செயல் பிற தலைவர்களை எரிச்சலூட்டி உள்ளது. குறிப்பாக, ‘முன்னாள் பா.ஜ.க. தலைவர்கள் அவர் மட்டும்தான் கட்சியை வளர்த்தாரா? நாங்க தலைவராக இருந்தபோது என்ன செய்தோம்’ எனப் பொங்கி வருகின்றனர்.
இந்தத் தகவல் எல்லாம் பா.ஜ.க. தலைமையின் காதுகளுக்கு எட்டியுள்ளது. பொதுவாக, ஒவ்வொரு கட்சியிலும் தேர்தலுக்குப் பின் வெற்றி, தோல்வி குறித்து அறிக்கை பெறுவர். தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வி, வளர்ச்சி நிலை ஆகியவற்றை முழுமையாக அறிக்கையாகத் தயாரித்து தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுதவிர, முக்கியமான தலைவர்களிடம் அண்ணாமலையில் தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை பெறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகே அண்ணாமலை சொன்னது எல்லாம் வெற்று வாதம் எனத் தலைமை உணர்ந்து அவரைப் பதவியிலிருந்து கழற்றிவிட முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அண்ணாமலையின் குட்டு வெளிப்பட்டதால் மாற்றுப் பதவிகள் தராமல், தமிழக அரசியலில் மட்டுமின்றி பா.ஜ.க.வில் இருந்தே விரட்டி அடிக்கத் திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க. தேசியத் தலைமை.
‘அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்குப் பதிலாகத் தன்னை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ததும், பொய்த் தகவல்களைத் தலைமைக்கு அனுப்பியதும் தான் காரணம்’ எனும் பேச்சுக்கள் கமலாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது!