இந்துத்துவ தலைவரா ஜெயலலிதா?அதிமுக தீவிர எதிர்ப்பின் பின்னணி என்ன?
ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் என பாஜக தெரிவிக்க, அதற்கு தீவிரமான எதிர்ப்பை அதிமுக பதிவு செய்து வருகிறது. உண்மையில் கொண்டுவந்த திட்டம் எது ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் என சொல்ல வைத்தது. அதை அதிமுக உறுதியாக மறுக்கும் பின்னணி குறித்து பார்க்கலாம்.
தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “ ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் என்னும் கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் விட்டுச் சென்ற இடத்தைப் பாஜக நிரப்பி வருவதாகவும் பேசியுள்ளார். அதற்கு ஜெயலலிதா மத மாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டுவந்ததைப் பற்றியும் குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையானது.
இதற்கு அதிமுக தலைவர்கள் பலர் கண்டனத்தைப் பதிவு செய்தனர். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்புகிறார். இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது” என்று கூறினார்.
இந்த நிலையில் அண்ணாமலை உண்மையைத் தான் பேசியுள்ளார் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ என் எஸ் பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “ராமர் கோயில், பொதுசிவில் சட்டம், மதமாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் பாஜகவின் கருத்தையே ஜெயலலிதாவும் கொண்டிருந்தார். முதல்வர்கள் மாநாட்டிலும் அதை பதிவு செய்யஅவர் தயங்கியதில்லை. ஜெயலலிதாவால் தனது இந்துத்துவ கொள்கைகளை செயல்படுத்த முடியாமல் போனது. அதற்காக அவர் இந்துத்துவ தலைவர் இல்லை என்றாகி விடுமா?
2011-ல் ஆட்சிக்கு வந்த உடனேயே தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை 1-ம் தேதிக்குமாற்றினார். குஜராத் கலவரத்துக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் பொய்பிரச்சாரத்தால் கடும் எதிர்ப்பு எழுந்தபோதும் நரேந்திர மோடி முதல்வராக பதவியேற்ற விழாவுக்கு மூன்று முறை நேரில் சென்று வாழ்த்தினார்.
ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் என்பதால்தான் இந்துக்களின் எதிரியான திமுகவை கடைசிவரை ஜென்ம விரோதியாகவே பார்த்தவர். எனவே, அண்ணாமலை உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்” என அறிக்கையில் கூறியுள்ளார்.தொடர்ந்து ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்தான் என்றும் அவர் விட்டுச் சென்ற கொள்கையைத் தமிழகத்தில் பாஜக கையிலெடுத்திருப்பதாக அண்ணாமலை கூறினார். ஆனால், இந்தக் கருத்தை முற்றிலுமாக அதிமுக மறுத்து வருகிறது.

உண்மையில் ஜெயலலிதா இந்துத்துவ தலைவரா?
சினிமா துறையிலிருந்து அரசியல் துறைக்கு, குறிப்பாக அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா , தன்னை எப்போதும் கடவுள் மறுப்பாளராகக் காட்டி கொண்டதில்லை. . குறிப்பாக, அண்ணா குறிப்பிட்ட ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” வாக்கியத்தைச் சொல்லி எப்போதும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவராகத் தான் இருந்திருக்கிறார் . அவர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலும் கொண்டுவந்த திட்டங்கள் இந்துத்துவ கொள்கையின் சாரம் என எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
குறிப்பாக, பாபர் மசூதி இடிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு அத்வானி தமிழகத்துக்கு வந்தபோது ’பாஜக-அதிமுக’ இடையே நல்லுறவு இருப்பதாக தெரிவித்தார்.
அதேபோல், பத்திரிக்கைக்குப் பேட்டியளித்த ஜெயலலிதா “இந்தியாவில் ராமருக்கு கோவில் கட்டவில்லை என்றால் வேறு எங்கு கட்டுவது” எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல், 2002-ம் ஆண்டு கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். மேலும், கோவில் திருவிழாக்களில் விலங்கு, பறவை வெட்டுவதற்குத் தடை கொண்டுவந்தார். இந்த இரு தடைகளுக்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், 2004-ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக. – பாஜக. கூட்டணி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதனால், அதனை திரும்பப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, இதனை முன்வைத்துதான் பாஜக ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் என சொல்கிறது பாஜக. ’ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோவில் திறப்பிற்கு முதல் நபராக சென்றிருப்பார் ’என அண்ணாமலை சொல்வதும் இதன் பின்னணியில் தான்.
அதிமுகவின் வாதம் என்ன?
இந்தியா அளவில் தமிழகத்தில் மட்டும்தான் 69% இடஒதுக்கீடு இருக்கிறது. அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சட்டப்போராட்டம் நடத்தி 69% இடஒதுக்கீட்டை உறுதி செய்தவர் ஜெயலலிதா. இஸ்லாமியர்கள், கிறுத்துவர்கள் என பல மதத்தினருக்கும் திட்டங்களை வழங்கியவர் ஜெயலலிதா என அதிமுக விளக்கமளிக்கிறது. அதனால், அவரின் தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக மாற்ற முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டை அதிமுக முன்வைக்கிறது.
ஆனால், பாஜக அரசே வியக்கும் வகையில் இந்துத்துவ கொள்கைகளை உயர்த்தி பிடிக்கும் திட்டங்களை ஜெயலலிதா கொண்டுவந்திருக்கிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருதில்லை. பின்னர் எதிர்ப்பு எழவே, அதனை கைவிட்டார். குறிப்பாக தமிழகத்தில் சமத்துவம் பேசிய திமுக மீது இந்து மதத்துக்கே எதிரான கட்சி என்னும் விமர்சனம் வைக்கப்பட்டது. அதனால், அதற்கு எதிரான ஒரு அரசியலை முன்னெடுத்தார் ஜெயலலிதா. ஆனால், தீவிரமான இந்துத்துவ அரசியல் எடுபடாது என்னும் நோக்கத்தில் அத்திட்டத்திலிருந்தும் பின்வாங்கினார்.
இந்த இடத்தில் , பாஜக முன்வைக்கும் கேள்வியை நினைவு கொள்ளலாம். அவர் அந்தத் திட்டங்களைத் திரும்பப் பெற்றதால் மட்டுமே அவர் இந்துத்துவ தலைவர் இல்லை என்று சொல்ல முடியுமா? எனப் பாஜக கேள்வியை முன்வைக்கிறது. தவிர, ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் என்பதைக் குறிப்பிடும் பின்னணியில் அவர்கள் எப்போதும் முன்வைக்கும் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதை மறைமுகமாகப் பாஜக நிலைநிறுத்த முயல்வதையும் கவனிக்க வேண்டும்.
அதனடிப்படையில் ஜெயலலிதா இந்துத்துவ கொள்கை அடிப்படையில் திட்டங்களை முன்வைத்த நிலையில், அவரை இந்துத்துவ தலைவர் எனப் பாஜக சொல்வதற்கு அதிமுக கடுமையான விமர்சனததை முன்வைப்பது ஏன் ?
பாஜகவுடன் கடந்த 2019 மக்களவைத் தேர்தல் 2021 ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து பெரும் பின்னடைவை சந்தித்தது அதிமுக. அதனால், சிறுபான்மை வாக்குகள் கைவிட்டு போனது. குறிப்பாக, பாஜக மத அரசியல் செய்வதாக எதிர்க்கட்சியினர் வைத்த குற்றச்சாட்டால் அதிமுகவுக்கு சேதாரம் அதிகமானது. அதிலிருந்து மீண்டுவர பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு தேர்தலைச் சந்தித்தது.
ஆகவே, அதிமுகவின் முக்கியமான தலைவர் ஒருவரை ‘இந்துத்துவ தலைவர்’ என பாஜக சொல்வது அதிமுகவுக்கு மேலும் சிக்கலை உண்டாக்கும். ஆகவே, இதனால் பலமான அடிவிழுந்துவிடுமோ என அதிமுக கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது. இதனால் அண்ணாமலை கருத்து அதிமுக மத்தியில் கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.